Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நலம் யோகம்

நன்றி குங்குமம் தோழி

உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி

ஒரு குருவின் சேர்க்கை என்பது ஒவ்வொரு மனித னின் வாழ்க்கையிலும் ஒரு மறுபிறப்பைப் போன்றது. உடலால் நாம் ஒரே மனிதராக இருந்தாலும், குருவின் அருள் நம்மைத் தொடும் அந்தக் கணத்திலிருந்து, ஒரு புதிய மனிதன் நமக்குள் பிறக்கத் தொடங்குகிறான்.இதுவரை இருந்த வாழ்க்கையை பார்க்கும் பார்வையும், வாழ்க்கையின் நோக்கமும் மாறுகிறது. நம் சிந்தனைகள், செயல்கள், முடிவுகள், உறவுகள், இன்பம், துன்பம் பற்றிய புரிதல் என எல்லாமே படிப்படியாக ஒரு புதிய பரிமாணத்தை அடைகின்றன.

ஆன்மீகப் பாதையில், குருவின் அருள் கிடைப்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. அது இறையருளின் வெளிப்பாடாகும். தேவையற்ற பயங்கள், குழப்பங்கள், பற்றுதல்கள் மெதுவாய் குறைகின்றன. வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு அனுபவத்தையும் வேறொரு கோணத்தில் பார்க்கும் முதிர்ச்சியும் உருவாகிறது.

அதனால்தான் குருவின் அருளைப் பெற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் வெறும் வெளிப்புற வெற்றிகளால் அளவிடப்படுவதில்லை. அவர்கள் நடக்கும் விதம், பேசும் விதம், சிந்திக்கும் விதம், எதிர்வினையாற்றும் விதம் மாறுகிறது. வாழ்க்கை அவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், உள்ளத்தில் ஒரு நிலைத்தன்மையும், ஒரு தெளிவும், ஒரு நம்பிக்கையும் உருவாகின்றன. இந்த அனுபவத்தை வாழ்ந்து பார்த்தவர்களுக்கே திருமூலர் கூறும் கீழே உள்ள இந்த நான்கு வரிகளின் உண்மையான ஆழம் புரியும்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

இந்த நான்கு வரிகளும் வெறும் பக்திப் பாடல் அல்ல. ஒரு சீடனின் ஆன்மீகப் பயணத்தின் நான்கு படிகள். முதலில் குருவை தரிசிக்கிறான். பின்னர் குருவின் நாமத்தை உச்சரிக்கிறான். அதன் பின் குருவின் உபதேசத்தை கேட்டு உள்வாங்குகிறான். இறுதியில் குருவின் உருவமும், உபதேசமும், அருளும் அவனது உள்ளத்தோடு ஒன்றாகி, இடையறாத தியானமாக மாறுகிறது. அங்கே குரு வெளியில் இருக்கும் ஒரு மனிதர் அல்ல, சீடனின் உள்ளத்தில் விழித்தெழுந்த ஞானமாகி விடுகிறார்.

இந்த நிலையை கடந்தவர்களுக்கு, இந்த நான்கு வரிகளும் வெறும் வார்த்தைகளாய் தெரியாது. அவர்களின் சொந்த வாழ்க்கை அனுபவமாகவே உணரப்படும். உண்மையான தெளிவு என்பது புத்தக அறிவால் வருவதில்லை. குருவின் அருளாலும், அந்த அருளை வாழ்வில் அனுபவித்து வாழ்வதாலும் மட்டுமே மலர்கிறது. யோகாவின் தந்தை என்று போற்றப்படும் பதஞ்சலி முனிவர் அருளிய யோக சூத்திரங்களில், யோகப் பயணத்தை அஷ்டாங்க யோகம் என்ற எட்டு அங்கங்களாக விளக்கியுள்ளார். இயமம் முதல் சமாதி வரை இந்த எட்டு படிகளும் மனிதனை படிப்படியாக இறைநிலையை நோக்கி அழைத்துச் செல்லும் ஆன்மீகப் பாதையாகும். இதே அஷ்டாங்க யோகத்தின் சாரமும், அதன் வரிசையும், தமிழில் திருமூலர் அருளிய திருமந்திரத்திலும் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

யோகத்தின் இறுதி நோக்கம் வெறும் உடல் ஆரோக்கியம் அல்ல. தன்னையும் உணர்ந்து, இறைநிலையை அடைவதே அதன் இலக்கு.யோகம் அந்தப் பாதையை நமக்கு காட்டுகிறது. அந்தப் பாதையில் சரியான முறையில் நம்மை வழிநடத்தி, இலக்கை நோக்கி அழைத்துச் செல்பவர்தான் குரு. குருவின் அருளும், யோகப் பயிற்சியும் இணைந்தால்தான் ஆன்மீகப் பயணம் முழுமை பெறும்.

கோமுகாசனம் (Gomukhasana)

கோமுகாசனம் (Gomukhasana) அல்லது Cow Face Pose என்பது அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஒரு சிறந்த யோகாசனம். இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்யும் பலரும், மனம் இலகுவாகவும், உணர்வுப்பூர்வமான விடுதலையை அனுபவிப்பதாகக் கூறுகின்றனர்.

