நன்றி குங்குமம் டாக்டர்
திரையில் ஒவ்வொரு முறை தோன்றும்போது, ‘எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார்?’ என்று ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் நடிகைகளில் ராஷி கண்ணாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தொடர்ந்து பயணித்து வரும் இவர், தனது தோற்றத்துக்காக மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்துக்காகவும் ஃபிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்தக் கட்டுக்கோப்பான தோற்றத்துக்குப் பின்னால் இருக்கும் கடுமையான வொர்க்கவுட் மற்றும் டயட் குறித்து பகிர்ந்து கொண்டவை.
வொர்க்கவுட்ஸ்
வாரத்தில் 6 நாட்களும் வெவ்வேறு விதமான உடற்பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்பவள் நான். அந்தவகையில்,
ஸ்ட்ரென்த் டிரைனிங்:
தசைகளை வலுவாக்க ஸ்குவாட்ஸ் (Squats), லெஞ்சஸ் (Lunges), டெட்லிஃப்ட்ஸ் (Deadlifts) போன்ற பளுதூக்கும் பயிற்சிகள்.
கார்டியோ மற்றும் HIIT:
உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க ஓட்டம் (Running), சைக்கிள் ஓட்டுதல், கயிறு குதித்தல் மற்றும் அஜிலிட்டி டிரில்ஸ் (Agility drills) போன்ற தீவிர கார்டியோ பயிற்சிகள்.
யோகா மற்றும் பைலேட்ஸ்:
உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் மன அமைதிக்காக தினமும் காலையில் யோகா மற்றும் பைலேட்ஸ் பயிற்சிகளைச் செய்கிறேன்.
மேலும், என்னுடைய ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு உடலை டோன் செய்ய வெயிட் டிரெய்னிங் ஸ்பிளிட் ரொட்டீன் மற்றும் சர்க்யூட் பயிற்சிகள் போன்றவற்றையும் தேவைக்கேற்றவாறு மாற்றிக் கொள்கிறேன். என்னை பொருத்தவரை, வொர்க்கவுட் எனும்போது நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதைவிட தீவிரமான ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன். அதுவே, என்னை வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் சகிப்புத்தன்மையுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
டயட்
ஃபிட்னெஸ் என்றாலே உணவை வெகுவாகக் குறைத்துக் கொள்வது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. இது தவறான அணுகுமுறையாகும். ஏனென்றால் கடுமையான பட்டினி டயட்கள் நம் உடலை சோர்வடைய செய்துவிடும். எனவே, எளிமையான சமச்சீர் உணவு முறையை பின்பற்றுவதே சரியாக
இருக்கும்.
அதுபோன்று, திரைத்துறையில் இருக்கும் பலரும், அவ்வப்போது உடல் எடையை கூட்டி குறைக்க வேண்டி இருப்பதால் டயட் விஷயத்தில் பல சவால்களை சந்திக்கின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் அல்லது பாடலுக்காக மேற்கொள்ளப்படும் குறுகிய கால உடல் மாற்றத்தை, அன்றாட வாழ்க்கைக்கான உணவுமுறையுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.
ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் தசைகளை வளர்க்க முட்டை மற்றும் சிக்கன் போன்ற அசைவ உணவுகள் அவசியம் என்று நினைத்தேன், பின்னர் தாவர அடிப்படையிலான உணவுமுறையைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கு மாறினேன். அதே நேரத்தில், ஒவ்வொருவரின் ஊட்டச்சத்து தேவைகளும் வேறுபடும் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்கிறதா என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம்.
அந்தவகையில், எனது டயட்டை பொறுத்தவரை, சத்தான வீட்டு உணவுகளையே பெரும்பாலும் எடுத்துக் கொள்கிறேன்.
காலை பொழுது விடிந்ததும் வெதுவெதுப்பான நீர் மற்றும் ஊறவைத்த பாதாம் பருப்புகளுடன் எனது நாளைத் தொடங்குகிறேன். காலை உணவாக முட்டையின் வெள்ளைக்கரு, அவல் உப்புமா அல்லது இட்லி போன்றவற்றை ஒரு ஸ்பூன் நெய்யுடன் சாப்பிடுகிறேன்.
மதிய உணவில் அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகள், சுண்டல் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்கிறார்.
மாலை மற்றும் இரவில் ஃப்ரெஷ்ஷான பழங்கள், இரவு உணவிற்குப் பருப்பு (Dal), காய்கறி கூட்டு மற்றும் சில ரொட்டிகளை எடுத்துக் கொள்கிறேன். மேலும், வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்க்கிறேன். இதுதான் எனது டயட் ரகசியம்.
அதுபோன்று ஆரோக்கியமான உடலுக்கு தூக்கத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. உடற்பயிற்சி, உணவு என இரண்டு விஷயங்களுடன் நின்றுவிடவில்லை. அதனால், குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கமும் மிகவும் அவசியம். நாம் எவ்வளவு எடையில் இருக்கிறோம் என்பதைவிட நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.
பியூட்டி
அழகான சருமத்துக்கு வெளிப்புறப் பராமரிப்பு மட்டும் போதாது. சமச்சீர் உணவு உடலுக்கும் சருமத்துக்கும் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. சருமத்தின் இயற்கையான தோற்றத்துக்கு உடலின் நீர்ச்சத்தும் முக்கியமானது. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கு உதவுவதுடன், சருமம் வறண்டு போகாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும், சருமப் பராமரிப்பு முறையைப் பின்பற்றுவது முக்கியம். குறிப்பாக முகத்தை சுத்தமாக வைத்திருப்பது, சருமத்தின் தன்மைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது மற்றும் சன்ஸ்கிரீன் முக்கியம். வெயில், புற ஊதாக்கதிர்கள், சருமத்தின் முன்கூட்டிய முதுமை போன்றவற்றிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் உதவுகிறது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், எனது தினசரி சருமப் பராமரிப்பின் ஒரு பகுதியாகவும் சன்ஸ்கிரீன் இருக்கிறது.
தொகுப்பு: - ஸ்ரீ தேவிகுமரேசன்


