சென்னை: சுகாதார துறையில் பணியாற்றியவர்களுக்கு முன்தேதியிட்டு சுகாதார ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் 2011ம் ஆண்டு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போதுமான அவகாசம் வழங்கியும் உத்தரவை அமல்படுத்தவில்லை என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், தகுதியான 132 பேரில் 10 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 122 பேருக்கு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக எட்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்று வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், எட்டு வாரங்களில் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மனுதாரர்களின் மன உளைச்சல், பாதிப்புகளை கருத்தில் கொண்டு 122 மனுதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வீதம் 1லட்சத்து 22ஆயிரம் ரூபாயை வழக்குச் செலவாக இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.