Friday, December 1, 2023
Home » ஆரோக்கியம் அளிக்கும் வீட்டுச்செடிகள்!

ஆரோக்கியம் அளிக்கும் வீட்டுச்செடிகள்!

by Porselvi

சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் வாழும் மக்களில் முப்பது சதவிகித மக்களுக்கு ஆஸ்துமா, வீஸிங் பிரச்னைகள் உள்ளன என்பது ஈ.என்.டி மருத்து வர்களின் கருத்து. ‘நச்சுப்புகை, உடலைப் பதம் பார்க்கும் மாசு எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என சூழலியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். ‘‘சுவாசிக்க சுத்தமான காற்று வேணும்னா தண்ணீரைப்போல காசு கொடுத்து ஆக்சி ஜனையும் வாங்க வேண்டும் . இல்லை கிராமத்துக்குத்தான் போகணும்.!’’ என நாம் வருந்துவோம். ஆனால், மரங்களுக்கு இணையாக ஆக்ஸிஜனைத் தரும் செடிகொடிகள் என பல வகைகள் உள்ளன. எல்லா சீதோஷ்ண நிலையிலும் வாழும் இந்தச் செடிகளை இயற்கை தந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எனக் கூறலாம். நமது பெட்ரூம், சமையலறை, பால்கனி என்று எங்கு வேண்டுமானாலும் இவற்றை வளர்க்கலாம்.

கோல்டன் போதோஸ்
(Golden Pothos)

நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச்செய்யும். வீடு, அலுவலகம், ரயில் நிலையம், கல்லூரி என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கலாம்.

வெள்ளால் (Weeping Fig)

காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும். சிலிண்டரில் இருந்து லீக் ஆகும் கேஸ், கழிவுப் பொருளிலிருந்தும் அழுக்குத் துணிகளிலிருந்தும் வரும் கெட்ட வாயுக்களை இது கிரகித்துக்கொள்ளும். சமையலறை குளியலறை, மற்றும் டாய்லெட் போன்ற இடங்களில் இந்தச் செடியை வைக்கலாம்.

சக்குலென்ட்ஸ் (Succulents)

பேச்சலர்கள் படுக்கை அறையில் வைக்க சிறந்த செடி சக்குலென்ட்ஸ். சிறிய அளவிலான தூசி, சிகரெட் புகை போன்றவற்றை முடிந்தளவு கிரகித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதே போல இதை பராமரிப்பது சுலபம். கற்றாழை போல அனைத்து சூழலிலும் வளரக்கூடியது. காற்றில் இருந்தே தனக்கான நீரை எடுத்துக்கொள்ளும்.

ஸ்னேக் பிளான்ட் (Snake plant)

இது நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைட் போன்ற நச்சு வாயுக்களை கிரகித்து ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும். நாம் பயன்படுத்தும் ஷாம்பு, சோப்பு போன்றவற்றில் ஃபார்மால்டிஹைட் இருந்தாலும் பெயின்ட், நெயில் பாலிஷ் போன்றவற்றில் சற்று அதிகமாகவே உள்ளது. இது கண் பார்வைக் கோளாறு, தலைவலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆக, புதிதாக வண்ணம் பூசிய வீடுகளில் பெட் ரூமில் இந்தச் செடியை வளர்ப்பது நமது ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு.

ஆர்ச்சிட்ஸ் (Orchids)

மூலிகைத் தாவரம், துளசி, புதினா போன்றவற்றை சுவாசித்தல் ஒருவித புத்துணர்வு கிடைக்கும் அதற்கு இணையானது ஆர்ச்சிட்ஸ் தாவரம். நல்ல தூக்கத்தையும் உடல் ஓய்வையும் தரும். உடலை நீண்ட நேரம் உற்சாகமாக வைக்க செய்யும், உடலில் ஏற்பட்ட சிராய்ப்பு, கீறல் போன்றவற்றை ஆற்றக்கூடிய வாயுவை வெளிப்படுத்தும் இன்ஃபெக்சனை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டுகிறது. சுவாசிக்க ஆகச்சிறந்த காற்றை தருகிறது. பள்ளி கல்லூரிகளில் அதிகம் வைக்கின்றனர்.

