Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம் மாரடைப்பை தவிர்ப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மாரடைப்பு பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பது நமக்குத் தெரியும்... ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தடுக்கக்கூடியவை என்பது நமக்குத் தெரியுமா? இன்று இதய நோய்களால் ஆண்டுக்கு 2 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்த இறப்புகளில் சுமார் 80 சதவீதம் தடுக்கக்கூடிய அல்லது தகுந்த முறையில் கட்டுப்படுத்தக்கூடிய நோய்களால் ஏற்படுகின்றன.

எனவே, இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டின் இதய தினத்தில், “ஒரு துடிப்பைக்கூடத் தவறவிடாதீர்கள் என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட உள்ளது. இது இந்த விழிப்புணர்வுப் பிரச்சார அறிகுறிகளை அறிதல், இதயத்தைப் பாதுகாத்தல் மற்றும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய சிகிச்சை என்ற மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகும் என்கிறார் மூத்த இதயவியல் மருத்துவர் துர்காதேவி.

நோயறிதல் மற்றும் சிகிச்சையில் பெரிய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், மக்கள் தொகை பெருக்கம், வயது முதிர்வு மற்றும் அதிகரிக்கும் ஆபத்துக் காரணிகளால் இதயப் பிரச்னைகள் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவுமே இதுபோன்ற தினங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கமாக தெரிந்துகொள்வோம்.

ஆபத்துக் காரணிகளும் தடுக்கும் வழிகளும்

52 நாடுகளில் உள்ள மாரடைப்பு நோயாளிகளைப் பரிசோதித்து எடுக்கப்பட்ட இண்டர்ஹார்ட் என்ற ஆய்வில், முதல்முறை வரும் 90 சதவீத மாரடைப்புகளுக்கு மாற்றக்கூடிய ஒன்பது ஆபத்துக் காரணிகளே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவை: உயர் ரத்த அழுத்தம், அசாதாரண கொலஸ்ட்ரால் அளவு, புகைபிடித்தல், நீரிழிவுநோய், தொப்பை, மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளாதது மற்றும் அதிக மதுப்பழக்கம் ஆகியவை ஆகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

உயர் ரத்த அழுத்தம் என்பது மிகவும் ஆபத்தான ஒரு காரணியாகும். ஏனெனில் இதற்குப் பொதுவாக எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை, மேலும் பலரும் உயர் ரத்த அழுத்தத்தை ஒரு நோயாகவே கருதுவதில்லை. காய்ச்சல் வந்த ஒருவர் இரண்டு நாட்களுக்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவார். ஆனால் 170/100 என்ற அளவில் ரத்த அழுத்தம் உள்ள ஒருவர், அதைப்பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் பத்து ஆண்டுகளாகச் சுற்றி வரலாம். ஏனென்றால் இது எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாக இருக்கும்; அதனால்தான் இது “அமைதியான கொலையாளி’’ என்று அழைக்கப்படுகிறது.

உயர்ரத்தஅழுத்தம் உள்ள பெரியவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினருக்கு தங்களுக்கு அந்தப் பிரச்னை இருப்பதே தெரிவதில்லை. 40 சதவீதத்தினருக்கு மட்டுமே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களிலும் ஐந்தில் ஒரு பங்கினர்தான் சரியான முறையில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.உயர்ரத்தஅழுத்தத்தால் ஆண்டுக்கு 1 கோடிக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. உலகிலேயே எளிதாகத் தடுக்கக்கூடிய இறப்புகளுக்கான முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். 40 வயதிற்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்வது, மருத்துவத் துறையில் மிகக் குறைந்த செலவில் நமக்குக் கிடைக்கும் சிறந்த காப்பீடாகும்.

ரத்தத்தில் உள்ள அசாதாரண கொலஸ்ட்ரால் அளவுகள் - அதாவது குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு (கெட்ட கொலஸ்ட்ரால்) அதிகரிப்பது மற்றும் அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு (நல்ல கொலஸ்ட்ரால்) குறைவது ஆகியவை முக்கியமான ஆபத்துக் காரணிகளாகும். கொழுப்புப் பரிசோதனை மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதிகரித்த எல்.டி.எல் கெட்ட கொழுப்புக்குத் தீவிர சிகிச்சை அளிப்பது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்களால் ஏற்படும் இறப்பு அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். கொழுப்பு அளவைச் சரியாகப் பராமரிப்பதே நவீன இதய நோய் தடுப்பு முறையின் அடிப்படையாகும்.

