Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எளிய அழகு குறிப்புகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பால், கேரட், ஆரஞ்சு சாற்றோடு சிறிது தேனையும் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் முகம் அழகாகும்.ஆரஞ்சுப் பழச்சாற்றை முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து பயிற்றம் மாவைக் கொண்டு தேய்த்து முகம் கழுவினால், முகம் பொலிவோடு விளங்கும்.பாதாம் பருப்பை பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து கழுவினால, முகம் பொலிவோடு விளங்கும்.குங்குமப் பூவுடன் சிறிது அதிமதுரத்தை கலந்து எட்டு மணி நேரம் நீரில் ஊற வைத்த பிறகு எடுத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிவர, முகத்தில் உள்ள கருமைநிறம் மாறி சிவப்பழகு ஏற்படும்.

முகம் பளிச்சென விளங்க, கடல்பாசி, பன்னீர், சந்தனஎண்ணெய் இம்மூன்றையும் சம அளவில் கலந்து முகத்தில் பூசி, பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால், புது அழகோடு முகம் மாறும். உதடுகள் கருப்பாக உள்ளவர்கள் பீட்ரூட்டை வெட்டி அதன் சாற்றை உதடுகளில் தேய்த்து வர, உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.சிலருக்கு உதடுகள் வன்மையாக இருக்கும். இவர்கள் மென்மையான உதடுகளைப் பெற வேண்டுமானால் அடிக்கடி வெண்ணெயைப் பூசி வந்தாலே போதும். உதடு கருத்தவர்கள் கொத்தமல்லிச் சாற்றை இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் தடவி வந்தால் கருமை நிறம் மாறும்.

உதட்டில் ஏற்பட்டுள்ள வெடிப்பு நீங்கி, அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், தினமும் பாலாடையைத் தேய்த்து வர வேண்டும்.பால்விட்டு ரோஜாப் பூக்களை அரைத்துப் பூசி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகி, முன்போல் அழகாகும்.நில ஆவாரைச் சாற்றோடு எலுமிச்சைச் சாற்றையும் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறும். பெண்களின் நகம் அழகாக இருக்க வேண்டும். சிலருக்கு சொரசொரப்புடன் இருக்கும். இவர்கள் நேரம் கிட்டும்போது நல்லெண்ணெயை விரல் நகம் என்று பூசி, நீவி விட்டாலே போதும். நகம் பளபளவென்று அழகாக மாறிவிடும்.

சில பெண்களுக்கு பல் சொத்தை போல, விரல் சொத்தையாகிப் போய் அசிங்கமாக இருக்கும். இவர்கள் கவலைப்படாமல், துத்தி இலையைப் பறித்து வந்து அதோடு சாம்பிராணியையும் சேர்த்து மைபோல அரைத்து பூசவேண்டும்.சில பெண்களுக்கு அடிக்கடி நகங்களில் பாதிப்புகள் வரும்.

கால்சியம் சத்து உடலில் குறைவாக இருப்பதுதான் இந்தப் பாதிப்பிற்குக் காரணம். அதனால், இவர்கள் கால்சியம் சத்து நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டாலே போதுமானது.சிலருக்கு அடிக்கடி நகங்கள் உடைந்து போகும். இவர்கள் ஆலிவ் எண்ணெயை, சிறிது சூடாக்கி, நகங்களில் தேய்த்து ஊற வைத்து வந்தாலே நகத்தைப் பாதுகாத்து விடலாம். நகச்சுத்தி வந்தவர், வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பைக் கலந்து அரைத்து அந்த விழுதை விரலில் வைத்துக் கட்டினால் விரைவில் குணமாகும்.

ஒருவருக்கு விரல்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், அவர்கள் உணவில் அடிக்கடி முருங்கைக் கீரை, பப்பாளி, மாம்பழம், பேரீச்சம் பழம் போன்றவைகளைச் சேர்த்துக் கொண்டலே போதும்.புருவத்தில் அடர்த்தியாக முடி இல்லாதவர்கள், அடிக்கடி புருவத்தில் விளக்கெண்ணெயைத் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக கருகருவென்று வளரும். இரவில் படுக்கச் செல்லும்முன் ஆலிவ் எண்ணெயைத் தடவிக் கொண்டால் புருவங்கள் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.

காலையிலும் மாலையிலும் மல்லாந்து படுத்துப் பாதங்களை உயரத் தூக்கி இரண்டு மூன்று நிமிடங்கள் அப்படியே நிறுத்திய பிறகு கீழே இறக்க வேண்டும். இவ்வாறு ஆறிலிருந்து பன்னிரண்டு தடவை செய்ய வேண்டும். இந்த எளிய பயிற்சியினால் கால்களுக்கு ரத்தம் பாயும், பலம் பெற்று சுறுசுறுப்பு உண்டாகும்.பாதங்கள் நமது உடலின் முழுப் பளுவையும் தாங்குகின்றன, அதனால், பாதங்களுக்கு ஏற்ற சரியான செருப்புகளையே அணிய வேண்டும். பாதங்களுக்குப் போதுமான ஓய்வளிப்பது அவசியம்.

கருமை நிறம் கொண்டவர்கள், தேவையான அளவில் பாதாம் பருப்பை எடுத்து அதை இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் காலை அரைத்து பாலேட்டில் கலந்து முகம் முதல் பாதம் வரை பூசி அரைமணி நேரம் கழித்தபின் குளித்து வந்தால் உடலின் நிறம் மாறிவிடும். அழகு கூடிவிடும்.

பருக்களை அழுத்தித் தேய்ப்பது, பிதுக்குவது போன்றவைகளைச் செய்தால் பருக்களில் உள்ள வெண்மையான கொழுப்பு வெளியேறி அந்த இடம் வடுவாகிக் கரும்புள்ளியாக நிலைத்துவிடும். அதனால் பருமை தேய்க்காமல் பிதுக்காமல் விட்டுவிட்டால், தானே கொழுப்பு சமநிலைபெற்றுச் சரியாகிவிடும். ஆகவே பருவை நிரடாதீர்கள்.

நாம் நாவிற்கு அடிமையாகி தேவைக்கு அதிகமாக உண்கிறோம். உண்ணும் உணவு அனைத்தும் சத்தாக மாறி உடலில் வலிமையை ஏற்படுத்துவது இல்லை. பலத்தைத் தருவதும் இல்லை.

உணவின் அளவில் ஒரே சீரான நிலை உடலைப் பலவீனப்படுத்துவதில்லை. உணவின் அளவைக் குறைப்பது உடலின் எடையைக் குறைத்து விடாது.அதுபோன்று உடலில் கொழுப்பு ஒரு முக்கிய எரி பொருள், உடற்சூட்டைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாத சாதனம். அதே நேரம் கொழுப்பு அதிக அளவில் சேர்ந்தால் அதுவே இடையூறாக மாறிவிடும்.

எனவே, தினசரி உணவில் அரிசியும், கோதுமையும் தனியாகவும் அல்லது இரண்டும் கலந்தும் முக்கிய உணவாய்ச் சாப்பிடலாம். இவைகளுடன் கேழ்வரகு, கொத்துக் கடலை, துவரை, கொள்ளு, பாசிப்பயறு, நிலக்கடலை இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு பருப்பு வகைகளும் மிதமாய் கூடவே சேர்க்கவும். காய்கறிகள் முக்கியமாக கசப்பு, துவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளவற்றையே அதிகம் சேர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவே உடலை அழகாக வைத்திருக்கும்.