Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்த மாத்திரை சாப்பிட்டா கேன்சர் வருமா

நன்றி குங்குமம் டாக்டர்

உலக சுகாதார நிறுவனத்தின் புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் (INTERNATIONAL AGENCY FOR RESEARCH ON CANCER) முக்கியமான மூன்று மருந்துகளின் மீது புதிதாக புற்று நோய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 2024, IARC அறிக்கையின் 137 வது பதிப்பில் ஹைட்ரோகுளோர்தயாசைடு (HYDROCHLORTHIAZIDE) உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முக்கியமான மாத்திரை வொரிகோனசோல் (VORICONAZOLE), பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான மருந்து டேக்ரோலிமஸ் (TACROLIMUS), உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தோருக்கு எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் சிகிச்சை.

என்ன வகையான புற்று நோய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது?

ஹைட்ரோகுளோர்தயாசைடு- இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரை. மிதமான அளவில் நீரை வெளியேற்றும் மாத்திரை. ஹைட்ரோகுளோர்தயாசைடு மாத்திரை உட்கொள்பவர்களில் தோலில் ஏற்படும் ஸ்குவாமஸ் செல் புற்று நோய்/ உதட்டு புற்று நோய் ஆகியன சற்று அதிகரித்து காணப்படுவதாக ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வுகள் செய்யப்பட்ட நாடுகள் - டென்மார்க், அமெரிக்கா. சூரிய ஒளிக்கதிர்களுக்கு அதிகமாக ஆட்படும் போது அதன் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் சருமத்தில் டிஎன்ஏ பாதிப்பு ஏற்பட்டு சருமப்புற்றுநோய் ஏற்படலாம்.

ஹைட்ரோகுளோர்தயாசைடு மாத்திரை சருமத்தை புற ஊதாக்கதிர்களின் தாக்கத்துக்கு சற்று அதிகமாக உட்படுத்துகிறது. இதன் விளைவாக டிஎன்ஏ பாதிப்புகள் அதிகமாக நடக்கின்றன என்பதே கண்டுபிடிப்பு.

வொரிகோனசோல் தீவிரப் பூஞ்சைத் தொற்றுக்கு எதிராக பயன்படும் மருந்து. குறிப்பாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வோரிகோனசோல் நீண்ட காலம் பயன்படுத்தப்படும் போது ஸ்குவாமஸ் செல் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு சற்று அதிகரிக்கிறது. இதுவும் நேரடியாக சூரிய ஒளியில் அதிக நேரம் சருமம் படுமாறு இருப்பவர்களில் டிஎன்ஏ பாதிப்பு அதிகரிக்கிறது. அதன் விளைவாக புற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

டேக்ரோலிமஸ்

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின்போது எதிர்ப்பு சக்தியை குறைக்கச் செய்யும் டேக்ரோலிமஸ் மருந்து, எதிர்ப்பு சக்தி குன்றுவதால் நான் ஹாட்ஜ்கின் லிம்போமா மற்றும் உறுப்பு மாற்றுக்குப் பின்பான புற்றுநோய் ஆகியவற்றை உண்டாக்கலாம்.

மேற்கூறிய மூன்று மருந்துகள் குறித்தும் ஐஏஆர்சி வழங்கியுள்ள இந்த எச்சரிக்கையை எவ்வாறு நாம் எடுத்துக் கொள்வது? மேற்கூறிய மாத்திரை மருந்துகளை உடனடியாக நிறுத்தி விட வேண்டுமா? இவற்றை நிறுத்த வேண்டிய தேவை இல்லை. இதற்கான காரணங்கள் பின்வருமாறு

ஐஏஆர்சி விடுக்கும் எச்சரிக்கைகளை நாம் பின்வருமாறு பார்க்க வேண்டும்

குறிப்பிட்ட சில தருணங்களில் சில பொருட்கள் புற்று நோயை உண்டாக்கும் தன்மை கொண்டது என்று மட்டுமே ஐஏஆர்சி கூறும். ஆனால் நிகழ் தகவில் சுட்டப்பட்ட பொருளினால் எவ்வளவு ஆபத்து? எவ்வளவு அதிகமாக உட்கொண்டால் ஆபத்து அதிகரிக்குமா? எது பாதுகாப்பான டோஸ்? என்றெல்லாம் ஐஏஆர்சி கூறாது.

ஐஏஆர்சி வகைப்படுத்தலில் புற்று நோய் உண்டாக்கும் காரணி - முதல் குழுவுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. IARC GROUP-1 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது அதே குழுவுக்குள் ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட பலவற்றைக்

கூறுகிறேன்

1.ஹெச்பிவி வைரஸ் - கர்ப்பப்பை வாய் புற்று நோய்

2.ஹெச். பைலோரி- இரைப்பை புற்று நோய்

3.ஹெப்படைட்டிஸ் பி - கல்லீரல்

புற்றுநோய்

4.எப்ஸ்டின்பார் வைரஸ் - லிம்போமா

5.பதப்படுத்தப்பட்ட இறைச்சி - குடல் புற்றுநோய்

6.மது - இரைப்பை / குடல் புற்று நோய்

7.சீவல் பாக்கு ( வாய்/ தொண்டை/ இரைப்பை புற்று நோய்)

8.உப்பு சேர்க்கப்பட்ட மீன் ( கருவாடு)

9.புகையிலை / புகை பிடித்தல்

10.காற்று மாசு

11.சூரிய ஒளிக்கதிர்

12.புற ஊதாக்கதிர்கள்

13.அஸ்பெஸ்டாஸ்

14.சிலிக்கா

15.பிறர் புகைப்பதை சுவாசித்தல்.

