Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நலம் யோகம்!

நன்றி குங்குமம் தோழி

உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி...

மூச்சுப் பயிற்சி என்பது வெறுமனே மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதல்ல. நம் சுவாசத்தை முறைப்படுத்தி, நமது உடலுக்கும் மூளைக்கும் தேவையான ஆற்றலை முழுமையாய் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறையே இது.

திருமூலர் தனது திருமந்திரத்தில், மூச்சின் மூன்று முக்கிய நிலைகளை அழகாகக் குறிப்பிடுகிறார். அதாவது...

* பூரகம் (மூச்சினை உள்ளிழுத்தல்)

* ரேசகம் (மூச்சை வெளியேற்றுதல்)

* கும்பகம் (மூச்சை தக்க வைத்தல்)

இந்த மூன்றும் இணைந்ததே நம் சுவாசத்தின் அடிப்படை. மூச்சு என்பது ஒரு வகையில் நமக்கு உடலின் எரிபொருள் போன்றது. எரிபொருள் சரியாகக் கிடைத்தால்தான் வாகனம் சிறப்பாய் இயங்கும்.இதில் நுரையீரல் என்பது காற்றை எடுத்துக்கொள்ளக்கூடிய அற்புதமான உறுப்பு. ஆனால், இந்த நுரையீரலின் திறனை முழுமையாய் பயன்படுத்துகிறோமா என்பதே இதில் முக்கியம்.முறையான சுவாசம் நம் உடல் செயல்பாடுகளுக்கும், மூளையின் செயல்பாடுகளுக்கும் முக்கியமானது.

வலது பக்க நுரையீரலில் மூன்று பகுதிகள்

*Upper lobe *Middle lobe *Lower lobe என இதில் உள்ளன. அதேபோல் இதயத்திற்கு இடமளிப்பதற்காக இடது பக்கம் இரண்டு பகுதிகள் மட்டுமே *Upper lobe *Lower lobe என உள்ளன.

நமது தோற்றம் (Posture) சரியாக இல்லாதபோது, தோள்கள் முன்னோக்கிக் குவிந்து, மார்பு சுருங்கி, கூன் போன்ற நிலையில் இருக்கும்போது, நம் சுவாசம் ஆழமாகவும், முழுமையாகவும் நடைபெறாமல் போகலாம். எனவே, நமது உடல் நிலையை சரி செய்வது முதலில் முக்கியம்.மார்பு திறந்த நிலையிலும், தோள்கள் தளர்ந்து விரிந்த நிலையிலும், முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையிலும் அமரும்போதே, முறையான சுவாசத்திற்கு இடம் கிடைக்கிறது. இத்துடன் Diaphragmatic breathing அல்லது பொதுவாகக் கூறும் Abdominal breathing குறித்தும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை இயற்கையாக மூச்சு விடும்போது, மூச்சினை குழந்தை உள்ளிழுக்கும்போது, வயிறு மெதுவாய் விரியும். மூச்சை வெளியேற்றும்போது அதன் வயிறு சுருங்கும். இதுவே Diaphragm முறையில் இயங்கும் இயற்கையான சுவாச முறை.இந்த Diaphragmatic breathing மார்பு மற்றும் தோள்களின் இயல்பான விரிவுடன் இணைத்து செய்யும்போது, யோகத்தில் தீர்க்க பிராணாயாமம் என அழைக்கும் முழுமையான சுவாசத்தை பயிற்சி செய்ய முடியும். அதாவது, நமது சுவாசத்தை முறைப்படுத்தி, முழுமையாகப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்கிறோம்.

ஹஸ்த முத்திரைகளுக்கும் இதில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. சின் முத்திரை, ஞான முத்திரை, சின்மய முத்திரை போன்ற முத்திரைகளை பயன்படுத்தி சுவாசப் பயிற்சிகளைச் செய்யும் யோக மரபுகளும் இதில் உள்ளன. இவை சுவாசத்தின் உணர்வை நுட்பமாக கவனிக்கவும், சுவாசப் பயிற்சியை ஆழப்படுத்தவும் உதவுகின்றன.

நுரையீரலின் ஆழமான பகுதிகளில் உள்ள Alveoli எனப்படும் மிகச்சிறிய காற்றுப் பைகளில்தான் உண்மையான Gas exchange நடைபெறுகிறது. Alveoliயைச் சுற்றியுள்ள மிக நுண்ணிய Capillaries

வழியாக ஆக்சிஜன் ரத்தத்தில் இணைகிறது. கார்பன் டை ஆக்சைடு ரத்தத்திலிருந்து நுரையீரலுக்குள் வந்து வெளியேற்றப்படுவதே Gas exchange. முழுமையான வெளியேற்றம், சரியான Diaphragm இயக்கம், நல்ல Posture மற்றும் சீரான சுவாச முறை அனைத்தும் சேர்ந்ததே ஆரோக்கியமான சுவாசம். நாம் மூச்சை வெளியேற்றும்போது கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது. உள்ளிழுக்கும் போது ஆக்சிஜன் நுரையீரலுக்குள் வருகிறது.

