நன்றி குங்குமம் டாக்டர்
யோகாசனம் என்ற சொல்லுக்கு ஒருங்கிணைத்தல் என்று பொருள். ஆசனம் என்றால் உடலை அமர்த்தும் நிலை. மனிதன் தனக்குள் நிறைந்து கிடக்கும் சக்தியையும் ஆற்றலையும் கண்டு கொள்ளவும்.
அந்த ஆற்றலை அடக்கியாளக் கற்றுக் கொடுப்பதுமே யோகாசனத்தின் நோக்கம் யோகாசனம், மனம், உடல், சுவாசம், ஆன்மா போன்றவற்றை சீர்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்களை வராமல் தடுக்க உதவுகின்றது. இந்த யோகாசன பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் நாம் நோய்களில் இருந்து விடுபட முடியும். சீரான மனநிலையில் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். தற்போது உலகம் முழுவதும் யோகாசனத்தின் பலன்களை உணர்ந்து அவற்றை பின்பற்றத் தொடங்கி இருக்கின்றனர். அதிலும் மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவே யோகாசனம் மாறிவிட்டது.
யோகாசனத்தின் பலன்கள்
யோகாசனம் செய்யும்போது உடலில் உறுப்புகளின் அசைவுகளினால் உடலில் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவை இயக்கம் சீராகும். பொதுவாக நல்ல உடற்பயிற்சியாக இருந்தாலும் மற்ற உடற்பயிற்சி முறைகளைப் போல் கடுமையான பயிற்சிகள் யோகாசனத்தில் இல்லை. நீண்ட தூர ஓட்டப் பயிற்சியோ, எடை தூக்கும் பயிற்சியோ யோகாசனத்தில் கிடையாது. உடலை வளைத்து செய்யக் கூடிய பயிற்சிகள் யோகாசனத்தில் உண்டு. ஆயினும் உட்கார்ந்து செய்யக்கூடிய பயிற்சிகள், படுத்தபடி செய்யக் கூடிய பயிற்சிகள் என்று எளிமையான பயிற்சிகள் நிறைய உள்ளன. இவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாதாரண உடல் நிலையில் இருக்கும் எந்தவொரு சராசரி மனிதனும் தினமும் செய்யலாம்.
குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்கும்
*சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.
*உடல் பருமனாக உள்ளவர்களில் உடலில் தேவையற்ற கொழுப்பை சேரவிடாது.
*ஆஸ்துமா, சளி, சைனஸ் போன்ற நோய்களை சரி செய்யும்.
*உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
*உடலில் தளர்ச்சியை நீக்கி சுறுசுறுப்பை தரும்.
*தேவையற்ற தலைவலியை நீக்கிவிடும்.
*இதய நோய்களை வராமல் தடுக்கும்.
*கண்பார்வை திறன் அதிகரிக்கும்.
*ஜீரண மண்டலத்தைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
யோகாசனப் பயிற்சி குறிப்புகள்
யோகாசனம் எல்லா வேளையிலும் செய்யலாம். ஆயினும் காலையிலோ அல்லது மாலையிலோ யோகாசனம் செய்வது நல்லது. அதிலும் காலையில் 7 மணிக்கு யோகாசனம் செய்வது சிறந்தது. இந்த நேரத்தில் செய்யும் யோகாசனப் பயிற்சிகளுக்கு அதிக பலன் இருக்கும். மாலையில் யோகா செய்யும்போது, கடைசியாக 12 அல்லது 1 மணி வாக்கில் உணவு
சாப்பிட்டு இருக்க வேண்டும்.
திறந்த வெளியில் யோகாசனம் செய்ய வேண்டும். வீட்டின் கதவு, ஜன்னல்களை திறந்து காற்றோட்டமான நிலையில் யோகாசனம் செய்யலாம். ஆயினும் அதிக சூரிய ஒளியின் கடும் வெப்பத்தில் யோகாசனம் செய்யக் கூடாது.பயிற்சிக்கு முன்பாக மலஜலங்களை வெளியேற்றிவிட வேண்டும். பயிற்சிகள் செய்யும்போது தாகம் ஏற்பட்டால் சிறிதளவு நீர் மட்டுமே அருந்த வேண்டும்.மாலை நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போது, உணவு நேரத்திற்கும் பயிற்சி நேரத்திற்கும் இடையே கால அவகாசம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். நீர் அருந்தி இருந்தால் 1 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.
குளித்த பிறகு யோகாசன பயிற்சி செய்யலாம். ஆனால் யோகப் பயிற்சி செய்தவுடன் குளிக்கக் கூடாது. குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இடைவெளி அவசியம். பயிற்சி செய்யும்போது உடல் தசையில் வலி ஏற்பட்டால் உடனடியாக யோக பயிற்சியை கைவிடுங்கள். மலச்சிக்கல் இருக்கும்போது கடினமான ஆசனங்கள் செய்யவே கூடாது. கண்களை மூடாமல் பயிற்சி செய்து பார்த்துவிட்டு நன்கு பழக்கம் ஏற்பட்டவுடன் கண்களை மூடி பயிற்சி செய்யலாம்.சூரியநமஸ்கார பயிற்சியைத் தவிர மற்ற யோகாசனப் பயிற்சிகளை வேகமாக செய்யக் கூடாது.
எல்லாவற்றை விட முக்கியமாக, புத்தகங்கள் படித்து யோகாசன பயிற்சி செய்யாதீர், நாம் செய்யும் நிலை சரியானதுதானா.. என்று நம்மால் பார்க்க முடியாது. சில சமயங்களில் அது ஆபத்தாகி விடவும் முடியும். புத்தகம் யோகா பற்றி நாம் தெரிந்து கொள்ளத்தான். எனவே எப்போதுமே, முறையாக யோகாசனம் கற்ற ஆசிரியரிடம் யோகா பயிற்சிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தொகுப்பு:- முரளி சர்மா


