Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேய்மானத்தைத் தடுக்கும் தீர்வுகளும் பயிற்சிகளும்!

நன்றி குங்குமம் டாக்டர்

“வயதாகிவிட்டால் மூட்டு வலி வரத்தான் செய்யும், இனி நடக்க முடியாது” - இது பல வீடுகளில் முதியவர்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்ளும் ஒரு சமாதானம். ஆனால், அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இது ஒரு மிகத்தவறான புரிதல்.கடந்த அத்தியாயத்தில் மூட்டுத் தேய்மானம் (Osteoarthritis) என்றால் என்ன, அது எப்படி ஏற்படுகிறது என்பதை விரிவாகப் பார்த்தோம். ஒரு இயந்திரம் துருப்பிடிக்கத் தொடங்கினால் அதை அப்படியே விட்டுவிடுவோமா? இல்லை, அதற்கு ஆயில் போட்டு, தேய்த்துப் பராமரிப்போம் அல்லவா? நம் உடலும் ஒரு இயந்திரம்தான்.

மூட்டுத் தேய்மானம் என்பது ஒரு ‘முற்றுப்புள்ளி’ அல்ல; அது உங்கள் வாழ்க்கை முறையைச் சற்று மாற்றியமைக்கச் சொல்லும் ஒரு ‘அலாரம்’. இந்த அத்தியாயத்தில், வலியோடு வாழ்வதை விடுத்து, வலியைக் கடந்து எப்படி உற்சாகமாக இயங்குவது என்பதற்கான தீர்வுகளைப் பார்க்கப் போகிறோம். மாத்திரைகள் மட்டுமே தீர்வல்ல; உங்கள் மனநிலையும், நீங்கள் மேற்கொள்ளும் எளிய பயிற்சிகளுமே உங்களை மீண்டும் ஓட வைக்கும் மந்திரக்கோல்கள்! வாருங்கள், தேய்ந்த மூட்டுகளைத் தேற்றத் தேவையான வழிகளைத் தெரிந்துகொள்வோம்...

பிசியோதெரபி கருவிகள்: வலியைக் குறைக்கும் நவீன மந்திரக்கோல்கள்!

மருந்துகளால் கிடைக்கும் பலன் தற்காலிகமானது. ஆனால், பிசியோதெரபி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அதிநவீன கருவிகள், மூட்டின் உட்பகுதிக்கே சென்று வலியைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன.

1. IFT (Interferential Therapy) - மின் அலை சிகிச்சை

பல நேரங்களில் மாத்திரைகள் போடாமல் வலியை எப்படிக் குறைக்க முடியும் என்று நோயாளிகள் கேட்பதுண்டு. அதற்கு பிசியோதெரபியில் உள்ள ஒரு மிகச்சிறந்த விடைதான் IFT.

இது எப்படிச் செயல்படுகிறது?

பொதுவாக நம் உடலில் வலி ஏற்படும்போது, அந்தச் செய்தி நரம்புகள் வழியாக மூளைக்குச் செல்லும். IFT சிகிச்சை என்பது இரண்டு வெவ்வேறு அதிர்வெண் (Frequency) கொண்ட நடுத்தர மின் அலைகளைப் பயன்படுத்துகிறது. இந்த இரண்டு அலைகளும் மூட்டின் உட்பகுதியில் ஒன்றையொன்று சந்திக்கும்போது ஒரு ‘புதிய அலை’ உருவாகும்.இது நரம்புகளைத் தூண்டி, மூளைக்குச் செல்லும் வலிச் செய்தியைப் பாதியிலேயே தடுத்துவிடும். இதை மருத்துவ உலகில் ‘கேட் கன்ட்ரோல் தியரி’ (Gate Control Theory) என்று அழைப்போம்.

IFT சிகிச்சையின் விரிவான பயன்கள்

1.ஆழமான ஊடுருவல் (Deep Penetration): சாதாரண மின் தூண்டல்கள் (TENS போன்றவை) தோலின்   மேற்புறத்தோடு நின்றுவிடும். ஆனால், IFT அலைகள் மூட்டின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று வேலை செய்யும் திறன் கொண்டவை. குறிப்பாக முழங்கால் மூட்டின் உட்புறத் தேய்மானத்திற்கு இது மிகவும் பலன் தரும்.

2.ரத்த ஓட்டத்தை அதிகரித்தல்: இந்த மின் அலைகள் அந்தப் பகுதியில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதனால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் சென்று, தேய்மானத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையத் தொடங்கும்.

