நன்றி குங்குமம் தோழி
குழந்தைகளுக்கு எப்போதும் விளையாட்டு பொம்மைகள் மீது ஆர்வம் இருப்பதில்லை. அதிலும் இப்போது இருக்கும் சூழலில் மற்ற குழந்தைகளுடன் நீண்ட நேரம் விளையாடும் வாய்ப்பும் அமைவதில்லை. அதனால் அவர்கள் மிக எளிதில் தொலைபேசிக்கும், தொலைக்காட்சிக்கும் அடிமையாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் எந்தவிதமான பயன்களும் இருப்பதில்லை. இந்நிலையில், வீட்டிலேயே நாம் நம் குழந்தைகளை எளிமையாக விளையாட வைப்பதற்கும், அவர்களின் ஆர்வத்தையும் மூளை வளர்ச்சியையும் அதிகரிப்பதற்கும் நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன. அவற்றில் உதாரணமாக சிலவற்றை மட்டும் இங்கே தந்திருக்கிறேன். இவை நிச்சயம் பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.
சில விளையாட்டுகள்...
கீழே கொடுக்கப் பட்டுள்ள விளையாட்டுகள் ஒவ்வொரு குழந்தையின் வயதிற்கு ஏற்ப மாறுபடும் என்பதால், விளையாடும் முன் எந்த விளையாட்டு தன் குழந்தைக்குப்
பொருந்தும் என்பதனை கவனித்து விளையாடுவது சிறந்தது.
1. தரையில் பெரிய கட்டங்கள் பல வரைந்து, வண்ண சாக்பீஸ் கொண்டு அந்தந்த வண்ணங்களை ஒவ்வொரு கட்டத்திலும் எழுதலாம். அல்லது வண்ணக் காகிதத்தை தரையில் இடைவெளிவிட்டு ஒட்டலாம். பின்பு நாம் ஒவ்வொரு வண்ணத்தை சொல்லும்போதும் குழந்தை அந்த வண்ணத்தில் குதிக்க வேண்டும். ஆறு முதல் ஏழு வண்ணங்களை வைத்து விளையாட வேண்டும். இதனால் ஒரே நேரத்தில் குழந்தைகளுக்கு மிகவும் சுறுசுறுப்பான உடல் அசைவுகளும், மனம் ஒருங்கிணைப்பும் நிகழ்கிறது.
2. தொண்டையில் விழுங்க முடியாத அளவிற்கு அதே நேரத்தில் வாயினால் கவ்வும் அளவிற்கு பந்துகளை எடுத்து ஒரு கூடையில் நிரப்ப வேண்டும். பிறகு இன்னொரு கூடையை காலியாக வைக்க வேண்டும். ஒவ்வொரு பந்தையும் காலியான கூடையில் ஒவ்வொன்றாக வாயில் கவ்வி எடுத்துப் போடச் சொல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தையின் கவனம் ஒரு விஷயத்தில் குவிகிறது. கூடவே, ஒரு விஷயத்தை எடுத்தால் செய்து முடிக்கும் அளவிற்கு பொறுமையும் ஏற்படுகிறது.
3. ஒரு கூடையில் தக்காளிகளை வைத்துவிட்டு மறு கூடையை காலியாக வைக்க வேண்டும். ஒரு சிறிய கரண்டி கொண்டு அதில் ஒவ்வொரு தக்காளியாக எடுத்து இன்னொரு கூடைக்கு மாற்றச் சொல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கைகளில் உள்ள தசைகள் பலம் பெறுகிறது. கண்களும் கைகளும் ஒரே நேரத்தில் வேலை செய்கிறது.
4. ஓர் அட்டைப் பெட்டியை முழுவதும் மூடிவிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு பந்து நுழையும் அளவிற்கு ஓட்டை போட வேண்டும். ஒரு கூடை நிறைய பந்துகளை
அருகில் வைக்கவும். கூடையில் இருந்து குழந்தை ஒவ்வொரு பந்தாக எடுத்து அந்த அட்டைப்பெட்டி துளையினுள் போட வேண்டும். இவ்வாறு செய்யும்போது குழந்தையின் கவனம் ஒரு செயலில் குவியும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொன்றாக எடுத்துப் போடும்போது பொறுமையும் அதிகரிக்கும்.
5. வண்ணக் கிண்ணங்கள் நான்கினை எடுத்துத் தனித்தனியாக மேசையின் மேல் வைக்க வேண்டும். பிறகு, சிறிய கோலிகுண்டு அளவில் உள்ள பிம்பாம் பந்துகளை (Pimpom balls) கிண்ணம் இருக்கும் அதே நான்கு வண்ணங்களில் கலவையாக வேறு ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது குழந்தை ஒவ்வொரு குறிப்பிட்ட வண்ணப் பந்தையும் அதன் குறிப்பிட்ட வண்ணமுடைய கிண்ணத்தில் போட வேண்டும். இதனை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு வண்ணங்கள், வடிவங்கள் போன்றவற்றை எளிதாய் கற்றுத்தர முடியும். பிம்பாம் பந்துகள் இல்லையென்றால் வண்ணக் காகிதங்களை மடித்து வைத்து விளையாடலாம்.
6. ஒரு காலியான தண்ணீர் போத்தலில் (Water Bottle) பூ கட்டும் நூலினை மேலிருந்து கீழ்வரை அடர்த்தியாக இல்லாமல் ஆங்காங்கே இடைவெளி வரும் அளவிற்கு கட்ட வேண்டும். பிறகு கையிலிருக்கும் நூலின் முனையில் ஒரு விரல் அளவிலுள்ள பொம்மையைக் கட்ட வேண்டும். அதன் பின் குழந்தையை பொம்மை இருக்கும் நூலின் முனை கொண்டு அந்த நூலினை முற்றிலுமாக போத்தலில் இருந்து கழட்டச் சொல்ல வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கைகளும், கண்களும் ஒரே நேரத்தில் வேலை செய்கிறது. குழந்தையின் மூளை
ஒரு செயலில் நீண்ட நேரம் கவனம் செலுத்துகிறது.
விளையக்கூடிய பயன்கள்...
* குழந்தைகளால் தினசரி வேலைகளான உணவை எடுத்து உண்பது, தண்ணீர் குடிப்பது போன்ற வேலைகளை விளையாட்டுகளினால் எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது. உதாரணமாக, குழந்தை கரண்டி உபயோகித்து ஒரு பொருளை எடுக்கும்போது உணவினையும் அதே போல் எடுக்க முடிகிறது.
* இவ்வகை விளையாட்டுகள் கைகளில் உள்ள தசைகளை பலம் பெற செய்வதினால் எழுதும் பழக்கம் எளிதாய் வருகிறது.
* குழந்தைகள் இவ்வகை விளையாட்டுகளால் எளிதில் சோர்வடைவதன் மூலம் சீக்கிரத்தில் தூங்குவது, சொல் பேச்சு கேட்பது, அடம் பிடிக்காமல் இருப்பது போன்ற பல நன்மைகள் வருகிறது.
* குழந்தைகளால் எளிதில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடிகிறது. இதனால் அவர்களின் கற்றல் திறனும் மேம்படுகிறது.
* குழந்தைகளுக்கு இன்றைய சூழலில் ஓடி விளையாடும் வாய்ப்புகள் குறைந்திருப்பதால், இவ்வகை விளையாட்டுகள் குழந்தைகளின் உடல் அசைவுகளை அதிகரிக்கிறது.
* வண்ணங்கள், வடிவங்கள், எழுத்துக்கள், எண்கள் போன்ற பல கல்விசார் விஷயங்களை விளையாட்டு முறையில் கற்கவும் முடிகிறது.
இயன்முறை மருத்துவத்தின் பங்கு...
சிறு நுண்ணிய வேலைகளில் ஈடுபடுவதற்கு ‘பைன் மோட்டார்’ (Fine Motor) எனச் சொல்லப்படும் தசைகளின் திறன் தேவைப்படுகிறது. அதேபோலவே நாம் நடப்பதற்கு, ஸ்திரத்தன்மையோடு இருப்பதற்கு, வாகனம் ஓட்டுவதற்கு என பல பெரிய அசைவுகள் இருக்கும் வேலைகளை செய்வதற்கு ‘கிராஸ் மோட்டார்’ (Gross Motor) எனும் தசை திறன் தேவைப்படுகிறது.
இந்தத் திறன்களை இவ்வகை விளையாட்டு வழி உடற்பயிற்சிகளின் மூலம் இயன்முறை மருத்துவத்தில் மூளை வாதம் (Cerebral Palsy), டவுன் சிண்ட்ரோம் (Down’s Syndrome), நுண்ணுணர்வு ஒருங்கிணைப்பு (Sensory Processing Disorders) இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, துறுதுறு(ADHD) குழந்தைகளுக்கு, ஆட்டிசம் (Autism) பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பலருக்கும் வழங்கி வருகிறோம்.
இதனால் குழந்தைகளின் மூளை மண்டலம் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களால் ஓர் இடத்தில் அமர்ந்தபடி தங்களது தினசரி வாழ்வில் உள்ள வேலைகளை செய்ய முடிவதோடு, எளிதில்
படிக்கவும் முடிகிறது.எனவே, இவ்வகையான எளிமையான பயிற்சிகளை (இன்னும் பல எளிய பொருட்களை வைத்தும் செய்யலாம்.) நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, அவர்களின் மூளைத்திறன் பன்மடங்கு அதிகரிக்கச் செய்ய வழிவகை செய்திடுங்கள்.
தொகுப்பு : கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்


