Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

யாருக்கு எந்த ஷாம்பு பெஸ்ட்?

நன்றி குங்குமம் டாக்டர்

பெரும்பாலான நபர்களுக்கு தலைமுடி உதிர்வு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நாம் பயன்படுத்தும் ஷாம்புதான். பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருமையான கூந்தலுக்கு சியக்காய், வெந்தயம், செம்பருத்திப் பூ என்று இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இன்றைய அவசர உலகில், இதை எல்லாம் தேட நேரம் இல்லாமல், ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு.

அதனால், ஷாம்பு வாங்குமுன் அதில் என்னென்ன பொருள்களை பயன்படுத்தியுள்ளனர். அது நமது தலைமுடிக்கு ஏற்றதுதானா என்பதை கவனிக்க வேண்டும். அந்த வகையில் என்னென்ன வகை ஷாம்பு இருக்கிறது அவற்றில் அவரவர் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புவை தேர்ந்தெடுப்பது எப்படி என பார்ப்போம்:

ஷாம்பு வகைகள்

கிளென்ஸிங் ஷாம்பு (Cleansing): மிதமானது, வீரியமிக்க ரசாயனங்கள் இருக்காது.

ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பு (Anti-dandruff): பொடுகு இருந்தால் அகற்ற உதவுகிறது. மேலும், தலையில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்றவற்றைப் போக்க ஏற்றது.

ஆன்டி செபொரிக் ஷாம்பு (Anti seborrheic): அதிகமான பொடுகு, பூஞ்சைத் தொற்று இருந்தால், அவற்றைப் போக்க உதவுகிறது.

கெரடோலிடிக் ஷாம்பு (Keratolytic): சொரியாசிஸ் நோயாளிகள், செதில் செதிலாகத் தலையில் தோல் உரியும் பிரச்னை இருப்பவர்கள் பயன்படுத்தலாம்.

வால்யூமைசிங் ஷாம்பு (Volumizing): குறைந்த முடி கொண்டவர்கள் இதைப் பயன்படுத்துகையில், முடி அடர்த்தியாகத் தெரியும்.

மாய்ஸ்சரைசிங் ஷாம்பு: வறண்ட முடி கொண்டவர்களுக்கான பிரத்யேக ஷாம்பு. இதனால், மென்மையான கூந்தலைப் பெறலாம்.

ரிவைட்டலைசிங் ஷாம்பு (Revitalizing): கூந்தலுக்கு கலரிங் செய்தவர்கள், ஸ்ட்ரைட்டனிங், பர்மிங் போன்ற கெமிக்கல் சிகிச்சை எடுத்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ஷாம்பு.

2 இன் 1 ஷாம்பு: இதில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் இரண்டுமே கலந்திருக்கும்.

ஸ்விம்மர் ஷாம்பு (Swimmer): நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் கூந்தலில் படுவதால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.சுருட்டை முடிக்கு, சிக்கு விழும் கூந்தலுக்கு எனப் பிரத்யேகமான ஷாம்புக்கள் உள்ளன.

ஷாம்புவை தேர்ந்தெடுக்கும் விதம்: இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலானவர்கள், அழகான பாட்டில், கண்ணைப் பறிக்கும் ஸ்டிக்கர், பிடித்த விளம்பரம் போன்றவற்றை பார்த்து ஷாம்புவை வாங்குகின்றனர். இந்த தேவையில்லாத விஷயங்களை தவிர்த்துவிட்டு, முக்கியமாக கவனிக்க வேண்டியது ஷாம்புவின் மூலக்கூறுகள் என்னென்ன என்பதைதான். ஏனென்றால், தலைமுடியில் பல வகைகள் உள்ளன. உடைந்த கூந்தல், அடர்ந்த முடி, சுருட்டை முடி, அடர்த்தி குறைந்த கூந்தல் என பல ரகங்கள் உண்டு. இவற்றில் ஒவ்வொரு விதமான கூந்தலுக்கும் பொருந்தும் சரியான ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல் அவசியம்.

அடர்த்தி குறைந்த கூந்தலுக்கான ஷாம்பு: அடர்த்தி குறைந்த கூந்தலை உடையவர்கள், கூந்தலை அடர்த்தியாக்க உதவும் புரோட்டின் மற்றும் பாலிமர்கள் கொண்ட ஷாம்புவை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஷாம்புவின் முக்கிய மூலக்கூறாக மரைன் கொலாஜென் எனும் பொருள் இருக்கும்; இது கூந்தலை அடர்த்தியாக்க உதவும்.

உடைந்த முடிக்கான ஷாம்பு: தலைமுடி வறட்சியாக உள்ளவர்களுக்கு முடியின் இறுதியில் பிளவுபட்டு காணப்படும். எந்த சூழல் ஆனாலும், எக்காலமானாலும் இதன் தன்மை மாறாது இருக்கும். இவ்வித முடிக்கு அதிக ஈரப்பதம் கொண்ட, முடியை நன்கு ஈரப்பதத்துடன் வைக்கும் ஷாம்பு தேவை. இதற்கு, எண்ணெய், ஷியா வெண்ணெய் போன்ற மூலக்கூறுகளை கொண்ட ஷாம்புவை தேர்ந்தெடுத்தால் கூந்தல் உடைவதை தடுக்க முடியும்.

நிறத்துக்கு தகுந்த ஷாம்பு: கூந்தல் கருப்பு நிறமாக, பிரௌன் நிறமாக அல்லது நிறம் குறைந்தோ கூடியோ இருந்தால், உங்கள் கூந்தலை சரியான மெலனின் அளவு கொண்டதாக மாற்றும் ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல் வேண்டும்.

எண்ணெய்ப்பசை கொண்ட முடிக்கான ஷாம்பு: எண்ணெய்ப்பசை மற்றும் அடர்த்தி குறைந்த கூந்தலுக்கு, கற்றாழை, பருத்தி எண்ணெய், மூலிகைகள் போன்ற மூலப்பொருட்களை கொண்ட ஷாம்புவை தேர்ந்தெடுக்க வேண்டும். இது முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.

முடியின் வேர்கால்களுக்கான ஷாம்பு: முடியின் வேர்கால்கள் சென்சிட்டிவாக இருந்தால், அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் போன்றவை ஏற்படும். இந்த விதமான முடி கொண்டவர்கள் ப்ரோ வைட்டமின் B5, பைசாபோலொள், கற்றாழை போன்ற மூலக்கூறுகள் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. இது தலையின் சென்சிட்டிவிட்டியை குறைத்து முடி வளர்ச்சியை தூண்ட உதவும்.

அதேசமயம், அதிகமுறை தலைக்கு குளிப்பதோ, தினந்தோறும் ஷாம்பு பயன்படுத்துவதோ முடிக்கு தூய்மையான சுத்தத்தை தராது. முடி தூய்மையான சுத்தம் அடைந்து விட்டதை தலையில் உள்ள பொடுகு, பேன், உலர்ந்த தன்மை போன்ற அனைத்தும் நீங்கும் போதே உணரலாம். எனவே, தங்கள் தலைமுடிக்கு ஏற்ற சரியான ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால், கூந்தல் முழுமையான சுத்தத்தை பெறும்.

தொகுப்பு: ரிஷி