Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காலம் நம் கையில் குழந்தைகளுக்கான நேர மேலாண்மை

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் சிறிய வயதில் பெற்றோர் வழிகாட்டுதலில் தங்கள் பணிகளை செய்கிறார்கள். அவர்கள் வளர வளர.. தங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தனித்திறனுடன் இயங்கும் ஆற்றலையும் தங்கள் குறிக்கோளை எளிதாக அடையவும் உறுதுணையாக அமையும்.

கவனச் சிதறல்கள் எங்கும் நிறைந்திருக்கும் மற்றும் கவனம் சிதறிக் கொண்டிருக்கும் நமது டிஜிட்டல் உலகில் சிறந்த நேர மேலாண்மை முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாகிவிட்டது. எனவே, நேர மேலாண்மையை அவர்கள் கற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கையை எளிதாக வழிநடத்திச் செல்ல ஏதுவாக இருக்கும். அதற்கு நேர மேலாண்மை குறித்து முதலில் பெற்றோர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.பள்ளி செல்லும் குழந்தைக்கு ஒரு நாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகள் பல இருக்கின்றது. இதனால் பெரும் மனச்சுமையும் மன அழுத்தமும் ஏற்படுவது இயல்பாக உள்ளது இந்நாளில். இதனை தவிர்க்க, நேரத்தை திறம்பட நிர்வகிக்க கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமை ஆகும்.

நேர மேலாண்மை என்பது தங்களுடைய வேலைகளை குறித்த நேரத்தில் நிறைவு செய்ய உதவுவது மட்டும் அல்லாமல் தங்களுக்கான ஒய்வு நேரத்தையும் சிறந்த முறையில் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு ஒதுக்கிக் கொள்ள முடியும்.

நேர மேலாண்மையின் முக்கிய அம்சங்கள்

*தெளிவான இலக்குகளை நிர்ணயித்தல்

*பணிகளுக்கு முன்னுரிமை அளித்தல்

*முன்கூட்டியே திட்டமிடுதல்

*கவனச்சிதறல்களை தவிர்த்தல்

*முன்னேற்றத்தை தவறாமல் மதிப்பாய்வு செய்தல்

*நேர மேலாண்மையின் முக்கியத்துவம்

*நேரத்தை திறமையாகப் பயன்படுத்த உதவுவது

*மன அழுத்தத்தை குறைப்பது

*உற்பத்தித் திறனை மேம்படுத்துவது

*சமச்சீரான வாழ்க்கை முறையை பராமரிப்பது

குழந்தைகளின் படிக்கும் நேரத்தையும் அவர்கள் எவ்வாறு படிக்கிறார்கள். அவர்கள் அடுத்த நாள் கட்டாயம் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்து முடிக்கிறார்களா. நீண்ட நேரம் ஒரே பாடத்தில் நேரத்தை செலவழிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.அவர்கள் படிக்கும் நேரத்தை 25 நிமிடமாகவும், அதன்பின் 5 முதல் 10 நிமிடம் இடைவேளை எடுத்து கொள்வதும் சிறந்தது. இதேபோல் அவர்கள் படிக்கக் கூடிய 2 முதல் 3 மணி நேரத்தை பிரித்து படிக்கும்போது சிறப்பாக செயல்பட முடியும்.குழந்தைகளும் தங்கள் பணிகளை தள்ளிப்போடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அதுவே, அவர்களின் நீண்ட கால பழக்கமாக மாறாமல் தவிர்க்க சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

குழந்தைகளின் பணிகளை சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்தல்

*அடையக் கூடிய இலக்குகளை அமைத்தல்

*வழக்கமான நடைமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

*கவனச் சிதறல்களைக் குறைத்தல்

*சீரான இடைவெளியில் ஓய்வெடுத்தல்

*அவர்கள் நிர்ணயித்த நேரத்தில் பணிகளை முடிக்கும்போது பாராட்டுதல்

*ஆரம்ப கால நேர மேலாண்மை பயிற்சி, அவர்கள் திறமையானவர்களாகவும் தங்கள் கடமைகளை கவனத்தில் கொள்பவர்களாகவும் வளர்வதை உறுதி செய்கிறது.

*குழந்தைகளுக்கு அவர்கள் கடைபிடிக்கக் கூடிய வகையில் காட்சி அட்டவணை (visual schedule) பயன்படுத்தலாம்.

இது ஒருநாளின் செயல்பாடுகளை படங்களின் வாயிலாக வரிசையாக விவரிக்கும்படி இருப்பதால் குழந்தைகள் இவற்றை பின்பற்ற எளிதாகவும் காலப்போக்கில் தங்கள் வேலைகளை பெற்றோர் நினைவூட்டக் கூடிய விஷயங்களை தாங்களே சுயமாக செயல்படுத்தக் கூடிய திறனையும் அடைவார்கள்.

குழந்தைகளுக்கு நேரம் பற்றிய கருத்து புலப்படாத ஒன்றாகும். இதனால், செயல்முறை விளக்கங்கள் மூலம் அதை அவர்களுக்குப் புரிய வைப்பதே சிறந்த உத்தியாகும். உணவு நேரம், உறங்கும் நேரம் அல்லது விளையாடும் நேரம் போன்ற குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் நேரத்தை தொடர்புபடுத்துவதன் மூலம் நேர மேலாண்மை பற்றி குழந்தைகளுக்கு சொல்லித்தர தொடங்கலாம்.

