Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஸ்வாதி கோண்டே ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

சின்னத்திரையில் பிரபலமான மூன்று முடிச்சு தொடரின் நாயகியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை ஸ்வாதி கொண்டே. இவர், பல நடிகைகள் போல தினமும் ஜிம்மில் கடுமையான பயிற்சிகள் செய்வதில்லை என்றாலும், தனது பிஸியான ஷூட்டிங் வாழ்க்கையிலும் உடல் ஆரோக்கியத்தை பராமரித்து வருகிறார். அவரது ஃபிட்னெஸ் ரகசியத்தை தெரிந்துகொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்: எனக்கு தினசரி ஜிம் செல்லும் பழக்கம் இல்லை. நீண்ட நேர சீரியல் படப்பிடிப்பு ஷெட்டியூல் காரணமாக தனியாக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய அதிக நேரம் கிடைப்பதில்லை. அதனால், தினசரி வீட்டிலேயே, கார்டியோ மற்றும் வலிமைப் பயிற்சிகளை மேற்கொள்கிறேன். மேலும், எனது உடலை வலுவாக வைத்திருக்க வெயிட் லிஃப்டிங் (Weight Lifting) போன்ற பயிற்சிகளையும் செய்கிறேன்.

இது தவிர, சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய தற்காப்புக் கலைகளையும் பயிற்சி செய்கிறேன். இதன்மூலம் எனது உடலமைப்பையும், மன ஒருமுகத் தன்மையையும் பராமரிக்க முடிகிறது. மேலும், தினசரி நடன பயிற்சியும் மேற்கொள்கிறேன். இதுவே, எனது அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது தவிர, நடைபயிற்சி, ஓட்டம் போன்ற எளிய பயிற்சிகளும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. மற்றும் யோகா செய்வேன். யோகா உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு, மன அமைதிக்கும் உதவுகிறது. என்னைப் பொருத்தவரை, கடுமையான உடற்பயிற்சிகளை விட சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் சீரான உணவுப் பழக்கத்தையே எனது ஆரோக்கிய ரகசியங்களாகக் கொண்டுள்ளேன்.

டயட்: கடுமையான டயட் முறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. எளிமையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த வீட்டில் சமைத்த உணவுகளுக்கே நான் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறேன். ஃபிட்டான தோற்றத்துக்கு உணவு முறையும் முக்கிய காரணமாக உள்ளது. சமநிலையான உணவு, சரியான நேரத்தில் சாப்பிடுதல் போன்ற பழக்கங்கள் முக்கியமாகும். அந்தவகையில், காலை நேரத்தில் ஆரோக்கியமான பானங்கள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள் போன்றவை உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றன.

அடுத்தபடியாக மதிய உணவில் அளவான சாதம் அல்லது சப்பாத்தியுடன் காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற சத்தான உணவுகள் இடம்பெறும். புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடல் வலிமைக்கும், தசை வளர்ச்சிக்கும் உதவுகின்றன. மாலை நேரத்தில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ், பழங்கள் அல்லது நட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறேன்.

இரவு நேரத்தில் அதிக எண்ணெய் மற்றும் கனமான உணவுகளை தவிர்த்து, லைட்டான உணவை எடுத்துக்கொள்வேன். மேலும், தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம் பெறுவது, மன அழுத்தத்தை குறைப்பது போன்றவை சிறந்த ஃபிட்னஸின் முக்கிய பகுதிகளாகும்.

பியூட்டி: எனது ஸ்கின்கேர் ரொட்டினை பொருத்தவரை, கெமிக்கல் கலந்த பொருள்கள் எதையும் நான் பயன்படுத்துவதில்லை. முடிந்தளவு, இயற்கை பொருள்களையே பயன்படுத்துகிறேன். உதாரணமாக, முகப்பரு போன்ற பிரச்சனைகளுக்கு கற்பூரவள்ளி இலைச்சாறு போன்ற இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துகிறேன். மேக்கப்பை பொருத்தவரை, குறைவான மேக்கப், எளிமையான ஹேர் ஸ்டைல் மற்றும் நேர்த்தியான உடை அணிவது போன்றவையே பிடிக்கும். என்னைப் பொருத்தவரை ஒருவரின் அழகு என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல; தன்னம்பிக்கை, புன்னகை, நேர்மறையான அணுகுமுறை போன்றவைதான்.

பொதுவாக, ஃபிட்டாக இருக்க பெரிய மாற்றங்கள் தேவையில்லை. தினசரி செய்யும் சிறிய சிறிய செயல்களில் உடல் இயக்கத்தையும் ஆரோக்கியமான பழக்கங்களையும் சேர்த்துக் கொண்டாலே நல்ல உடல் நலனை நம்மால் நிச்சயம் பராமரிக்க முடியும்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்