Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சூப்பர் எல் நினோவை சமாளிக்க

நன்றி குங்குமம் தோழி

இந்த ஆண்டு சாதாரண எல் நினோ என்பதைத் தாண்டி ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) தாக்கத்தினால் வெப்பம் வழக்கத்தை விட 1.2 முதல் 2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில்... தலைநகர் சென்னையில் 38 டிகிரி வெப்பம் இருந்தாலும், அதிக ஈரப்பதம் காரணமாய், நம் உடலுக்கு 45 டிகிரி வெயிலை போலவே அது உணரப்படுகிறது.

இந்த நிலையில், அதீத வெப்பத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றி, உடலையும் மனதையும் எவ்வாறு குளுமையாகவும், ரிலாக்ஸ்டாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அழகாகவும், தெளிவான விளக்கத்துடனும் சொல்லியிருக்கிறார் சித்த மருத்துவர் சிவராமன் தண்ணீரே முதல் மருந்து...

* தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

* வெயில் காலத்தில் பெரியவர்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 3.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சுமார் 1.5 லிட்டர் தண்ணீர் அவசியம்.

* குழந்தைகளுக்கு தாக உணர்வு குறைவாக இருக்கும் என்பதால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு அடிக்கடி தண்ணீர் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

* ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரைத் தொடர்ச்சியாகக் குடிப்பதைத் தவிர்த்து, அவ்வப்போது பிரித்துக் குடிப்பதே உடல் நலத்திற்கு நல்லது.

* சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவின்படி மட்டுமே நீர் அருந்த வேண்டும். இவர்கள் அவ்வப்போது வாயினை ஈரப்படுத்திக் கொள்ளலாம்.

* குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து தண்ணீர் அருந்துவதைத் தவிர்த்து, மண்பானையில் வெட்டிவேர், நன்னாரி அல்லது பதிமுகம் போட்டு வைத்துப் பருகுவதே உடல் சூட்டை தணிக்கும் சிறந்த வழி.

* வெயிலில் இருந்து வந்தவுடன் நேரடியாக ஜில்லென்று இருக்கும் ஃபிரிட்ஜ் தண்ணீரை குடிக்கக்கூடாது. இது சளி மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.

உணவுப் பழக்கங்கள்...

* முந்தைய நாள் வடித்த பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, காலையில் மோர் கலந்து குடிப்பது சிறந்த ப்ரோபயாடிக் (Probiotic) உணவாகும். இது குடலுக்கும் மூளைக்கும்

புத்துணர்ச்சி அளிக்கும்.

* எளிதில் ஜீரணமாகும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான சுரைக்காய், வெள்ளை பூசணிக்காய், வெள்ளரிக்காய் மற்றும் புடலங்காய் போன்றவற்றை உணவில் கூட்டாகவோ அல்லது சாறாகவோ சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* செரிமானத்திற்கு எளிதான ஆவியில் வெந்த உணவுகளான இட்லி, இடியாப்பம் போன்றவற்றை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

* புலால் உணவுகளில் மீன் எளிதில் செரிமானமாகும் என்பதால் அதை முதல் தேர்வாகக் கொள்ளலாம்.

* கோழி இறைச்சி, கார உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக காரமான உணவுகள் மற்றும் இரவில் சிக்கன் பிரியாணி, பரோட்டா போன்ற கனமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சிறந்த பானங்கள்...

* நீராகாரம் அதாவது, பழைய சோறு தண்ணீர் இந்தக் காலத்திற்கு மிகச் சிறந்த பானமாகும். இது உடல் சூட்டைத் தணிப்பதுடன், குடலுக்குத் தேவையான நன்மை செய்யும் பாக்டீரியாக்களை (Probiotic) வழங்கி மூளை வரை புத்துணர்ச்சி அளிக்கிறது.

* மோர் குடிக்கும் போது அதில் இஞ்சி அல்லது ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். பச்சை மிளகாயை இதில் அரைத்து சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* இளநீர், எலுமிச்சைச் சாறு மற்றும் மண்பானை தண்ணீருடன் நன்னாரி போன்றவை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் சிறந்த தேர்வுகள்.

* ஆற்று மணல் போட்டு, அதன் மீது அழகான மண்பானை வைத்து, இரண்டு துண்டு வெட்டிவேரினை அதனுள் போட்டு, தண்ணீரை ஊற்றி வைத்து குடித்தாலும் நல்லது.

தவிர்க்க வேண்டிய பானங்கள்...

* காபி மற்றும் தேநீரில் உள்ள காஃபின் (Caffeine) உடலை மேலும் வறட்சியடையச் செய்யும் (Dehydrate) என்பதால் அவற்றின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை (Aerated drinks) தவிர்க்க வேண்டும். இவை எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச் சத்தைக் குறைப்பதுடன், இதய நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றன.

* குளிர்பானம் குடித்தவுடன் வரும் ஏப்பம் செரிமானத்தின் அறிகுறியல்ல... மாறாக உடல் அந்த வாயுவை வெளியே தள்ளுவதே ஆகும். இதற்குப் பதிலாக குளிர்ந்த மண்பானை நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்