Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிம்மதியான தூக்கத்தைத் தரும் இலந்தைப் பழம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இலந்தைப் பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் அனைத்தும் மருத்துவ குணம் பெற்றவை.இதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று காட்டு இலந்தை, மற்றொன்று நாட்டு இலந்தையாகும். நீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இவை எல்லாவற்றிலும் ஒரே மருத்துவ குணம் பெற்றவை.

இலந்தையில் உள்ள சத்துகள்

இலந்தை பழத்தில், மாவுசத்து, தாது உப்புகள், இரும்புசத்து, ஏ,சி,பி3, பி6 வைட்டமின்களும், தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போ - ஹைட்ரேட் மற்றும் புரதமும் அடங்கியுள்ளன.

இலந்தையின் மருத்துவ குணங்கள்

இலந்தை நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் கொண்டவை.

இலந்தையில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளதால், இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்கும்.

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டுவந்தால் மன அமைதி ஏற்படுவதுடன், நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வரும். உடலில் உள்ள பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தை பழத்துக்கு உண்டு.

ஒரு சிலருக்கு சில காரணங்களால், பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாத நிலை இருக்கும். இவர்கள் இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால், பசியின்மை பிரச்னையை குணமாக்கும். மாதவிடாய் காலங்களில் அதிக உதிர போக்கினால் அவதிபடுவோர், இலந்தை பழங்களை சாப்பிட்டு வந்தால் உதிரபோக்கு கட்டுப்படும்.

மலைப்பாங்கான இடங்களிலோ, நீண்ட தூரம் பேருந்தில் பயணம் செய்யும்போதும் சிலருக்கு குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் போன்றவை உண்டாகும். இவர்கள் இலந்தைப் பழந்தை சாப்பிட்டால் அவை  கட்டுப்படும்.

உடல் வலி, அசதி போன்றவற்றை போக்கி, உடலை தெம்பாக வைக்கும் தன்மை இலந்தை பழத்துக்கு உண்டு. இலந்தை பழத்தில் உள்ள சபோனின், ஆல்காய்டுகள் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக்குகிறது. இலந்தையில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜென்ட்கள் உடலில் உள்ள கோளாறுகளையும், நோய்களை நீக்கவும், நிணநீர் மண்டலத்தின் மீதுள்ள அழுத்தத்தையும் குறைக்கின்றன.

தொகுப்பு:-பொ.பாலாஜி கணேஷ்