சீமை ஆல் (Rubber plant)

வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மை கொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்ஸிஜனை வெளியிடும். கற்றாழையின் அருகில் இந்தச் செடியை வைப்பது சிறப்பு. இரண்டும் கூட்டணி அமைத்து காற்றை சுத்தப்படுத்தும் வேலையை செய்யும்.

கற்றாழை (AloeVera)

மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, கிராமங்களில்அனைத்து வீடுகளிலும் நிச்சயம் இருக்கும். காடு, மேடு என எங்கும் பார்க்கலாம் ஆனால் நகரங்களில் கட்டாயம் தேவை. ‘ஸ்னேக் பிளான்ட்’காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வழங்குகிறது என்றால், கற்றாழை ஃபார்மால்டிஹைடை முழுதாகக் கிரகித்துக் கொள்ளும். மற்றும் முடி உதிர்தல், தீப்புண் போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்படும். மலைப்பனை (Bamboo Palm)காற்றில் கலந்துள்ள நச்சுக்களை நீக்கும். அழுகிய காய்கறிகளிலிருந்து வரும் துர்வாடையை மட்டுமல்ல, பிளாஸ்டிக்கை எரிப்பதால் வரும் நச்சுக்களையும் இது கிரகித்துக்கொள்ளும். அறையில் இயற்கையான ஈரப்பதத்தை எப்போதும் நிலவச் செய்யும். வீட்டுச் சமையலறை, அலுவலகம், பலர் ஒன்று கூடும் ஆடிட்டோரியம் போன்றவற்றில் இதை வைப்பது நல்லது.

பீஸ் லில்லி (Peace Lilies)

எல்லா இடங்களிலும் வளர்க்கக்கூடிய, அனைத்து சீதோஷ்ண நிலையையும் தாங்கும். பூஞ்சைகள், பாசான், காற்றின் நச்சு போன்றவைகளால் உண்டாகும் மாசு பூஞ்சைக் காளான் உருவாகாமல் தடுக்கும். குளியலறை, பால்கனி போன்ற பகுதிகளில் வளர்க்கலாம்.

லாவண்டர் (Lavender plants)

பராமரிப்பது சிரமம். முறையாக பாதுகாத்தால் நல்ல பலனை தரும். மேற்கத்திய உணவுகளில் நம்ம ஊர் புதினா, கொத்தமல்லி போல முக்கியமான வாசனைச் செடி. இந்த செடியின் அருகில் சில நிமிடம் அமர்ந்தாலே உற்சாகத்தை தரும். நன்றாக காய்ந்த எலுமிச்சை தோட்டத்தில் கிடைக்கும் சுவாசப்பரிஷத்தை உண்டாக்கும். நோய்களை குணப்படுத்தும், நல்லதூக்கத்தைத் தரும்.

வீட்டில் செடிகளை வளர்க்க சில ஆலோசனைகள்

நாம் எல்லோரும் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளர்க்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் நாம் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்துக் கொண்டு நமக்கு சுவாசிக்க ஆக்சிஜனைத் தருகின்றன. இதனால் நம் மனதும் வீடும் தூய்மையாக இருக்கும்.
செடிகளை தொட்டியுடன் வாங்கி அப்படியே வளர்க்காமல் செடியை தனியாக எடுத்து பெரிய தொட்டியில் மாற்ற வேண்டும். அதற்கு முன் தொட்டியில் முதலில் செம்மண், நடுவில் கரிசல் மண், கடைசியில் ஆற்றுமண் அல்லது செம்மண் சேர்க்க வேண்டும்.
செடிகளுக்கு தினமும் காலை, மாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீரை வெயில் வருவதற்கு முன்பு ஊற்ற வேண்டும். ஏனெனில், சூரியஒளி வந்தவுடன் செடிகள் வளர்வதற்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி பண்ணும். அதனால் வெயிலில் நீர் ஊற்றினால் செடி வளர்வது தடுக்கப்படும்.
வாரம் ஒரு முறை செடிகளில் சில இலைகள் மஞ்சள்நிறத்தில் இருக்கும். அதை மட்டும் பறித்து கீழே போடாமல் காலியாக உள்ள தொட்டியில் சேகரியுங்கள். அது நாளடைவில் இயற்கை உரமாக மாறிவிடும். அதை நாம் செடிகளுக்கு போடலாம். அது மட்டுமல்லாது காய்கறிக் கழிவுகள், வெங்காயத்தோல், முட்டைக்கூடு போன்றவற்றையும் உரமாக பயன்படுத்தலாம்.
நாம் செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை அடிப்பதற்கு பதிலாக காய்ந்த வேப்பிலை இலைகளை போடலாம். இதனால் நமக்கும் பாதிப்பு வராது. இதை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
வாரம் ஒரு முறை செடிகளின் மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். இப்படி தெளித்தால் செடிகளில் படிந்திருக்கும் அழுக்கு போய்விடும். அழுக்கு போய்விட்டால் சுத்தமான காற்று நமக்கு கிடைக்கும்.
வாரம் ஒரு முறை மண்புழு உரம் போட்டு மண்ணை சின்ன கரண்டியால் கிளறிவிட வேண்டும். அப்போதுதான் செடி நன்கு வளரும்.
மாதம் ஒரு முறை தேவையில்லாமல் வளரும் கிளைகளை வெட்டி விடுங்கள். அப்போதுதான் செடிகள் மறுபடியும் வளர்ந்து பூக்கள் நிறைய பூக்கும்.

