Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கேடில் விழுச்செல்வம் கேழ்வரகு!

நன்றி குங்குமம் டாக்டர்

சிறுதானிய சிறப்புகள் நலம் போற்றும் பாரம்பரியம்

கேழ்வரகு நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு மிகச்சிறந்த சூப்பர் ஃபுட்டாகும். தற்போதைய நவீன காலகட்டத்தில் இதன் ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக இது உலகளவில் பிரபல மடைந்து வருகிறது. சங்க இலக்கியங்களில் ராகி கேழ்வரகு என்றும், கிராமப்புறங்களில் கேப்பை என்றும் அழைக்கப்படுகிறது. உழைக்கும் மக்களின் அயர்ச்சியையும் சோர்வையும் நீக்க அன்றிலிருந்து இன்று வரை ராகிக்கூழை விடச் சிறந்த உணவு வேறில்லை.

ராகியின் ஊட்டச்சத்து மதிப்பு (100 கிராம்)

*ஆற்றல் - 336 kcal

*கார்போஹைட்ரேட் 67 கிராம்- 72. கிராம்

*நார்ப்பொருள் 11.18 கிராம்

*புரதம் 7.3 கிராம்

*கால்சியம் 344 மி.கி- 364 மி.கிராம்

*இரும்புச்சத்து 3.9 மி.கிராம்

*மெக்னீசியம் 146 மி.கிராம்

*பொட்டாசியம் 443 மி.கிராம்

*கொழுப்பு 1.5. கிராம்- 1.9 கிராம்

ராகியின் முக்கிய நன்மைகள்

எலும்பு வலுவடைதல் - ராகியில் மற்ற தானியங்களை விட 3 முதல் 5 மடங்கு அதிக கால்சியம் உள்ளது. இது வளரும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எலும்பு தேய்மானம் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு நோய் மேலாண்மை

இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு (Low Glycemic Index) மற்றும் அதிக நார்ப்பொருள் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கிறது.

ரத்தசோகை நீங்குதல்

இதில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

உடல் எடை குறைப்பு

இதில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் பசியைக் கட்டுப்படுத்துகிறது. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது சிறந்த உணவு. பச்சையம் இல்லாதது (க்ளூட்டன் ஃப்ரீ) கோதுமையில் உள்ள க்ளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் ராகியை தாராளமாகச் சாப்பிடலாம்.உணவு அறிவியல் ஆராய்ச்சிகள் ராகி பற்றி சில முக்கிய உண்மைகளைக் கண்டறிந்துள்ளன.

ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்

ராகியின் தவிட்டிலுள்ள (seed coat) பாலி பீனால்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வீக்கங்களைக் குறைக்கின்றன மற்றும் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை குறையும்

ராகியில் உள்ள அமினோ அமிலங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தி, செரோடோனின் ஹார்மோன் சுரப்பைச் சீராக்குகிறது. இது பதற்றம் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையைக் குறைக்கிறது.

குடல் ஆரோக்கியம் (Gut microbiome)

ராகி குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.

ராகியை உட்கொள்வதற்கான பரிந்துரைகள்

ராகியில் இயற்கையாகவே பைட்டேட்டுகள் மற்றும் டானின்கள் போன்ற ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகள் உள்ளன. இவை கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். எனவே, ராகியைச் சாப்பிடும்போது கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றுங்கள்.

முளைகட்டுதல்

ராகியை முளைக்கட்ட வைக்கும்போது அதில் உள்ள வைட்டமின் சி அளவு அதிகரிக்கிறது மற்றும் இரும்பு, கால்சியம் சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்சிக் கொள்ள முடிகிறது. இது குழந்தைகளுக்கு கொடுக்க உகந்தது.

புளிக்கவைத்தல்

ராகி கூழ் அல்லது ராகி தோசை மாவை புளிக்க வைத்துப் பயன்படுத்தும்போது, அதன் செரிமானத்தன்மை அதிகரிப்பதுடன் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

சிறந்த நேரம்

ராகியை காலை அல்லது மதிய உணவாக உட்கொள்வது மிகச் சிறந்தது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. (குறிப்பாக செரிமானப் பிரச்னை உள்ளவர்கள்).

ராகியை கஞ்சி, கூழ், அடை, தோசை அல்லது இட்லி வடிவில் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

ராகியின் ஆச்சர்யமூட்டும் உண்மைகள்...

4000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம்

ராகி இந்தியாவின் பூர்வீக தானியம் அல்ல. இது சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து குறிப்பாக எத்தியோப்பியா நாட்டின் மலைப்பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதன்பிறகு, இந்திய மண்ணோடு ஒன்றிப்போய் நம் பாரம்பரிய உணவாக மாறிவிட்டது,

பூச்சிக் கொல்லிகள் தேவையே இல்லாத சூப்பர் பயிர்

ராகி பயிருக்கு எந்தவிதமான செயற்கை பூச்சிக் கொல்லிகளோ அல்லது ரசாயன உரங்களோ

பெரிதாகத் தேவைப்படுவதில்லை. இதற்கு இயல்பாகவே பூச்சிகளை எதிர்க்கும் திறன் அதிகம். எனவே, சந்தையில் கிடைக்கும் ராகி பெரும்பாலும் இயற்கையாகவே ஆர்கானிக் உணவாகவே இருக்கும்.

வறட்சியிலும் வாழும் அற்புதம்

மிகக் குறைந்த தண்ணீரே உள்ள வறண்ட நிலங்களிலும் கடுமையான வெயிலிலும் ராகியால் வளர முடியும். இதனால்தான் இது வறட்சியைத் தாங்கும் பயிர் என்று அழைக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த பாதுகாப்புப் பயிராகும்.

பஞ்சம் போக்கிய தானியம்

பண்டைய காலங்களில் பஞ்சம் ஏற்படும் போது ராகிதான் மக்களின் உயிரைக் காத்தது. சரியாகப் பராமரித்து வைத்தால், ராகி தானியத்தை பல வருடங்களுக்கு கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க முடியும். பூச்சிகள் இந்தத் தானியத்தை அவ்வளவு எளிதில் அண்டாது.

தாய்ப்பாலுக்கு நிகரான ஊட்டச்சத்து

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு, முதன்முதலில் கொடுக்கப்படும் மாற்று உணவாக ராகி கஞ்சி விளங்குகிறது. முளைக்கட்டிய ராகியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் எலும்பு வளர்ச்சிக்கும் தாய்ப்பாலுக்கு இணையான நன்மையைத் தருகின்றன.

விண்வெளி வீரர்களுக்கான உணவு

ராகியை ஒரு மிராக்கிள் கிரெய்ன் (miracle grain) என்று அழைக்கிறார்கள். அதிலுள்ள அசாத்திய ஊட்டச்சத்துகள் காரணமாக எதிர்காலத்தில் விண் வெளிப் பயணங்களின் போது விண்வெளி வீரர்களுக்குக் கொடுப்பதற்கான சிறந்த உணவாக இது தற்போதைய உலகளாவிய உணவுப் பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறது.

தொகுப்பு: உணவியல் நிபுணர் சங்கீதா