Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யாரெல்லாம் எடை குறைப்பு செய்யலாம்?

நன்றி குங்குமம் தோழி

அவசியம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

‘நாம் அதிக உடல் எடையில் இருக்கிறோம்’ என்று நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. மாறாக,‘பிரச்னை வரும்போது பாத்துக்கலாம்’ என்ற மனப்பாங்குடனேயே எப்போதும் இருக்கிறோம். இது முற்றிலும் தவறானது.இந்நிலையில், ‘யாரெல்லாம் எடை குறைப்பு கட்டாயம் செய்ய வேண்டும்? ஏன் உடல் எடை குறைத்து சரியான அளவில் வைக்க வேண்டியது முக்கியம்?’ என்பது குறித்த விழிப்புணர்வை அடைவது அவசியமாகிறது. அதற்காகவே இந்தக் கட்டுரை.

எடை குறைப்பு என்றால் என்ன..?

உடலில் உள்ள தேவையற்ற அல்லது தேவைக்கும் அதிகமாக படிந்திருக்கும் கொழுப்பு சத்தினை உடலை விட்டு வெளியேற்றுவதே உடல் எடை குறைப்பு எனலாம். ‘எடை’ என்று சொல்வதினால் இதிலுள்ள எண் கணக்கு அவசியம் இல்லாதது. அதாவது, நீங்கள் 76 கிலோ இருக்கிறீர்கள் என்றால் 70 ஆக வேண்டும் என்று நினைப்பது நோக்கமாக இருக்கக் கூடாது. ஏனென்றால், உடலில் தசை அடர்த்தி, நீர் வெளியேறினால் கூட எண் கணக்கு குறையும். எனவே, உடலில் உள்ள கொழுப்பு சத்து குறைகிறதா என்பதே முக்கியம். இதனை எப்படி தெரிந்துகொள்வது என்றால், இயன்முறை மருத்துவரிடமோ, உணவியல் நிபுணரிடமோ, பொது மருத்துவரிடமோ இருக்கும் பிரத்யேக உடல் எடை சாதனம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

அப்படி இதில் என்ன இருக்கிறது என்று கேட்டால், உங்களின் மொத்த எடை எவ்வளவு இருக்கிறது, உங்களின் பி.எம்.ஐ. கணக்கு என்ன, உங்களின் வயிற்றை சுற்றியுள்ள எடை எவ்வளவு, உங்களின் நீர் எடை எவ்வளவு, தசை அடர்த்தி எவ்வளவு என்பதனை தனித்தனியாக பிரித்துக் காட்டும். நீங்கள் உடல் எடையை குறைத்து ஒரு மாதம் கழித்து மீண்டும் அதில் ஏறி நிற்கும்போது முன்பு இருந்த கொழுப்பு சத்தின் அளவுக்கும் இப்போது குறைந்திருக்கும் அளவுகள் பொருத்தே நீங்கள் எடையை குறைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

எடை குறைப்பு எப்படி நிகழ்கிறது..?

நம் மூளைதான் எந்த இடத்தில் இருக்கும் எடையை குறைக்க வேண்டும் என்பதனை முடிவு செய்கிறது. வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு கடைசியாகத்தான் கரையும். அதற்கு நீண்ட காலம் எடுக்கும். உடல் எடை குறைப்பது ஒரு நீண்ட கால செயல்முறையாகும். இதில் மாதங்கள் முதல் வருடங்கள் வரைக்கும் நீளும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், ‘அவசரம் அழிவை தரும்’.அதோடு, ஒவ்வொருவரின் உடலைப் பொறுத்து இது மாறுகிறது. அதாவது, உணவுமுறை, வாழ்வியல் முறை மாற்றம் மற்றும் உடற்பயிற்சிகள் இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே உடல் எடையை சரியான முறையில் குறைக்க முடியும்.

யார் யாரெல்லாம் எடை குறைப்பு செய்யலாம்..?

* பி.எம்.ஐ. கணக்கு 25-க்கு மேல் இருப்பவர்கள்.

* வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பின் அளவு 35 இன்ச்சுகளுக்கு மேலிருக்கும் பெண்கள்.

* ரத்த கொழுப்பு சத்து (கொலஸ்ட்ரால்) அளவு அதிகமாக உள்ளவர்கள்.

* நீரிழிவு நோய் இருப்பவர்கள்.

* மெட்டபாலிக் சிண்ட்ரோம் (Metabolic Syrndrome) என்று சொல்லப்படும் பல சிக்கல்கள் ஒன்றிணைந்த நிலையாக உள்ளவர்கள்.

* பி.சி.ஓ.டி. என்று சொல்லப்படும் சினைப்பை நீர் கட்டி இருப்பவர்கள்.

* ஹார்மோனல் பாதிப்புகள் உள்ளவர்கள் (குறிப்பாக, தைராய்டு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள்).

* கொழுப்பு படிந்த கல்லீரல் கொண்டவர்கள்.

* இறுதியாக... மாதவிடாய் நிற்கும் நேரம் (Menopause) மற்றும் குழந்தை பிறந்து இரு வருடம் கழித்து உடல் எடை அதிகமாக இருப்பின் தேவை இருந்தால் மட்டும் குறைக்கலாம்.

இயன்முறை மருத்துவத்தின் பங்கு...

வருடத்திற்கு ஒருமுறை நம் மொத்த உடல் எடையை சரியாக கவனிக்க வேண்டும். ஒருவேளை உடல் எடை அதிகமாக இருக்கிறது என்றால், அதுவே முதல் படி என நினைத்து அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும். அவர் தசை திறனுக்கு ஏற்ப, தொழிலுக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப, உடல் எடையை குறைக்கும் பயிற்சிகளை பரிந்துரைத்து, கற்றும் தருவர். மேலும், அருகிலுள்ள பொது மருத்துவரையும், உணவியல் நிபுணரையும் அணுகி தேவையான விழிப்புணர்வுகளை பெற்றுக் கொள்வது அவசியம்.

விளையும் விளைவுகள்...

உடல் எடை அதிகமாக இருக்கிறது என்பது தெரிந்தும், நாம் உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றால், நமக்கு ஏற்படும் விளைவுகள் இவை:

*உடற்பருமனே அனைத்துவிதமான தொற்றா நோய்களுக்கும் முதல் படி.

*வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு அதிகம் ஆவது என்பது ஆபத்தான ஒரு விஷயம்.

*மேலும், ஒருமுறை அதிகரித்த உடல் எடையை குறைப்பது மிகவும் சிரமம். அதோடு, உடல் எடை மேலும் அதிகமாகுமே தவிர இறங்குவது இல்லை.

*வருங்காலத்தில் வரவிருக்கும் நோய்களை அதாவது, தைராய்டு, இதய அடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை தடுக்க முடியும்.

மொத்தத்தில்... சரியான உடல் எடை குறைப்பு, ஆரோக்கியமான வாழ்வியல் முறை, அமைதியான மனம் இவைதான் நம் வயதானக் காலத்திலும் நம்மை

ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் என்பதனை ஒவ்வொருவரும் அறிந்து செயல்படுவோமாக.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்