காற்றுமாசுகளை உறிஞ்சும் செடி

தாவரங்கள் காற்று மாசுகளை உறிஞ்சும் என்பது நாம் அறிந்ததே. அதிக அளவில் காற்றை சுத்தப்படுத்துவதற்காகவே செயற்கையாக மரபணு மாற்றத்துடன் Pothos Ivy என்ற தாவரத்தை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர். குறிப்பிட்ட புரதப்பொருளை மரபணு முறையில் நீக்கி இந்த தாவரத்தை உருவாக்கியுள்ளனர்.இந்த தாவரம் தனது வளர்ச்சிக்காக சுற்றுப்புறத்திலுள்ள கார்பனை அதிகமாக உறிஞ்சுவதுடன் குளோரோபாம், பென்சீன் போன்ற ஆபத்தான நச்சுப்பொருட்களையும் உறிஞ்சிக் கொள்கிறது. புற்றுநோயை உருவாக்கும் நச்சுப் பொருட்களான இவை வீட்டின் சுற்றுப்புறத்தில் இருப்பதை நம்மால் அறியவோ, அகற்றவோ முடியாது. ஆனால், இந்த செடி வழக்கமாக இயற்கைத் தாவரத்தைவிட அதிக அளவில் மாசுகளையும், நச்சு வாயுக்களையும் உறிஞ்சிவிடுவது குறிப்பிடத்தக்கது.

நச்சுவாயுவை உறிஞ்சும் பவுடர்

கார்பன் மாசினைக் கட்டுப்படுத்த தற்போது கார்பன்டைஆக்ஸைடு வாயுவை உறிஞ்சிக் கொள்ளும் ஒரு வகை பவுடரை கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பவுடர் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உறிஞ்சுதல், வடிகட்டுதல், பிரித்து நீக்குதல் ஆகிய மூன்று முறைகளில் அப்புறப்படுத்த உதவுகிறது. அதிகமாக மாசு விளைவிக்கும் தொழிற்சாலைகள், மின்சார நிறுவனங்களில் இந்த பவுடரை பயன்படுத்துவதன் மூலம் வெகுவாக கார்பன் மாசினைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் விஞ்ஞானி ஷாங் வெய். ஒரு முறை உறிஞ்சிய கார்பனை அது திரும்ப வெளியிடுவதில்லை என்பது அதன் நம்பகத்தன்மையை அதிகமாக்குகிறது. மேலும் இந்த பவுடர் துகள்கள் ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கைவிட சிறிதாக இருப்பதால், மிக நுட்பமான இடத்திலும் உள்ள கார்பனை உறிஞ்சி அகற்ற பயன்படுத்த முடியும். அதனுடன் இதன் பயன் முடிவதில்லை. மீண்டும் இந்த பவுடரை நீர் வடிகட்டுதல், ஆற்றல் சேமிப்புக் கருவியாக பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சங்கள். பலவிதங்களில் பயன்படும் இந்த பவுடரின் தயாரிப்பு முறையை ரகசியமாக வைத்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் இந்தத் தயாரிப்பு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?