Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மூளை ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மூளை மற்றும் நரம்பியல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மூளை பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தடுத்து சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 அன்று உலக மூளை தினம் அனுசரிக்கப்படுகிறது. மூளை, முதுகுத்தண்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு, சரியான நேரத்தில் மருத்துவ உதவி பெறுவது மற்றும் நரம்பியல் சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்த தினம் வலியுறுத்துகிறது. மூளை ஆரோக்கியத்திற்கு வாழ்நாள் முழுவதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மக்களை ஊக்குவிப்பதே, 2026 ஆம் ஆண்டின் உலக மூளை தினத்தின் முக்கிய நோக்கமாகும் என்கிறார் மூத்த நரம்பியல் நிபுணர், மருத்துவர் தீபா அவதானி. இதுகுறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

மனித மூளை மிகவும் சிக்கலான மற்றும் முக்கியமான உறுப்பு ஆகும். ஆனால், அதன் ஆரோக்கியம் குறித்து பெரும்பாலும் முறையாக கவனிக்கப்படுவதில்லை - குறிப்பாக பெண்களிடம். பெண்களின் மூளை ஆரோக்கியத்திற்குத் தனி கவனம், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவை தேவை என்ற முக்கியமான உண்மையை இந்த உலக மூளை தினத்தில் நாம் வலியுறுத்த வேண்டும்.

ஏனெனில், ஒரு பெண்ணின் மூளை தொடர்ந்து மாறக்கூடிய தன்மையைக் கொண்டது. பதின்ம வயது, மகப்பேறு காலம், கர்ப்பக் காலம், மாதவிடாய் நிற்றல் மற்றும் முதுமை என ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மூளையின் செயல்பாட்டில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் அவர்களின் உணர்ச்சிகளை மட்டுமின்றி, நினைவாற்றல், கவனம், தூக்கம் மற்றும் ஒட்டுமொத்த சிந்திக்கும் திறனையும் பாதிக்கின்றன. இருப்பினும், பெண்களின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளில் மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது.

பல நரம்பியல் பாதிப்புகளுக்கு பெண்கள் எளிதில் ஆளாகிறார்கள் என்பதை அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன. ஆண்களை விடப் பெண்களுக்கு ஒற்றைத்தலைவலி மூன்று மடங்கு அதிகமாக ஏற்படுகிறது; இது பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்களோடு நெருங்கிய தொடர்புடையது. ‘மல்டிபிள் ஸ்களீரோசிஸ்’ போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் வரும் நரம்பியல் நோய்களும் பெண்களிடமே அதிகம் காணப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, உலகளவில் அல்சைமர் எனப்படும் ஞாபகமறதி நோய் பெண்களையே அதிக அளவில் பாதிக்கிறது என்பது மிகவும்

கவலைக்குரிய விஷயமாகும்.

ஆரம்பகால அறிகுறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதுதான் இதில் உள்ள மிகப்பெரிய சவாலாகும். தொடர்ச்சியான தலைவலி, மூளைச் சோர்வு, மறதி, மயக்கம் அல்லது தூக்கமின்மை ஆகியவை மன அழுத்தம் அல்லது உடல் சோர்வு காரணமாக ஏற்படுவதாகக் கருதப்பட்டுச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு தாமதமாக உணர்வதால், ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புகள் தவறிப்போகின்றன.

நவீன வாழ்க்கை முறை காரணிகள் இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன. இன்றைய பெண்களுக்கு வேலை, குடும்பம், குழந்தைகளைப் பராமரிப்பது என பல்வேறு பொறுப்புகள் உள்ளன். பல நேரங்களில் தங்களது சொந்த ஆரோக்கியத்தை தியாகம் செய்து இதைச் செய்கிறார்கள். நாள்பட்ட மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை காலப்‑போக்கில் மூளையின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

மூளை ஆரோக்கியம் என்பது நோய்கள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல; இது ஒருவரின் வேலைத்திறன், உணர்ச்சிப்பூர்வமான உறுதி மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு மையமாக உள்ளது. இதில் உள்ள ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், எளிமையான மற்றும் தொடர்ச்சியான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பல நரம்பியல் பாதிப்புகளைத் தடுக்கலாம் அல்லது தள்ளிப் போடலாம்.இதில் தூக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆழ்ந்த தூக்கத்தின்போதுதான், மூளை தன்னைத்தானே சரிசெய்து கொள்கிறது, தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது மற்றும் நினைவாற்றலை வலுப்படுத்துகிறது. இருந்தபோதிலும், பெண்களிடையே தூக்கமின்மைப் பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது.

ஊட்டச்சத்தும் அதே அளவுக்கு முக்கியமானது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சீரான உணவு மூளையின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவுகிறது. குறிப்பாக, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 (B12) போன்ற பொதுவான குறைபாடுகளை சரிசெய்வது மிகவும் அவசியம். ஏனெனில், இவை சோர்வு, கவனக்குறைவு மற்றும் சிந்திக்கும் திறன் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

தொடர்ச்சியான உடற்பயிற்சி மூளைக்கு பெரிதும் பயனளிக்கிறது. உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மூளையின் திறனை அதிகரிக்கிறது மற்றும் பக்கவாதம், ஞாபகமறதி நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது. வாரத்தில் பெரும்பாலான நாட்கள் 30 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளைச் செய்வது கூட ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவுகின்றன. புத்தகங்கள் படிப்பது, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அல்லது மற்றவர்களுடன் கலந்துரையாடுவது போன்றவற்றின் மூலம் மனதை சுறுசுறுப்பாக வைத்திருப்பது காலப்போக்கில் மூளையின் செயல்பாட்டை வலுப்படுத்துகிறது.

முக்கியமாக, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் ஆரம்பகால அறிகுறிகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அடிக்கடி வரும் தலைவலி, ஞாபகமறதி, தடுமாற்றம் அல்லது பார்வைக் கோளாறுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வது சிறந்த தீர்வுகளுக்கும், மேம்பட்ட வாழ்க்கைச் சூழலுக்கும் வழிவகுக்கும்.

இந்த உலக மூளை தினத்தில் நாம் கூறுவது என்னவென்றால், மூளை ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும், அதனைப் புறக்கணிக்கக் கூடாது. பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஏனெனில், ஒரு பெண்ணின் மூளை வலிமையாக இருக்கும்போது, அவளால் வழிநடத்தவும், பராமரிக்கவும் மற்றும் சிறப்பாக முன்னேறவும் முடியும். அவளது பலம் அவள் வகிக்கும் பொறுப்புகளில் மட்டுமல்ல, அவளது மன ஆரோக்கியத்திலும் உள்ளது. ஆரோக்கியமான மூளைதான் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான அடித்தளம். ஒவ்வொரு பெண்ணும் அதற்கு தகுதியானவரே என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

தொகுப்பு: - ஸ்ரீ தேவி