Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டைப் 1 டயாபடீஸ்… குழந்தைகளைத் தாக்கும் சர்க்கரை நோய்!

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபத்தில் டைப் ஒன் நீரிழிவு கண்டறியப்பட்ட ஆறு வயது சிறுவனின் தாய் தந்தையர் என்னிடம் எழுப்பிய கேள்விகளும் அதற்கு நான் அளித்த ஆற்றுப்படுத்துதலுடன் கூடிய விழிப்புணர்வும் இதோ அனைவரும் அறியத் தருகிறேன்.

நான் - எப்படிமா டைப் ஒன் கண்டுபிடிக்கப்பட்டது?

அம்மா - கொஞ்ச நாளாவே அடிக்கடி யூரின் போய்ட்ருந்தான். சீக்கிரமா சோர்ந்து போயிடுவான். தண்ணீர் தாகம் எடுத்து குடிச்சுட்டே இருப்பான். இதெல்லாம் எனக்கு டவுட் வந்து தான் சார் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனோம். அங்க தான் கண்டுபிடிச்சாங்க.

நான் - டயாபடிஸ்ல ரெண்டு வகைங்க மா... டைப் டூ என்பது வளர்ந்த நபர்களுக்கு வரும். இதுல இன்சுலின் சுரப்பு ஓரளவு நல்லா இருக்கும். ஆனா இன்சுலின் அதோட வேலைய செய்யாது. டைப் ஒன்ல இன்சுலின் சுரப்பு கிட்டத்தட்ட சுத்தமா இல்லாம போயிடும்.

அம்மா - ஆமாங்க சார் . இதுக்கு இன்சுலின் ஊசி கண்டிப்பா போடணும்னு சொல்றாங்க சார்.

டயட் வேற ஏதாவது பண்ணி ஊசி இல்லாம பாத்துக்க முடியாதா சார்?

நான் - மா... இந்தக் கேள்வி டைப் ஒன் கண்டறியப்பட்ட பிள்ளைகளோட தாய் தந்தை அனைவருக்கும் வரும் கேள்வி தானுங்கம்மா..

டைப் ஒன்ல இன்சுலின் சுரக்க வேண்டிய பீட்டா செல்கள் சுத்தமா அழிஞ்சு போயிடுது அல்லது ரொம்ப ரொம்ப குறைவா ஆகிடுது. அதனால இன்சுலின் ஹார்மோன நாம வெளில இருந்து ஊசி மூலமா கொடுக்க வேண்டியிருக்கு...

தாய் - “சார் இந்த ஊசி இல்லாம வேற எதாவது வழில முடியாதுங்களா?”

நான் - இன்சுலின் என்பது ஒரு புரதத்தினால் ஆன ஹார்மோன். “பெப்டைடு” னு சொல்வோம். இத மாத்திரையா போட்டா நம்ம இரைப்பை குடல்ல இருக்குற அமிலங்கள் அதை செரிச்சு அழிச்சுடுதுமா.. ஸ்ப்ரே வடிவுல அஃப்ரெசாங்குற பேர்ல மேலை நாடுகள்ல இருக்கு. ஆனா பிரபலமாகல. ஊசி வழியாக தோலுக்கு அடில போடும் போது தான் சிறப்பாக வேலை செய்யுது. அதனால தான் இந்த குறைபாடு கொண்டவர்கள் தாங்களாகவே ஊசி போட்டுக் கொள்ளுமாறு சின்ன ஊசியோட சிரிஞ்ச் மற்றும் பேனா வடிவில் இன்சுலின் வழங்கப்படுகிறது.

தாய் - இதுக்கு மாற்று மருத்துவம் பண்ணலாம்னு சொல்றாங்க சார். இன்சுலின் இல்லாமயும் ட்ரீட் பண்றோம்னு சொல்றாங்க. உங்க கருத்து?

நான் - என் கருத்து டைப் ஒன் டயாபடிஸ்க்கு ஒரே உயிர் காக்கும் சிகிச்சை இன்சுலின் மட்டும் தான். அதை நிறுத்துனா சில நாட்கள்ல ரத்தத்தில் க்ளூகோஸ் மிக அதிகமாகி அடுத்து உடலில் உள்ள தசைகளை/ கொழுப்பு செல்களை உருக்கி கீடோன்கள் வெளியாகி அதனால உடல் அமிலத்தன்மை அடைந்து மூளை மூர்ச்சை நிலைக்கு சென்று மரணம் சம்பவிக்கும்.

இன்சுலின் நமது உடலுக்கு அனுதினமும் தேவையான ஹார்மோன். நாம் எப்போதெல்லாம் உணவு சாப்பிடுகிறோமோ அப்போது அளவில் அதிகமாக தேவைப்படுகிறது. எனவே இந்த விசயத்தில் நாம் மாற்று மருத்துவத்தை நாட இயலாது.

தாய் - என் அறிவுக்கு புரியுது சார் மனசுக்கு தான் சார் முடியல... என்னால தாங்க முடியல சார். எதனால இப்டி என் பிள்ளைக்கு ...

நான் - நிச்சயமா இது கஷ்டமான நேரம் தான் மா.. என்னாலயும் இதை தாங்கிக்க முடியல. ஆனாலும் இதை நாம் சந்திச்சு தான் ஆகணும். எப்பவும் நாம அறிவக் கொண்டு தான் சிகிச்சை அளிக்கணும். டைப் ஒன் எதனால் வருது என்பதற்கு பதில் சொல்லணும்னா.. ம்ம்ம்.. நம்மள காப்பாத்த வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி நம்ம இன்சுலின் சுரக்குற பீட்டா செல்களைக் குறி வைத்து தாக்கி அழிக்கிறது.

