சென்னை: தமிழ்நாடு சுகாதார நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 28 தேதி முதல் எளிதில் கெட்டு போகக்கூடிய உணவு வகைகளான ஷவர்மா, இறைச்சி வகைகள் மற்றும் சட்னி, மோர் மற்றும் தயிர் ஆகிய உணவுகளின் தரம் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் 15,236 உணவகங்களை ஆய்வு செய்து, 1,572 உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 5018 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் ரூ.8,79,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய சுகாதாரமில்லாமலும், தரம் குறைவான உணவு பொருட்களை வைத்திருந்த 23 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேங்காய் சட்னி , தயிர் ஆகிய உணவு பொருட்களின் தரம் குறித்தும் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 7,760 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 238 கடைகளில் தரம் குறைவாக இருந்ததால்,213 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,47,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10,26,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்களை செயலி வாயிலாகவும், 9444042322 எண்ணிற்கு வாட்ஸ்அப் வாயிலாகவும், பதிவு செய்யலாம்.
* 1,616 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: செப்டம்பர் மாதம் 26ம் தேதி தேனி மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டு அவரது உறுப்புகள் தானமாகப் பெறப்பட்ட 43 வயது நபர் மரணத்திற்கு பின் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து உறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. இதையடுத்து இறந்தவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் தானாகவே முன்வந்து உறவினர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி வருகின்றனர். தற்போது 10 நாளில் மட்டும் 1,616 நபர்கள் உறுப்புகள் தானம் செய்ய உறுதியெடுத்து பதிவு செய்துள்ளனர் என்றார்.