நன்றி குங்குமம் தோழி
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாத இறுதி புதன்கிழமையன்று, ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில், ‘லா-டொமேடினா’ (La Tomatino) என அழைக்கப்படும் பாரம்பரிய தக்காளித் திருவிழா நடைபெறுகிறது.வெள்ளை உடைகளுடன், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இத்திருவிழாவில், பல நூறு மெட்ரிக் டன் எடையுள்ள பழுத்த தக்காளி பழங்களைப் பிழிந்தபடி, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்கின்றனர். கோடையிலும், பருவமழை காலத்தி லும், திடீரென விலை உயர்ந்து, திடீரென மிகவும் விலை குறைந்தென, நமது அன்றாட சமையலில் இடம்பெறும் தக்காளிக்கு திருவிழாவா? அட! அதுவும் டன் கணக்கில் தக்காளி வீணாக்கப்படுகிறதா? வாங்க! இயற்கை 360°யில் தக்காளி குறித்து அறிவோம்..!
‘Solanum lycopersicum’ என்கிற தாவரப் பெயர் கொண்ட தக்காளி(Tomato) தோன்றிய இடம் தென் அமெரிக்கா. இங்குள்ள பெரு நாட்டின் காடுகளில் ‘Pimp’(பரு) எனப்பட்ட சிறிய வடிவிலான தக்காளி கண்டுபிடிக்கப்பட்டபோது, அதை விஷம் என்றே கருதியுள்ளனர். பிறகு மெக்சிகோவின் உணவாகத் தக்காளி பயன்பாட்டில் வர, அதன் விதைகள் உலகெங்கும் பரவி, Tomato என்ற பெயரை பெற்றது.
மெக்சிகோவின் Nahuatl மொழியில் டோமாட்டியில் (Tomati) இருந்துதான். நம்மிடையே டோமாட்டர், டோமோட்டோ ஹன்னு, தக்களி, பிலாட்டி, ராம மூலகா, பிலாட்டி பெய்கான் என தக்காளி பல்வேறு மொழிகளில் அழைக்கப்படுகிறது. வுல்ஃப் பீச் (Wolf Peach), லவ் ஆப்பிள் (Love Apple), மேட்டர்ஸ்&டாட்டர்ஸ் (Maters &Taters), டாமி டோஸ் (Tommy Toes) உள்ளிட்ட பல்வேறு அடைமொழிகளும் இதற்கு ஆங்கிலத்தில் உண்டு.ஆதிமனிதன் தோன்றிய நாளிலிருந்து நடைபெறும் விவாதங்களில் ஒன்று, ‘‘தக்காளி காயா, பழமா” என்பதும்..!
காயோ பழமோ, தக்காளியில் இல்லாத சத்துக்களே இல்லை. கனிந்த ஒரு தக்காளியில், 95% நீர்த்தன்மை, 1.2 கிராம் நார்ச்சத்து, 3.8 கிராம் கார்போஹைட்ரேட், 0.8 கிராம்
புரதச்சத்து மற்றும் பல அத்தியாவசிய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்ஃபரஸ், கால்சியம், மெக்னீசியம், செலீனியம்
உள்ளிட்ட தாதுக்களும், A, B, C, K வைட்டமின்களும், லைக்கோபீன், குளோரோஜெனிக் அமிலம், பீட்டா கரோட்டீன், ஃப்ரெரூலிக் அமிலம், நாரின்-ஜெனின், டெர்பனாயிட்ஸ் ஆன்டி ஆக்சிடெண்டுகளும், ஆர்கானிக் அமிலங்களும் நிறைந்துள்ளன. இவை பல்வேறு நன்மைகளையும் அள்ளித் தருகின்றன.
அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொண்ட லைக்கோபீன் மற்றும் வைட்டமின் சி போன்றவை இதய நோய், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய், உடற்
பருமன், நாளமில்லா சுரப்பி உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.தக்காளியில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியம் மற்றும் ஃபீனாலிக் சேர்க்கைகள், நரம்புத் தளர்ச்சி, சிறுநீர் அழற்சி, புற்றுநோய்கள், கண் நோய், கல்லீரல் நோய் ஆகியவற்றின் தாக்கத்தையும், பரவுதலையும் குறைக்க உதவுகிறது. குடலில் நல் நுண்ணுயிரிகளைக் காக்கும் இதன் வைட்டமின்கள் மற்றும் தாவரச்சத்துகள் பசியின்மை, வயிற்று உப்புசம், மலச்சிக்கல், பித்தப்பை அழற்சி என பாதுகாப்பு அளிக்கின்றன.வைட்டமின் கே மற்றும் கால்சியம், ரத்தம் உறையவும், எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
இதிலுள்ள இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் ரிபோ ஃபிளேவின் போன்றவை கர்ப்பிணிப் பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் நன்மைகளை கூட்டுகின்றன.
