ஒவ்வொரு நாட்டிலும் உணவு முறைகள் மாறுபடுகின்றன. இந்தியாவில் கூட மாநிலத்துக்கு ஒரு உணவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை தாண்டி சுவை மாறுபாடு என்பதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் சமயத்தில் நமக்கே எமனாக மாறி விடுகின்றன. கேரளாவில் கடந்தாண்டு பிளஸ் 2 மாணவி ஷவர்மா சாப்பிட்டதில் உயிரிழந்தார். அவருடன் சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மாணவிகளும் மயக்கமடைந்து ஆபத்தான கட்டத்தை கடந்து உயிர் பிழைத்தனர். இதே சம்பவம் தற்போது நாகர்கோவிலிலும் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவருடன் ஷவர்மா சாப்பிட்ட குடும்பத்தினர், அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட சிலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நம் நாட்டுக்கு துளியும் பொருந்தாத ஷவர்மா, பீட்சா பர்கர் ேபான்ற துரித உணவுகளை, இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பி உண்கின்றனர். இதை முறையாக செய்ய தெரியாமல், ஏனோ தானோவென சில ஓட்டல்களில் செய்து தருகின்றனர். இவையே உடல் நலத்தை பாதிக்கச் செய்கின்றன. வர்மாவின் தாய் வீடு லெபனான். வளைகுடா நாடுகளில் மிகவும் பிரபலம். அங்கு சுற்றுலா செல்பவர்கள், பணி நிமித்தமாக செல்பவர்களின் விருப்பமான உணவு பட்டியலில் ஷவர்மாவும் இடம் பிடித்தது.
பின் ஐரோப்பா நாடுகளை வலம் வந்தது. படிப்படியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஊடுருவியது. இந்த ஷவர்மாவை பொறுத்தவரை கிடைத்த இறைச்சியை வைத்து செய்வது வழக்கம். கேரளாவில் ஷவர்மா, மாட்டிறைச்சி, சிக்கன் வைத்து செய்யப்பட்டது. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் சிக்கனை கொண்டு செய்யப்படுகிறது. இறைச்சியை நன்கு குளிர வைத்து, பின்னர் அதிக சூட்டில், சில வகை காய்கறிகளுடன் வேக வைக்க வேண்டும். சரியான அளவில் வேகாவிட்டால் நம் உடல் வெந்து விடும். அதாவது, ‘கிளாஸ்ட்ரியம்’ என்ற பாக்டீரியா உருவாகி, உடல் உபாதையை உருவாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய தலைமுறை விரும்பி உண்ணும் பிராய்லர் சிக்கன் வந்த பிறகு, மிக இளம் வயதிலேயே சிறுமிகள் பூப்படைந்து விடுவதாகவும், வயிறு சம்பந்தமான பிரச்னைகளில் சிக்கி தவிப்பதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 2 ஆண்டுகளில் மழையளவு வெகுவாக குறைந்து வருகிறது. பருவமழை பொய்த்த நிலையில், மதுரை உள்பட பல மாவட்டங்களில், கடந்த 7, 8 மாதங்களாக வெயில் 100 – 108 டிகிரி வரை கொளுத்தி எடுக்கிறது. எனவே, பருவநிலைக்கு தகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது.
உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவலுக்கு சீனாவின் வூகான் நகரில் உள்ள விலங்கு சந்தையும் ஒரு காரணம்; வவ்வால், குரங்கு உள்ளிட்டவைகளில் இருந்து பரவிய வைரஸே உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. 2, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கேரளாவை நிபா வைரஸ் தாக்கி வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாயினர். இந்த வைரசும் விலங்கில் இருந்தே பரவியதாக கூறப்படுகிறது. எனவே, உணவு பழக்க வழக்கங்களில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பார்கள். அதுபோல, நல்ல உடல் நலன் இருந்தால், வாழ்க்கையில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும். துரித உணவுகளை தேர்ந்தெடுத்து, வாழ்க்கையை துரிதமாக்கி முடித்துக் கொள்ள வேண்டாம். நம் கலாச்சாரத்தை மீறிய உணவுகளை தவிர்ப்போம். உடல் நலன் காப்போம்.