3.வீக்கத்தைக் குறைத்தல் (Edema Reduction): மூட்டைச் சுற்றி நீர் கோர்த்திருப்பது போல வீக்கம் இருந்தால், IFT அலைகளின் அதிர்வுகள் அந்தத் தேவையற்ற திரவத்தை வெளியேற்ற உதவும். இதனால் மூட்டு இறுக்கம் (Stiffness) குறையும்.

4.இயற்கையான வலி நிவாரணி: இந்தச் சிகிச்சையின் மூலம் நமது உடலிலேயே இயற்கையாகச் சுரக்கும் ‘எண்டோர்பின்கள்’ (Endorphins) என்னும் வலி நிவாரணி ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இது எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாத ஒரு இயற்கை வைத்தியம்.

சிகிச்சையின் போது நோயாளி எப்படி உணருவார்?

நோயாளிக்கு வலி இருக்கும் மூட்டைச் சுற்றி நான்கு சிறிய ‘பேட்கள்’ (Electrodes) பொருத்தப்படும். சிகிச்சை தொடங்கும்போது எறும்புகள் ஊர்வது போன்ற ஒரு மென்மையான உணர்வு (Tingling sensation) இருக்கும். இது வலியையோ அல்லது அதிர்ச்சியையோ (Shock) தராது. சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்தச் சிகிச்சை அளிக்கப்படும்.

2. Ultrasound Therapy (மீயொலி சிகிச்சை): மூட்டுக்குள் செல்லும் கண்ணுக்குத் தெரியாத அதிர்வுகள்

இது சாதாரண ஒலி அலைகள் அல்ல. மனிதக் காதுகளால் கேட்க முடியாத மிக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை இது பயன்படுத்துகிறது.

*செயல்படும் விதம்: ஒரு சிறப்பு ஜெல் தடவி, ஒரு சிறிய கருவியின் (Transducer) மூலம் இந்த அலைகள் மூட்டுக்குள் செலுத்தப்படும். இது திசுக்களுக்குள் ஒருவித ‘மைக்ரோ மசாஜ்’ (Micro-massage) செய்யும்.

*வெப்ப விளைவு (Thermal Effect): இந்த அலைகள் மூட்டின் ஆழமான பகுதிகளில் மென்மையான வெப்பத்தை உருவாக்கும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஜவ்வுப் பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும்.

*விரிவான பயன்: ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் பாதிப்பால் மூட்டைச் சுற்றியுள்ள தசைநார்கள் (Ligaments) மற்றும் தசைநார் உறைகள் (Tendons) மிகவும் இறுக்கமாகிவிடும். இந்தச் சிகிச்சை அந்த இறுக்கத்தைத் தளர்த்தி, மூட்டை எளிதாக மடிக்கவும் நீட்டவும் உதவும்.

3. TENS (நரம்புத் தூண்டல் சிகிச்சை): உடலின் சொந்த மருந்தகம்

இது ஒரு சிறிய, கையில் அடங்கக்கூடிய கருவி. நீண்ட கால வலி நிவாரணத்திற்கு இது ஒரு வரப்பிரசாதம்.

*செயல்படும் விதம்: தோலின் மீது ஒட்டப்படும் சிறிய பேட்கள் வழியாக மிகக் குறைந்த அளவு மின்சாரம் நரம்புகளுக்குச் செல்லும்.

*வலி கதவு தத்துவம்: இது மூளைக்குச் செல்லும் வலிச் செய்தியைத் தடுத்து, அதற்குப் பதிலாக ஒரு மென்மையான உணர்வை மூளைக்குக் கடத்தும்.

*எண்டோர்பின் சுரப்பு: மிக முக்கியமாக, இது நம் உடலில் இயற்கையாகவே இருக்கும் ‘எண்டோர்பின்’ (Endorphins) எனும் வலி நிவாரணி ஹார்மோன்களைச் சுரக்கத்

தூண்டும்.

*பலன்: எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாததால், முதியவர்கள் வலி மாத்திரைகளுக்குப் பதிலாக இதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.

4. LASER Therapy (லேசர் சிகிச்சை): ஒளி தரும் புத்துயிர்

இது பிசியோதெரபி துறையின் அதிநவீன சிகிச்சை முறை. ‘Cold Laser’ எனப்படும் மென்மையான லேசர் கதிர்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

*செயல்படும் விதம்: லேசர் ஒளிக்கதிர்கள் தோலின் வழியாக ஊடுருவி, பாதிக்கப்பட்ட செல்களின் மையப்பகுதியை (Mitochondria) சென்றடையும்.