தக்காளியில் உள்ள வைட்டமின் சி, குளோரோஜெனிக் அமிலம், க்யூமரிக் அமிலம் போன்றவை சருமத்தை பாதுகாப்பதுடன், புகைபிடிப்பதால் உருவாகும் புற்றுநோய் கார்சினோஜென்களை உடலிலிருந்து வெளியேற்றுகின்றன. மொத்தத்தில், தலை முதல் கால் வரை நன்மைகளை பயக்கும் தக்காளி, ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கப்படுகிறது. என்றாலும், அமிலத்தன்மை அதிகம் கொண்ட தக்காளி, சிலருக்கு ஒவ்வாமையையும், செரிமானமின்மையையும் ஏற்படுத்தக்கூடும். பற்சிதைவு மற்றும் தோல் அலர்ஜியை அதிகரிக்கக் கூடும்.இதிலுள்ள அதிக அளவிலான ஆக்ஸாலிக் அமிலம், கால்சியத்துடன் இணைந்து, கால்சியம் ஆக்ஸலேட் வகையிலான சிறுநீரகக் கற்களை உண்டாக்க வழிவகுக்கிறது.
இதன் இலைகள் மற்றும் பச்சை காய்களில் டோமாடின், சொலானின் போன்ற தற்காப்பு நச்சுத்தன்மை உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.‘தக்காளி...’ நீ இல்லாத உணவே இல்லை எனும் அளவிற்கு, இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன் கூடிய தக்காளி நேரடியாகவோ, சமைத்தோ, பதப்படுத்தப்பட்டோ, உலகெங்கும் பயன்படுகிற எளிய உணவாக இருப்பதுடன் சூப், ஜூஸ், சாலட், சாண்ட்விச், சாஸ், ஜாம், கெட்சப் தொடங்கி, குழம்பு, ரசம், சட்னி, ஊறுகாய், காய்கறிகளுடன் நம் இல்லங்களில் தக்காளிக்கு நிச்சயம் இடம் உண்டு.
நாட்டு வகை, சீமை வகை, காட்டு வகை என தக்காளியில் ஏறத்தாழ 2000 வகைகள் இருக்கின்றன. 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து... ஆண்டஸ் மலைத் தொடர்களில் காட்டு வகையாய் தொடங்கிய தக்காளியின் பயணம்... மெக்சிகோ, ஸ்பெயின், பிற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, போர்ச்சுகீஸ், இந்தியா, சீனா, பிற ஆசிய நாடுகள் என பயணித்து... விரைவில் உலகமயமாக்கலில் நுழைந்தது தக்காளி.
நாள்பட சேமித்து வைக்க இயலாத காரணத்தால், வருடம் முழுவதும் அதிகம் பயிரிடப்படும் பயிராக உலகெங்கிலும் வலம் வரும், வெப்ப மண்டலத் தாவரமான தக்காளி, விதை மூலம் நாற்றுகளை விளைவித்து, அதன் பிறகு பயிரிடப்பட்டு 60 முதல் 100 நாட்களில் விளைச்சலுக்கு வந்துவிடும். தக்காளியை விளைவிப்பது எளிது என்பது போலவே, நோய் தாக்குதலுக்கு எளிதாக உள்ளாவதும் தக்காளியே என்பதால், இதன் விளைச்சலில், கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
உலகளவில் சீனா, இந்தியா, துருக்கி, அமெரிக்க நாடுகள், தக்காளி உற்பத்தியில் முன் நிற்கின்றன. இந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மாநிலங்கள் உற்பத்தியில் முன்னால் இருக்கின்றன. செடியிலிருந்து பறித்த பச்சை நிறத் தக்காளியில், எவ்வளவு கனிந்து சிவப்பாய் மாறுகின்றன, அதே பச்சை நிறத்தில் எவ்வளவு காணப்படுகின்றன என்பதனை, மானுட வாழ்வியலுடன் ஒப்பிடும் சிந்தனையாளர்கள், பல்வேறு இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் மனிதருக்கு, தமது இலக்குகளில் எத்தனை கனிந்து முழுமையடைகின்றன, எத்தனை நிறைவேறாமல் காயாக நிற்கின்றன என்பதை தக்காளிக் கூடையில் புரிந்துகொள்ளவும், ஏற்று நடக்கவும் வலியுறுத்துகின்றனர்.
ஆரம்பத்தில் கூறப்பட்ட தக்காளித் திருவிழா ஸ்பெயின் நாட்டில் இரு தரப்பிடையே தொடங்கிய ஒரு வாக்குவாதம். காய்கறிச் சந்தையில் இது சண்டையாய் மாறி, அங்கிருந்த தக்காளிகள் ஆயுதமாய் மாற, அதுவே இன்று ஆகஸ்ட் மாத இறுதி புதன்கிழமையில் நண்பர்கள் கொண்டாடி மகிழும் தக்காளித் திருவிழாவான ‘லா-டோமாட்டினோ’வாக உருவெடுத்துள்ளது. ஓரிரு மணிநேரங்கள் தொடரும் இந்த விளையாட்டிற்கு, உணவு வீணாக்குதல் சார்ந்த எதிர்ப்புகளும் ஒலிக்கின்றன.வருடம் முழுவதும் பயன்படுத்தப்படுகிற தக்காளி..! நம்மை ஆக்கிடும் பலசாலி என்பதே உண்மை.!!
(இயற்கைப் பயணம் நீளும்...)
தொகுப்பு: டாக்டர் சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்