செய்முறை

முதலில் தரையில் கால்களை நீட்டி அமர வேண்டும். பின்னர் ஒரு காலை மற்றொரு காலின் கீழ் மடக்கி படத்தில் காட்டியிருப்பது போலவே வைக்க வேண்டும். இப்போது இரண்டு முழங்கால்களும் பார்க்க ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போல தோற்றம் தரும். வலது கால் மேலே இருந்தால், வலது கையை தலைக்கு மேலே உயர்த்தி, முழங்கையை மடக்கி உள்ளங்கையினை முதுகின் பின்புறமாகக் கொண்டு வரவேண்டும். அதே நேரம், இடது கையை உடலின் பக்கவாட்டிலிருந்து பின்புறமாக எடுத்துச் சென்று படத்தில் காட்டியிருப்பது போல் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். பின்னர், முதுகின் பின்புறத்தில் இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடொன்று கொக்கி போல் இணைத்துப் பிடிக்க வேண்டும்.

இந்த நிலையில் முதுகெலும்பை நிமிர்த்தி, தோள்களை தளர்வாகவும் சமநிலையிலும் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது மார்புப் பகுதி விரிந்த நிலையில் இருக்க வேண்டும். தலையும் கழுத்தும் நேராக இருக்க வேண்டும். மூச்சை இயல்பாகவும் ஆழமாகவும் சுவாசித்துக் கொண்டே, 20 முதல் 30 விநாடிகளுக்கு இந்த நிலையில் தொடர்ந்து இருக்கலாம். பின்னர் கைகளை மெதுவாக விடுவித்து, கால்களின் நிலையை மாற்றி மறுபுறமும் இதே முறையினை பின்பற்றி செய்தல்வேண்டும்.

ஆரம்ப நிலையில் இருப்பவர், இந்த ஆசனத்தைச் செய்யும்போது, முதுகின் பின்புறத்தில், இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடொன்று இணைப்பதில் சற்று கடினமாக இருக்கலாம்.

கடினமாக இருக்கும் பட்சத்தில், ஆசனத்தை வலுக்கட்டாயமாக செய்ய முயற்சிக்கக் கூடாது.யோகாவில் விரல்களை இணைப்பது மட்டுமல்ல இலக்கு. உடலை மதித்து, பொறுமையுடன், விழிப்புணர்வுடன் முன்னேறுவதே உண்மையான பயிற்சி. விரல்களை இணைக்க முடியாதவர்கள், யோகா பெல்ட் (Yoga belt), யோகா ஸ்ட்ராப் அல்லது சிறிய துண்டு (Towel) போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த ஆசனத்தைச் செய்யலாம்.

ஒரு கையினால் பெல்ட்டின் மேல் பகுதியையும், மற்றொரு கையால் அதன் கீழ்ப்பகுதியையும் பிடித்து, நாளுக்கு நாள் இடைவெளியை குறைக்க முயற்சிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம்,

காலப்போக்கில் இரண்டு கைகளின் விரல்களையும் எளிதில் இணைக்க முடியும்.

படத்தில் காட்டப்பட்டுள்ள தோள் மற்றும் மேல் முதுகுக்கான தயாரிப்பு (Preparatory) பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். எந்தவொரு ஆசனத்தையும் போலவே, கோமுகாசனத்திலும் பொறுமையே முக்கியம். உடலை வற்புறுத்தாமல், படிப்படியாக நெகிழ்வுத்தன்மையை வளர்த்துக் கொண்டு, மேல் முதுகு மற்றும் தோள் தசைகளை நன்றாகத் தளர்த்திய பிறகே முழுமையான கோமுகாசனத்தை செய்தல் வேண்டும்.

பலன்கள்

*உடல் தோரணையை சீராக்கும்.

*முதுகெலும்பை நிமிர்த்தி, தோள்களை சரியான நிலையில் இருக்க உதவும்.

*உடலின் இயல்பான தோற்றத்தை மேம்படுத்தும்.

*தோள்பட்டை, கைகளின் வலிமையை அதிகரிக்கும்

*தோள் மூட்டுகளின் இயக்கத்திறனை மேம்படுத்தி, தோள்பட்டை, மேல் முதுகு தசைகளை வலுப்படுத்தும்.

*தோள்களின் இறுக்கத்தையும் பிடிப்பையும் குறைக்க உதவும்.

*மார்புப் பகுதியை விரிவடையச் செய்யும்.

*மார்புக்கூடு திறப்பால், நுரையீரல்களுக்கு அதிக இடம் கிடைத்து, சுவாசம் சீராக நடைபெறும்.

*ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும்.

*ஆழமான மற்றும் மெதுவான சுவாசத்துடன் பயிற்சி செய்வதால் நரம்பு மண்டலம் அமைதியடையும்.

*மன அழுத்தம் குறையும்.

*முதுகுத் தசைகளை வலுப்படுத்தும்.

*மேல் முதுகு மற்றும் முதுகெலும்பைச் சுற்றியுள்ள தசைகள் வலுப்பெறும்.

*முதுகின் நிலைத்தன்மை அதிகரிக்கும்.

*நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் அசௌகரியம் குறையவும் உதவும்.

*அனாஹத சக்கரத்தை தூண்டுவதால், ஆற்றல் ஓட்டம் மேம்படும்.

*அன்பு, கருணை, ஏற்றுக்கொள்ளுதல் போன்ற உணர்வுகள் வளரும்.

*மனதில் தேங்கியிருக்கும், உணர்ச்சி அழுத்தங்கள் வெளியேறவும் உதவும்.

(நலம் யோகம் தொடரும்...)

தொகுப்பு: ஆ.வின்சென்ட் பால்