மேற்கூறிய பல விஷயங்களும் புற்று நோயை உண்டாக்கும் என்று ஐஏஆர்சியால் அடையாளம் காணப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்த மருந்துகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் எங்கு செய்யப்பட்டவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

ஹைட்ரோகுளோர்தயாசைடு குறித்த ஆய்வு - டென்மார்க் மற்றும் அமெரிக்காவில் இருந்து கிடைத்த தரவுகள் வொரிகோனசோல் குறித்த ஆய்வு - அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐப்பானில் இருந்து கிடைத்த தரவுகள்...

டாக்ரோலிமஸ் குறித்த ஆய்வு - வட அமெரிக்கா , ஐரோப்பியா, ஜப்பானில் இருந்து கிடைத்த தரவுகள்

இந்தியாவில் இருந்து தரவுகளும் இல்லை. அதனால் இந்தியாவில் இருந்து இந்த ஆய்வுகளில் எந்த டிவும் சேர்க்கப்பட வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக வெள்ளைத் தோல் கொண்டவர்களுக்கு

அவர்களது சருமத்தில் மெலனின் எனும் நிறமி குறைவாக இருக்கும். இதன் விளைவாக, சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் சருமத்தில் அதிகமாக இருக்கும். அதனால் வெள்ளைத் தோல் கொண்டோர் சூரிய ஒளிக்கு அதிகமாகவும் நீண்ட காலமும் தொடர்ந்து வெளிப்படும் போது, சருமப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு சற்று அதிகரிக்கிறது.

இந்தியா குறிப்பாக தென்னிந்தியா தமிழ்நாட்டில் அதிகமானோர் தோலில் மெலனின் நிறமி நிரம்பியோர் ஆவர். இவர்களுக்கு புற ஊதாக்கதிர்களிடம் இருந்து இந்த மெலனின் பாதுகாப்பு அளிக்கிறது.

எனவே, வெள்ளைத் தோல் கொண்ட மக்கள் தொகையிடம் செய்யப்பட்ட ஆய்வு என்பது மெலனின் நிறமி அதிகமாகக் கொண்ட தோல் கொண்ட நமக்கு எவ்வளவு பொருந்தும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் சருமப்புற்று நோய் என்பது மேற்கத்திய நாடுகளை விட ஒப்பீட்டளவில் குறைவு மேற்கத்திய நாடுகளில் (மெலனின் பற்றாக்குறை கொண்ட வெள்ளை தோல் கொண்டோர் அதிகம் வாழும் நாடுகளில்)சூரிய ஒளியின் தாக்கத்தால் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் சருமப் புற்றுநோய் அதிகம்.

இந்தியாவில் கண்டறியப்படும் சருமப்புற்றுநோய்கள்

* நாள்பட்ட தோல் அழற்சி நிலைகள் - எஸ்.எல்.ஈ, லூபஸ் வல்காரிஸ்

* தீக்காயம்/ நீண்ட கால ஆறாத புண் ஆகியவற்றில் இருந்து தோன்றுகிறது.

இந்த ஆய்வு முடிவை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?

*மேற்கூறிய மாத்திரை மருந்துகளை சிகிச்சையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது இல்லை. - எனினும் இந்த எச்சரிக்கையை நாம் கவனத்துடன் அணுகி விழிப்புணர்வு பெற வேண்டும்.

*மேற்கூறிய மருந்துகளை உட்கொள்பவர்கள் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய வேண்டியது இருப்பது அவர்களை சூரிய ஒளிக்கவச களிம்புகளை பூசச் சொல்லலாம்.

*வெள்ளைத் தோல் கொண்டோர் வெயிலில் அதிகம் பணி புரிய வேண்டிய சூழலில் இருப்பவர்கள் - இது குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். மீண்டும் கூறுகிறேன். சூரிய ஒளி அதிகமாக சருமத்தில் படுவது என்பது சருமப்புற்று நோயை உண்டாக்கும் காரணி என்று ஐஏஆர்சி கூறுகிறது எனினும் சூரிய ஒளியை நம்மால் தவிர்க்க இயலாது.

தேவைப்பட்டால், சன் ஸ்க்ரீன் தடவிக்கொண்டு வேலை செய்ய பழகிக்கொள்கிறோம் PM2.5 காற்று மாசு என்பது புற்று நோய்க்காரணி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் காற்று மாசுடன் இணைந்து வாழப் பழகி வருகிறோம். இயன்ற அளவு முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு காற்று மாசினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கிறோம்.

தற்போது கவனத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று மருந்துகளும் உலக சுகாதார நிறுவனத்தின் மாதிரி அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே அளவுகோலை இந்த மருந்துகளுக்கும் நாம் வைத்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமே அன்றி அச்சம் கொள்ள வேண்டியதில்லை

தொகுப்பு:பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா