Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கர்ப்ப காலத்துக்கு எளிய மருத்துவம்

நன்றி குங்குமம் டாக்டர்

கருவுற்று இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்ற மசக்கை பிரச்னைகள் எளிய வழிகளில் தீர்க்கலாம். ஏலக்காயை ஊசியில் குத்தி அதன்மேல் பசு நெய் ஒன்றிரண்டு சொட்டுவிட்டு அடுப்பில் காட்டி எரித்து, சாம்பலை தேனில் குழைத்து ஒருநாளில் நான்கைந்து முறை நாவில் தடவ, வாந்தி வராது.

மாதுளைச்சாறு 50.மி.லி., எலுமிச்சைச்சாறு, தேன் தலா 10 மி.லி. கலந்து குடிக்கலாம். வாயில் ஊற்றி சட்டென விழுங்காமல் நிதானமாக குடிக்க வாந்தி, மயக்கம் சரியாகும். மாதுளை மணப்பாகு என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதில் 10.மி.லி. மணப்பாகுக்கு 30.மி.லி தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அவ்வப்போது பருகிட, உடல் களைப்பு, சோர்வு மயக்கம் இன்றி நன்றாக இருக்கும்.

துளசி, இஞ்சியை தட்டிப்போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, பனை வெல்லம் கலந்து குடிக்க, கர்ப்பகால வாந்தி, நாக்கு கசப்பு மாறும். மோருடன் மிளகுத்தூள், நெல்லிச்சாறு, உப்பு கலந்து குடிக்க வயிறு தொடர்பான பிரச்னைகள் வராது.மாங்காய்த் துருவல், இஞ்சித்துருவல், பெருங்காயம், உப்பு, மோர் கலந்து குடிக்கலாம்.

சின்ன வெங்காயம், சீரகம் இரண்டையும் நல்ல எண்ணெயில் வதக்கி கூடவே இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி 100 மி.லி. அளவு வாழைத்தண்டு சாறு கலந்து லேசாக கொதித்ததும் மிளகுத் தூள், உப்பு கலந்து இளஞ்சூட்டில் பருகலாம்.  கர்ப்ப நேரத்தில் வரக்கூடிய சிறுநீர் பிரச்னையிலிருந்து நிவாரணம் பெற வாழைத்தண்டு சூப் நல்லது.

சுரைக்காய் விதை, வெந்தயம் இவற்றை தனித்தனியாக ஊற வைத்து மோரில் கலந்து காலையில் குடித்து வரலாம். ஆல்பகாரா பழத்தை வாங்கி நன்கு மென்று சுவைத்து சாப்பிடுவது பலன்தரும். மசக்கை வாந்தியும் கட்டுப்படும்.

திரிபலா சூரணம் வாங்கி காலை, மாலை இரண்டு வேளை தேனில் கலந்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீர்வதோடு, சுகப்பிரசவம் ஆவதற்கும் உதவும். கர்ப்ப காலத்தில் 5 மாதத்திற்கு பிறகு இரவு நேரத்தில் சோம்பை கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அரை டம்ளராக சுண்டியதும் பாலில் கலந்து குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஆக உதவும்.

தொகுப்பு: - மகாலட்சுமி சுப்ரமணியன்