வயதுக்கேற்ப நேரமேலாண்மையை எவ்வாறு கற்பிப்பது?

3 முதல் 5 வயது வரை

குழந்தைகளின் 3 முதல் 5 வயது வரை அன்றாட செயல்பாடுகளை ஒரே குறிப்பிட்ட நேரத்தில் தினமும் கடைப்பிடிக்க பழக்க வேண்டும்.

6லிருந்து 10 வயது முதல்

குழந்தைகளின் 6லிருந்து 10 வயது முதல் அவர்களுடைய சிறு சிறு வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களையே செய்து முடிக்க பழக்க வேண்டும்.

11 முதல் 18 வயது வரை

டீன் ஏஜ் பருவமான 11 முதல் 18 வயதில் உள்ளவர்களை தங்கள் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் நேர அட்டவணை தயாரித்து அதை கடைபிடிக்க பெற்றோர் உதவ வேண்டும்.

குழந்தைகள் தங்களுடைய வேலைகளை எதன் அடிப்படையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள ஐசன் ஹோவர் அட்டவணையை பின்பற்றலாம்.

அவசரமானவை மற்றும் முக்கியமானவை - அவசரமற்றவை மற்றும் முக்கியமானவை. அவசரமானது ஆனால் முக்கியமற்றது. அவசரமற்றது மற்றும் முக்கியமற்றது அவசரமானவை மற்றும் முக்கியமானவை இந்தப் பிரிவில் வரும் பணிகள் உடனடியாகவும் மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய பணிகள்.உதாரணத்திற்கு நாளை செய்து முடித்து ஆசிரியரிடம் காண்பிக்க வேண்டிய வீட்டுப்பாடங்கள்.

நாளை ஒரு குறிப்பிட்ட பாடத்தில் பரீட்சை போன்றவை அடங்கும்.குழந்தைகள் அதன் முக்கியத்துவம் உணராமல், வேறு பணிகளை முடித்து விட்டு இந்தப் பிரிவில் உள்ளவற்றை பிறகு பார்க்கலாம் என்று செயல்படும் போது, போதுமான நேரம் இன்றி அவர்கள் அந்தப் பணிகளை முடிக்க முடியாமல் போகலாம். இதனால், மதிப்பெண் குறைவு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

முக்கியமானவை மற்றும் அவசரமற்றவை

இந்த பணிகளுக்கு அவகாசம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இவற்றை நாம் கவனிக்காவிட்டால், இந்தப் பணிகள் அவசரமானவை பட்டியலுக்கு மாறிவிடும். இந்தப் பணிகளை சரியாக திட்டமிட்டு செய்துவிட்டால், குழந்தைகளுக்கு வேலைப்பளுவினால் ஏற்படக் கூடிய மன உளைச்சலை தவிர்க்கலாம். மேலும் கால அவகாசம் அதிகமாக இருப்பதால் குழந்தையின் முழுதிறனையும் பயன்படுத்தி சிறப்பாக பணிகளை முடிக்க முடியும்.

அவசரமானது ஆனால் முக்கியமற்றது. விரைவாகச் செயல்படுத்த தூண்டும். ஆனால் முக்கியமற்ற வேலைகள். உதாரணமாக, படிக்கும் பொழுது இடையிடையே அலைபேசியில் வரும் தகவல்களைப் பார்ப்பது படிப்பில் கவன சிதறலை ஏற்படுத்தும். அதனால் படிக்கும் நேரத்தில் இடையில் இதுபோன்ற செயல்களை தவிர்த்து முழு கவனமும் படிப்பில் செலுத்த வேண்டும். பின்பு ஓய்வு நேரத்தில் அலைபேசியில் உள்ள தகவல்களையும் பார்க்கலாம்.

அவசரமற்றது மற்றும் முக்கியமற்றது

நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது இதுபோன்ற செயல்பாடுகள் ஆகும். நீண்ட நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுவது. குழந்தைகள் இதை உடனடியாக செயல்படுத்த முனைவர். ஆனால், இதுபோன்ற விஷயங்கள் முக்கியமற்றது மற்றும் அவசரமற்றதும் ஆகும்.குழந்தைகளுக்கு அவர்களுடைய செயல்பாடுகளை இந்த நான்கு வகைகளில் பொருத்திப்பார்த்து அதற்கான நேரத்தை வரையறுத்து செயல்பட பயிற்றுவிப்பதால் அவர்களுடையே திறன்மேம்பாட்டு குறிக்கோளை அடைய உறுதுணையாக இருக்கும்.

பெற்றோர் தங்கள் குழந்தைகள் நேர மேலாண்மையை கற்றுக் கொள்வதற்கு தாங்களும் முன்னுதாரணமாக இருப்பது மிக அவசியமானது.இதனால், தங்கள் குழந்தைகளின் நீண்டகால வெற்றிக்கு வழிவகுத்து கொடுக்க முடியும். பள்ளிப்பருவம் என்பது மிகச்சிறந்த பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டிய சிறந்த காலம்.பள்ளிகளும் ஆசிரியர்களும் பெற்றோரும் இணைந்து குழந்தைகளை நேரத்தின் சிறப்பை உணர்ந்து செயல்பட வழிகாட்ட வேண்டும்.

தொகுப்பு: குழந்தைகள் நல மருத்துவர் அமுதா தேவி