இதில் நம் மூச்சை நாம் கவனிக்கத் தொடங்கும்போது, நமது உடலையும், நம்முடைய மனதையும் சேர்த்தே நாம் கவனிக்கத் தொடங்குகிறோம். மூச்சை மாற்றினால், உடலின் நிலை மாறும். மூச்சை முறைப்படுத்தினால், மனத்தின் நிலையும் மாறத் தொடங்கும்.கைகளின் முத்திரையும் நுரையீரல் இயக்கமும் நமது கை விரல்களின் பஞ்சபூத தத்துவம் அடங்கியிருப்பது யோக மரபில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஆள்காட்டி விரல் காற்றுத் தத்துவத்தையும், கட்டைவிரல் அக்னி தத்துவத்தையும் குறிப்பதாக யோக மரபு கூறுகிறது. ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் அவற்றின் நுனிகள் மென்மையாக ஒன்றை ஒன்று தொடும்படி வைத்து, மற்ற மூன்று விரல்களையும் இயல்பாக நீட்டி வைத்தல் சின்முத்திரை.

சின்முத்திரை மனதை உள்நோக்கித் திருப்பி, அமைதி, ஒருமுகத்தன்மை, விழிப்புணர்வு ஆகியவற்றை வளர்க்க உதவும். மூச்சின் மீது மனதை ஒருமுகப்படுத்தவும் உதவும். இதனால் சுவாசத்தை நிதானமாகவும் விழிப்புணர்வுடனும் கவனித்து பிராணாயாமம் செய்ய முடிகிறது. நம் கைகளின் நிலை, உள்ளங்கையின் திசை, விரல்களின் அமைப்பு ஆகியவை நம் சுவாச அனுபவத்தையும், சுவாசத்தின் இயக்கத்தையும் பாதிக்குமா என்றால், ஆம்! முத்திரைப் பயிற்சிகள் சுவாசத்தைப் பற்றிய நமது விழிப்புணர்வையும், சுவாச முறையையும் நுட்பமாக மாற்றிப் பயிற்சி  செய்ய உதவுகின்றன.சின்முத்திரையில் உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கும்பொழுது மார்பின் மேல் பகுதியில் சுவாசம் மேலோங்கி இயங்குகிறது.

இதையே க்ளாவிகுலார் பிரீத்திங் (CLAVICULAR BREATHING) என்பார்கள் கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலின் நுனிகளையும் ஒன்றாக இணைத்து, மீதமுள்ள மூன்று விரல்களையும் உள்ளங்கை நோக்கி மடக்கி வைத்திருப்பதே சின்மய முத்திரை.சின்மய முத்திரையில் பிராணாயாமம் செய்யும்போது, சுவாசத்தின் இயக்கத்தை மார்பு மற்றும் விலா எலும்பு பகுதியில் உணர்ந்து பயிற்சி செய்யலாம். மார்பு மற்றும் விலா எலும்புகள் விரிந்து சுருங்கும் இந்த சுவாச முறை Thoracic Breathing அல்லது Chest Breathing எனப்படுகிறது.

கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலின் நுனிகளையும் ஒன்றாக இணைத்து உள்ளங்கையை கீழ்நோக்கி வைத்து செய்யப்படும் முறையை சில யோக மரபுகளில் ஞான முத்திரை என்கின்றனர். இந்த நிலையில் சுவாசத்தின் கீழ்ப்பகுதி, குறிப்பாக Diaphragmatic breathing மீது கவனம் செலுத்திப் பயிற்சி செய்தல் வேண்டும்.அதாவது, நமது சுவாசத்தை வெறுமனே உள்ளே இழுத்து வெளியே விடாமல், நுரையீரலின் மேல், நடு, கீழ்ப்பகுதிகளில் சுவாச இயக்கத்தை உணர்ந்து பயிற்சி செய்வது என்கிற அழகான அணுகுமுறையும் யோகத்தில் உள்ளது. இதனால்தான் நம் முன்னோர்கள் உடல், மூச்சு, கை முத்திரை, மனம் இவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்துப் பார்த்தனர்.

தீர்க்க பிராணாயாமம் அல்லது நுரையீரலின் மூன்று பாகங்களையும் இயக்கும் இந்த மூச்சு, உடலின் தளர்வு அமைப்பைத் தூண்டி, Parasympathetic nervous system செயல்பாட்டை ஆதரிக்கிறது. இதன் வழியே Vagus nerve activity அதிகரித்து, உடலும் மனமும் அமைதியான நிலைக்குச் செல்லவும் உதவும்.இதனால் மனஅழுத்தம் குறைந்து, மன அமைதி, சிந்தனையில் தெளிவு, கவனம் மற்றும் உணர்ச்சி சமநிலை மேம்படலாம். இயற்கையான ஓய்வு மற்றும் மீட்பு செயல்முறைகளுக்கும் உடலுக்கு இது ஆதரவாக செயல்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்களும் யோகிகளும் உடலை, வெறும் உடலாகப் பார்க்காமல், மூச்சையும் உடலின் நுட்ப இயக்கங்களை கவனிக்கும் முழுமையான அறிவியலை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.நல்ல சுவாசம் என்பது அதிகமான காற்றை உள்ளே இழுப்பதல்ல. முறையான உள்ளிழுத்தல். எனவே இங்கே முத்திரைகள் வெறும் கைகளை குறிப்பிட்ட வடிவத்தில் வைத்திருப்பதல்ல. கைகளின் அமைப்பின் மூலம் நம் கவனத்தை உள்ளே திருப்பி, மூச்சை உணர்ந்து, சுவாசப் பயிற்சியை ஆழப்படுத்தும் யோகக் கருவியே இவை.

தொகுப்பு : ஆ.வின்சென்ட் பால்