தாய் - அது எப்படி சார் நம்ம எதிர்ப்பு சக்தியே நம்ம செல்களை அழிக்கும்?

நான் - இப்போ நமக்கு ஃப்ளூ, கொரோனா, கூவக்கட்டம்மை போன்ற வைரஸ்கள் தாக்கும் போது அந்த வைரஸ்களை தாக்கும் போது நமது எதிர்ப்பு சக்தி செல்களுக்கு கணையத்தின் பீட்டா செல்களுக்கும் வைரஸ்களுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டு, நமது செல்களையும் சேர்த்து அழித்து விடும் வாய்ப்பு உண்டாகுது. மரபணுக்காரணிகள், சுற்றுச் சூழல் மாசு போன்றவையும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

தாய் - அப்ப வேற வழியே இல்லீங்களா சார்?

நான் - மா.. உங்க பையனுக்கு இப்போ 2024 ல டைப் ஒன் கண்டுபிடிக்கப்பட்டதால நம்ம கிட்ட இன்சுலின் இருக்கு. அதுவும் மேம்பட்ட நவீன இன்சுலின் இருக்கு.இதுவே நூறு வருடங்களுக்கு முன்பு 1924 ல நம்ம நாட்டுல டைப் ஒன் என்று கண்டறியப்பட்டிருந்தால் சிகிச்சை இல்லை. இப்ப நம்ம கிட்ட உயிர்காக்கும் சிகிச்சையான இன்சுலின் இருக்குனு சந்தோசப்படுங்க.

இன்னும் இந்தத் துறைல ஸ்டெம் செல் தெரபி எனும் நஞ்சுக் கொடியில் இருந்தும் எலும்பு மஜ்ஜை யிலும் இருந்து எடுக்கப்படும் மீசன்கைமல் ஸ்டெம் செல்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை பரிசோதனையில் உள்ளது. அந்த முறையில் மீண்டும் பீட்டா செல்களை உயிர்த்தெழச் செய்து வளர்க்கமுடியும் என்பது போன்ற நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் தற்போது இந்த சிகிச்சை முறை பரிசோதனையில் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நம் கைகளுக்கு கிட்டும். அதுவரை கவலைப்படாமல் இருங்கள்.

தாய் - இவனுக்கு அடிக்கடி ஊசி போடுறத தான் சார் தாங்க முடியல. அதுக்கு இப்போ இருக்குற நவீன காலத்துல இன்சுலின் கொடுக்குற சிகிச்சை முறை இருக்கா?

நான் - இருக்குங்கம்மா.. இன்சுலின் பம்ப் இருக்கு. அதுல ஒரு ஸ்டிக்கர் இருக்கும் நம்ம பையன் உடல்ல வயித்துல ஒட்டிக்கிட்டா அதுல இருக்குற நுண் ஊசி ரத்தத்துல இருக்குற க்ளூகோஸ் அளவுகள அளந்து தானாகவே இன்சுலின பம்ப் பண்ணிக்கும். காஸ்ட்லியா இருக்கு.. சில லட்சங்கள் ஆகுது அந்த டிவைஸ்.

தாய் - இவனுக்கு இப்ப கைல-ஊசி போடுறேன் ரெண்டு நாளா. வேற எங்க சார் ஊசி போடலாம்?

நான் - வயிற்றுப் பகுதில தொப்புள சுத்தி போடலாம். தொடைப்பகுதில போடலாம் மா.. ஊசி போடுற இடத்தை சுழற்றிக்கிட்டே இருங்க.

தாய் - வேற-எதுல நாங்க எச்சரிக்கையா இருக்கணும்?

நான் - லோ சுகர் - ஹைப்போகிளைசீமியா விசயத்துல கவனமா இருக்கணும். இவன் கிட்ட எப்பவும் சாக்லேட் , பைல க்ளூகோஸ் பாக்கெட், க்ளூகோமீட்டர் வச்சு அனுப்பணும்.

இவன் மிஸ் கிட்டயும் தெளிவா சொல்லிடணும். படபடப்பு, பிதற்றல் நிலை, குப்புனு வியர்த்து வருதல், தலை சுற்றல் போன்ற அறிகுறிகள் வந்தா க்ளுகோமீட்டர்ல க்ளூகோஸ் பார்த்துட்டு லோ சுகர்னா உடனே சாக்லேட் க்ளூகோஸ் கொடுக்கணும்.

தாய் - சரிங்க சார்.. இந்த நோயால அவன் எதிர்காலத்துக்கு எதாவது பிரச்சனை வருமா சார்?

நான்- இவன் மிச்ச எல்லாரை மாதிரியும் இல்ல அவங்கள விட சூப்பரா வருவான். படிக்கிறது, பரீட்சைல மார்க் வாங்குறது, கல்யாணம் தாம்பத்யம் குழந்தைப் பேறு எதுலையும் பிரச்சனை வராது கவலைப்படாதீங்கதைரியமா இருங்க.பையன நல்லா பார்த்துக்கோங்க சற்று திருப்தியுடனும்கவலை இருந்தாலும் சற்று தெளிவுடனும் பெற்றோர் விடைபெற்றனர்.

பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா