நன்றி குங்குமம் டாக்டர்
சமையலில் சுவைக்காகப் பயன்படுத்தும் உப்பு, சருமப் பராமரிப்பிலும் சில வழிகளில் பயன்படுகிறது என்பது தெரியுமா? சருமத்தில் தேங்கும் இறந்த செல்களை அகற்றுவது முதல் புத்துணர்ச்சியான தோற்றத்தைப் பெறுவது வரை, உப்பைக் கொண்டு செய்யப்படும் சில எளிய அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
இறந்த செல்களை நீக்கும் ‘பாடி ஸ்க்ரப்’: உப்பின் கொரகொரப்பான தன்மை உடலில் தங்கியுள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்த உதவுகிறது. அதனால் 2 ஸ்பூன் தூள் உப்பு அல்லது பொடித்த கல் உப்பு உடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து கொள்ளவும். இதை குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் மென்மையாக வட்ட வடிவில் (Circular Motion) தேய்த்து 5 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும்.
சருமம் மிருதுவாகி, உடனடி பளபளப்பு பெறும்.கைகால் முட்டி கருமை நீங்க: முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள அடர்ந்த கருமையைப் போக்க உப்பு மிகச் சிறந்தது. அதற்கு நாம் செய்ய வேண்டியது அரை மூடி எலுமிச்சை பழத்தின் மீது சிறிதளவு உப்பைத் தூவவும். கருமையாக உள்ள முழங்கை, முழங்கால் மற்றும் கழுத்தின் பின்புறத்தில் 3 முதல் 5 நிமிடங்கள் மென்மையாகத் தேய்க்கவும். எலுமிச்சையின் பிளீச்சிங் குணமும், உப்பின் உராய்வும் சேர்ந்து கருமையை விரைவாகப் போக்கும்.
பாத வெடிப்பு நீக்கும் ‘ஃபூட் ஸ்பா’: ஒரு பக்கெட் வெதுவெதுப்பான நீரில் 2 கைப்பிடி கல் உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பாதங்களை இந்த நீரில் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் லேசாகத் தேய்த்துக் கழுவவும். பாதம் சுத்தமாவதுடன், பாத வெடிப்பு மறையும்; கால்களில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சோர்வு நீங்கும்.கை மென்மைக்கு: உப்பு மற்றும் சிறிதளவு தேன் கலந்து கைகளில் மெதுவாக மசாஜ் செய்து, பின்னர் தண்ணீரில் கழுவலாம்.
கவனம்: எல்லா சரும வகைகளுக்கும் இவை பொருந்தாது என்பதால், பயன்படுத்தும் முறையிலும் கவனம் அவசியம். ஏனென்றால், உப்பு சருமத்தை உலரச் செய்யலாம். உணர்திறன் கொண்ட சருமம், காயம், சிராய்ப்பு அல்லது முகப்பரு உள்ள இடங்களில் உப்பை நேரடியாகத் தேய்க்கக் கூடாது. எனவே, பயன்படுத்துவதற்கு முன் சிறிய பகுதியில் சோதித்துப் பார்ப்பது பாதுகாப்பானது.
தொகுப்பு:- தவநிதி