புகைபிடித்தல் - புகைபிடித்தல் மற்றும் மற்றவர்கள் விடும் புகையைச் சுவாசிப்பது ஆகியவை மிக இளம் வயதிலேயே ஏற்படும் 20 சதவீத இதய நோய் மரணங்களுக்குக் காரணமாகின்றன. இதய ஆரோக்கியத்திற்காக ஒரு நபர் எடுக்கக்கூடிய மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள நடவடிக்கை புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுவதுதான்.சர்க்கரைநோய் - இந்தியாவில் சர்க்கரைவியாதி பெரும்பாலும் இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. மேலும் இது இதயம் தொடர்பான மற்ற பல ஆபத்துக் காரணிகளுடன் இணைந்து, வாழ்நாள் முழுவதும் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

சர்க்கரை வியாதி உள்ள இந்தியர்களுக்குப் பல மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களை விட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதய தமனி நோய் வந்துவிடுகிறது. சரியான மருந்துகள், ஆரோக்கியமான உணவுகள் (காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள்) மற்றும் முறையான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் ரத்தச் சர்க்கரை அளவைக் கண்டிப்பாகக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் சமமான அளவில் முக்கியமானவை. வாரம் குறைந்தது 150 நிமிடங்களுக்கு வேகமான நடைப்பயிற்சி போன்ற மிதமான ஏரோபிக் உடற்பயிற்சிகளையும், வாரத்திற்கு இரண்டுமுறை தசை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் (strength training) செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவை உண்பதும், அதே சமயம் உப்பு, கெட்ட கொழுப்புகள் மற்றும் அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைப்பதும் நீண்ட கால இதய ஆரோக்கியத்திற்கு உதவும். அதிக மதுப் பழக்கம், போதிய தூக்கமின்மை மற்றும் கட்டுப்படுத்தப்படாத மன அழுத்தம் ஆகியவை ஆபத்தை மேலும் அதிகரிக்கும்.

ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், கெட்ட கொழுப்பை குறைத்தல், புகைப்பிடிப்பதை நிறுத்துதல், உடல் எடையைப் பராமரித்தல், உடற்பயிற்சி, நல்ல உணவு, மன அழுத்தத்தைக் கையாளுதல் ஆகியவை மாரடைப்பு அபாயத்தை வெகுவாக குறைக்கும்.ஸ்காண்டிநேவிய கற்றுத்தரும் பாடம் ஸ்வீடன், நார்வே, டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள், நோய் தடுப்பு முறைகள் (உதாரணமாக, கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளின் அதிகப் பயன்பாடு, புகைபிடிப்போர் எண்ணிக்கை குறைவு), வலுவான பொது சுகாதார அமைப்புகள் மற்றும் விரைவான சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளைத் தொடர்ந்து குறைத்து வந்துள்ளன.

இந்தியாவில் கீழ்க்கண்டவற்றின் மூலம் இதனை அடைய முடியும்:

*ஆபத்துக் காரணிகள், அறிகுறிகள், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

*ரத்தஅழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்தல்.

*ஆபத்துக் காரணிகளுக்குத் தகுந்த சிகிச்சை அளித்தல்.

*அவசர மாரடைப்பு சிகிச்சைக்கான மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்.

*உப்பு, டிரான்ஸ் கொழுப்புகள், புகையிலை மற்றும் காற்று மாசைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்டங்களை உருவாக்குதல்.

*பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவு, ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பு, வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சி (அதில் இரண்டு முறை தசை வலுப்படுத்தும் பயிற்சி), புகையிலைப் பழக்கம் இன்மை, நல்ல தூக்கம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் மருத்துவப் பரிசோதனை அளவுகளை தெரிந்து வைத்திருங்கள். இவற்றை கடைபிடித்தாலே மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

தொகுப்பு: மூத்த இதயவியல் மருத்துவர் துர்காதேவி