நன்றி குங்குமம் டாக்டர்
கத்திரிக்காய் அலர்ஜி, கருவாடு அலர்ஜி, வேர்க்கடலை அலர்ஜி என ஆரம்பித்து ஒவ்வாமை பிரச்னைக்கு பல காரணங்கள் உண்டு. இந்த ஒவ்வாமையால் பின்னாளில் ஆஸ்துமா, சைன சைடிஸ், எக்ஸிமா போன்ற நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த அலர்ஜி பிரச்னை எதனால் வருகிறது? அதற்கான காரணங்கள் என்ன? தீர்வு என்ன போன்றவற்றை பார்ப்போம்.
அலர்ஜி என்றால் என்ன?
அலர்ஜி என்பது சில பொருட்கள் உடலுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் அதி உணர்திறன் நோய் எதிர்ப்பு எதிர்வினையாகும். இது பொதுவாக, சில உணவுகள், மருந்துகள், பூச்சிகள் கொட்டுதல், மகரந்தம், தூசி, செல்லப் பிராணிகள் மற்றும் வீட்டு ரசாயனங்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
அலர்ஜி வகைகள்
பெரும்பாலும் உடலில் ஒவ்வாமை எந்த உறுப்பில் பாதிப்பை உண்டாக்குகிறதோ அதைப் பொறுத்துதான் அதன் அறிகுறியும் மாறுபடும். மூக்கடைப்பு என்றால் அது சைனசைடிஸ் என்னும் அலர்ஜியைக் குறிக்கும். சருமத்தில் என்றால் அது எக்சிமா என்று அழைக்கப்படும். நுரையீரலில் பாதிப்பை உண்டாக்கும்போது அது ஆஸ்துமா என்று அழைக்கப்படுகிறது. உணவுப் பொருள் ஒவ்வாமை என்றால் ஓரல் அலர்ஜி சிண்ட்ரோம் என்று ஒவ்வொரு அலர்ஜியின் பிரச்னைகளுக்கு ஏற்ப அதன் சிகிச்சையும் மாறுபடும்.
அறிகுறிகள்
ஒவ்வாமை காரணத்தினால் உண்டாகும் அறிகுறிகள் மிதமானது முதல் கடுமையானது வரை இருக்கும்.
உணவு ஒவ்வாமை
நீங்கள் எடுத்துக் கொண்ட உணவால் ஒவ்வாமை வரும்பொழுது அது வீக்கம், படை, குமட்டல், சோர்வு என பலவற்றைத் தூண்டச் செய்யும், இது அலர்ஜி தரும் உணவு என்பதைக் கண்டறிய சிறிது நேரம் ஆகலாம்.
பருவ கால ஒவ்வாமை
இது சளி, மூக்கில் நீர் வடிதல், கண்களில் வீக்கம் போன்றவற்றை உண்டாக்கச் செய்யும். கடுமையான அலர்ஜியாக இருந்தால் அது அனாபிலாக்ஸியை உண்டாக்கும். இது ஆபத்தான நிலை. இதனால் முதலில் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திப்பார்கள். உடல் நீல நிறமாக மாறக்கூடும்.
கை, கால் குளிர்ந்திடும். தலைவலி, நினைவு இழப்பு போன்றவை உண்டாகலாம். அலர்ஜிக்கு பிறகு இந்த அறிகுறி தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
அலர்ஜியால் வரும் அறிகுறிகள் எல்லாமே வேறுபட்டவை. அதனால் தீவிரமாகும் அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.
சரும அலர்ஜி
சருமத்தின் மீது உண்டாகும் அலர்ஜி நேரடி விளைவாக இருக்கலாம். ஒவ்வாமை உள்ள உணவை எடுத்துக் கொள்ளும்போது அது பலவிதமான அறிகுறிகளை உண்டாக்கும். வாய் மற்றும் தொண்டையில் ஒருவித கூச்ச உணர்வை உண்டாக்கும். தொண்டையில் அரிப்பு இருக்கலாம்.
இந்த அலர்ஜி சரும ஒவ்வாமையுடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கலாம். அலர்ஜி தரும் பொருளைத் தொட்டால் இது நிகழலாம். சருமத்தில் தடிப்பு, எரிச்சல், சிவத்தல் அல்லது வீக்கம், வலி போன்றவை உண்டாகலாம்.
சருமத்தில் தோலழற்சி, சருமத்தின் திட்டுகள் வீக்கமடைதல், அரிப்பு, ரத்தப்போக்கு போன்றவை உண்டாகலாம். தோலின் மேற்பரப்பில் உருவாகும் இவற்றோடு கண்களும் வீங்கியிருக்கும். கண்களில் கண்ணீர் அல்லது நமைச்சல் இருக்கலாம். சருமத்தில் அரிப்பு சமயங்களில் எரிச்சலும் இருக்கும். இந்த அறிகுறிகள் எல்லாமே அலர்ஜிக்கானவையாகவே பெரும்பாலும் இருக்கும்.
அலர்ஜிக்கான பொதுவான காரணங்கள்
பாதிப்பில்லாத பொருள் உடலுக்குச் செல்லும்போது அது ஏன் அலர்ஜியை உண்டாக்குகிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் சரியான காரணத்தைக் கண்டறியவில்லை.
அதேநேரம் ஒவ்வாமை மரபணு கூறு உள்ளடக்கியதாகவும் இருக்கலாம். இது பெற்றோர் மூலம் குழந்தைகளுக்குப் பரவுகிறது. இது பொதுவான பாதிப்புதான். அதோடு பெற்றோருக்கு அலர்ஜி இருந்தால் பிள்ளைகளுக்கு அலர்ஜி வரக்கூடும் என்று சொல்ல முடியாது.
அலர்ஜியை உண்டாக்கும் பொருட்கள்
செல்லப் பிராணிகள், அதன் கழிவுகள், கரப்பான் பூச்சிகள் கூட ஒவ்வாமையை உண்டாக்குபவையே. தேனீ, கொசு, குளவி போன்றவையும் அலர்ஜி தருபவையே. இது தவிர பென்சிலின் மற்றும் சல்ஃபா மருந்துகள் ஒவ்வாமையை தூண்டக் கூடியவையே. உணவுகளில் பசும்பால், கோதுமை, கொட்டைகள், முட்டை போன்றவையும் ஒவ்வாமையை உண்டாக்குபவைகளில் முக்கியமானவை.
செடிகள், புல், களைகள் மற்றும் மரங்களிலிருந்து வரும் மகரந்தங்கள் போன்ற தாவரங்களிலிருந்து வரும் மகரந்த துகள்கள், தாவர பிசின்கள் போன்றவை தாவரத்தால் வரக்கூடிய ஒவ்வாமை ஆகும். இவை தவிர நிக்கல் போன்ற உலோகங்கள் பொதுவான ஒவ்வாமை உண்டாகச் செய்கிறது.
தொகுப்பு:- பாலயோகி



