சென்னை: சுகாதாரத்துறை அதிகாரிகள் போல் நடித்து, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மீன் கடைகளுக்கு போலி உரிமம் வழங்கி, பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலியான சான்றுகள், அரசு அதிகாரிகளுக்கான போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி, 5வது மண்டலம், 62வது கோட்டத்தில், கடைகளுக்கான உரிமம் இன்ஸ்பெக்டராக லோகநாதன் (49) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 26ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள ஒரு மீன்கடையில் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 நபர்கள், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையின் உரிமம் ஆய்வாளர், உரிமம் உதவியாளர் என அடையாள அட்டை வைத்துக் கொண்டு, ஒருவருக்கு மீன் கடைக்கான உரிமம் தருவதாக கூறி, உரிமத்திற்கான ஆவணத்தை கொடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ரூ.15,800 பெற்றுள்ளனர்.
இதை கவனித்த லோகநாதன், அவர்களிடம் சென்று, நீங்கள் யார், என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நாங்கள் மாநகராட்சி அதிகாரிகள் என கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் சம்பவம் குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறையில் விசாரித்த போது, 3 பேரும் போலியான அரசு அடையாள அட்டையை வைத்து கொண்டு ேமாசடியாக மீன் கடை உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு போலியான உரிமம் கொடுத்து வந்தது தெரியவந்து.
உடனே சம்பவம் குறித்து லோகநாதன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சிசிடிவி பதிவுகளுடன் விசாரணை நடத்திய போது, ராயபுரம் ஆஞ்சநேயர் நகர் சிதம்பரநாதன் தெருவை சேர்ந்த பால்ராஜ் (எ) ரோகித் (30), தனது கூட்டாளிகளான புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (37) மற்றும் கொருக்குப்பேட்டை தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்த பாபு (30) ஆகியோருடன் சேர்ந்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி போன்று போலி அடையாள அட்டை மற்றும் போலி உரிமம் ஆவணங்களை வைத்து மோசடி செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டை மற்றும் போலி உரிமம் வழங்கியதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.