Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெப்பவாதம் உடனடி முதலுதவி என்ன

நன்றி குங்குமம் டாக்டர்

சமீப காலமாகவே, கோடைகாலத்தில், ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட அதிக வெப்ப அலைகளை கொண்டுவருகிறது. கடந்த மாதம் சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இவ்வளவு அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இருப்பதால் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம் என்கிறார், மருத்துவர் அதிதி கிருஷ்ணமூர்த்தி. கோடையில் நிலவும் இந்த கடும் வெப்பம் காரணமாக பலரும் பலவித இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அந்த வெப்பத்தை சமாளிக்கும் வகையில் சில எளிய வழிகளை நம்முடன் இவர் பகிர்ந்து கொள்கிறார். பொதுவாக, சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது, நம் உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றும் அமைப்பு தானாகவே செயல்பட்டு, உடலை குளிர்விக்க உதவுகிறது. இதன் மூலம் கடும் வெப்பத்திலிருந்து நம் உடல் பாதுகாக்கப்படுகிறது. அதேபோல, வெப்பநிலை குறையும்போது, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் அமைப்பு செயல்பட்டு, உடல் வெப்பநிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது.

ஆனால், சுற்றுப்புற வெப்பநிலை மிக அதிகமாக உயரும்போது, நம் உடலின் வெப்பத்தை வெளியேற்றும் அமைப்பால் அதை சமாளிக்க முடியாமல் போகிறது. மூளையில் உள்ள உடல் வெப்பநிலையை சீராக்கும் மையத்தால் சாதாரண வெப்பநிலையை பராமரிக்க முடியாதபோது, அதிகப்படியான வெப்பம் உடலில் தேங்கி, வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

வெப்பம் தொடர்பான நோய்கள் லேசானதாக இருக்கலாம். உதாரணமாக உடல் சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு அல்லது கடுமையான காய்ச்சல் மற்றும் மனக்குழப்பம், வெப்பவாதம் போன்ற தீவிரமான நிலையாகவும் இருக்கலாம். தீவிரமாக இருக்கும்போது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவது கட்டாயம் ஆகும்.வெப்பம் தொடர்பான நோய்கள், உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் அமைப்பு சற்று பலவீனமாக இருக்கும் முதியவர்கள், பக்கவாதம் வந்தவர்கள், மதிய நேரத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், வெயிலில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

வெப்பவாதத்தை உடனடியாகக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். அதிக நேரம் வெயிலில் இருந்த ஒருவருக்கு மனக்குழப்பம், தூக்கக் கலக்கம், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் காய்ச்சல் இருந்தால் அது வெப்பவாதமாக இருக்கலாம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வெப்பவாதத்தின் முக்கிய அறிகுறிகள், சருமம் சூடாகவும் சிவந்தும் காணப்படுவது மற்றும் வியர்க்காமல் இருப்பது ஆகும்.ஒருவரிடம் இந்த அறிகுறிகள் தெரிய வந்தால், மருத்துவ உதவி கிடைக்கும் முன்பு அவர்களுக்கு உதவ நீங்கள் செய்ய வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள்:

பாதிக்கப்பட்டவரை குளிர்ச்சியான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வெயில் காலங்களில் கோட், ஷூ, சாக்ஸ் போன்றவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும். உடல் வெப்பநிலையை விரைவாகக் குறைக்க, அவர்கள் உடல் முழுவதும் குளிர்ந்த நீரைத் தெளித்து விசிறி விடவும், அல்லது ஐஸ் தண்ணீரில் நனைத்த துண்டுகளால் அவர்கள் உடலைப் போர்த்த வேண்டும்.

இந்த முதலுதவிகளுக்குப் பிறகு, உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது கட்டாயம் ஆகும். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம்.

வெயிலைச் சமாளிக்க சில எளிய வழிகள் இதோ!

Breaks - வெயிலில் வேலை செய்யும் போது, இடை இடையே கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும்.

Escape - காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும் (இது நாளின் அதிக வெப்பமான நேரம்).

Avoid - அதிக வெப்பமான நேரத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும் (உடற்பயிற்சி உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்).

Take - வெளியே செல்லும்போது தொப்பி, குடை மற்றும் கையடக்க விசிறி போன்றவற்றை எடுத்துச் செல்லவும் (வெளியே உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க).

Take - அடிக்கடி தண்ணீர் குடிக்கவும் (உடலில் நீர்ச்சத்தை குறையாமல் பார்த்துக்கொள்ள).

Have - வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரீன் தடவிக்கொள்ளவும்.

Eat - எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை உண்ணவும் (வெள்ளரிக்காய் & தர்பூசணி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடவும்).

Hot - வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.

Environment - சுற்றியுள்ள சூழலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் (விசிறிகள், ஏர் கூலர்கள், ஏசி போன்றவற்றைப் பயன்படுத்தவும்).

Attire - ஆடைகள் மெல்லியதாகவும், தளர்வாகவும், காற்று புகும்படியும் இருக்க வேண்டும் (உடல் குளிர்ச்சியாக இருக்க இது உதவும்).

Take - குழந்தைகளையும் செல்லப்பிராணிகளையும் பாதுகாப்பாக வீட்டிற்குள் அழைத்துச் செல்லுங்கள். வெயிலில் நிறுத்தப்பட்ட காருக்குள் அவர்களை ஒருபோதும் தனியாக விட்டுச் செல்லக் கூடாது (வெயிலில் நிறுத்தப்பட்ட காருக்குள் வெப்பநிலை மிக வேகமாக அதிகரிக்கும்). எனவே, மேற்சொன்ன ஆலோசனைகளை பின்பற்றி சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்!

தொகுப்பு:-ஸ்ரீ தேவி குமரேசன்