*செல்கள் புதுப்பிப்பு: இது செல்களின் ஆற்றலை (ATP) அதிகரித்து, சேதமடைந்த ஜவ்வு செல்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ளும் வேகத்தை அதிகப்படுத்துகிறது.

*வீக்கம் குறைதல்: மூட்டுக்குள் இருக்கும் நாள்பட்ட வீக்கத்தை (Chronic Inflammation) வேரோடு குறைக்க இது உதவும்.

*பலன்: மற்ற சிகிச்சைகளால் பலன் கிடைக்காத மிக முற்றிய நிலையில் உள்ள தேய்மானத்திற்கு இது ஒரு சிறந்த மாற்றாகும்.

5.பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஒத்தடங்கள்

பாரஃபின் மெழுகு ஒத்தடம்

ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் பாதிப்பு கால்களை மட்டும் பாதிப்பதில்லை; பலருக்கும் கைவிரல் மூட்டுகளில் வீக்கத்தையும், வலியையும் உண்டாக்கும். குறிப்பாக, விரல் நுனி மூட்டுகளில் ஏற்படும் முடிச்சுகள் போன்ற வீக்கத்தை ‘ஹெபர்டன் நோட்ஸ்’ (Heberden’s nodes) என்று அழைப்போம். இதற்கு மெழுகு ஒத்தடம் ஒரு வரப்பிரசாதம்.

*செயல்படும் முறை: மருத்துவப் பயன்பாட்டிற்கான பாரஃபின் மெழுகு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் (சுமார் 48°C - 52°C) உருக்கப்படும். நோயாளி தனது கைகளை அந்த இளஞ்சூடான மெழுகில் பலமுறை முக்கி எடுப்பார். கையைச் சுற்றி மெழுகு ஒரு உறை போலப் படிந்துவிடும்.

*ஆழமான வெப்பம் (Deep Conductive Heat): சாதாரணச் சுடுதண்ணீர் ஒத்தடத்தை விட, மெழுகு ஒத்தடம் சீரான வெப்பத்தை நீண்ட நேரம் மூட்டுகளுக்குள் கடத்தும். இது விரல் மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைநார்களைத் தளர்த்தி, ரத்த ஓட்டத்தை அபரிமிதமாக அதிகரிக்கும்.

பயன்கள்: காலையில் எழும்போது விரல்களை மடிக்க முடியாமல் இருக்கும் ‘காலை நேர இறுக்கத்தை’ (Morning Stiffness) இது உடனடியாகப் போக்கும்.தோலை மென்மையாக்குவதுடன், மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை (Flexibility) அதிகரித்து, அன்றாட வேலைகளை (எழுதுவது, சமைப்பது) எளிதாக்கும்.

மாற்று ஒத்தடம்

மூட்டுகளில் வீக்கம் (Swelling) மற்றும் நாள்பட்ட வலி இருக்கும்போது, ரத்த ஓட்டத்தைச் சீராக்கப் பயன்படுத்தப்படும் மிக எளிமையான ஆனால் சக்திவாய்ந்த முறை இது.

*செயல்படும் முறை: இரண்டு பாத்திரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றில் தாங்கக்கூடிய அளவு சுடுதண்ணீர், மற்றொன்றில் குளிர்ந்த நீர் (ஐஸ் கட்டி கலந்தது அல்ல, குளிர்ந்த நீர்) இருக்க வேண்டும்.

*படி 1: முதலில் சுடுதண்ணீரில் 3 நிமிடங்கள் மூட்டை வைக்க வேண்டும். இது ரத்த நாளங்களை விரியச் செய்யும் (Vasodilation).

*படி 2: உடனே குளிர்ந்த நீரில் 1 நிமிடம் வைக்க வேண்டும். இது ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும் (Vasoconstriction).

*இதை 4 முதல் 5 முறை மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும்.

*வாஸ்குலர் பம்ப் (Vascular Pump): இவ்வாறு ரத்த நாளங்கள் மாறி மாறி விரிந்து சுருங்குவதால், அந்தப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் வீக்கத்தை உண்டாக்கும் திரவங்கள் வெளியேற்றப்படும். இது ஒரு செயற்கையான ‘பம்ப்’ போலச் செயல்பட்டு புதிய ரத்தத்தை அந்த இடத்திற்குக் கொண்டு வரும்.

*யாரெல்லாம் செய்யலாம்? பாதங்கள் அல்லது கைகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படும் முதியவர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இது மிகச்சிறந்த பலனைத் தரும்.

- தொடரும்

தொகுப்பு:இயன்முறை மருத்துவர் நித்யா மூர்த்தி