Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுகாதார நிலையங்களில் பாம்பு, நாய் கடிக்கு போதுமான மருந்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில், எங்கு பார்த்தாலும், வசநாய், மசநாய், சொறிநாய், வெறிநாய் எல்லாம் கடிக்கிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகளின் இருப்பு இருக்கிறதா, அப்படி நாய் கடித்தால் எத்தனை மணிநேரத்திற்குள் மருந்தை உட்கொள்ள வேண்டும் ” என்றார்.

இதற்கு பதில் அளித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 2,286 இருந்தன. கிராமப்புறங்களில் அமைந்திருக்கிற மருத்துவ கட்டமைப்பு இங்குதான் அதிகமாக இருக்கிறது. இங்குள்ள இடங்களில் பாம்புகடிக்கும், நாய்கடிக்கும் மருந்துகள் இல்லாமல் இருந்தன.

பாம்புக்கடி மற்றும் நாய்கடியைப் பொறுத்தவரையில், கிராமங்கள் மற்றும் மலைவாழ் கிராம மக்கள்தான் இதனால் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்த அரசு அமைந்ததற்கு பிறகு பாம்புக்கடி மருந்தும், நாய்க்கடி மருந்தும் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, பாம்புக்கடிக்கும், நாய்க்கடிக்கும் கிராமப்புறங்களில் பயமில்லை என்ற வகையில் மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.