நன்றி குங்குமம் டாக்டர்
பரம்பரை, முதுமை, பிரசவத்திற்கு பின், ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள், மாசு, பிசிஓடி, மாதவிடாய் நின்ற நிலை, உடலின் வெப்பம், மனச்சோர்வு, தைராய்டு, புழுவெட்டு, பொடுகு, காளாஞ்சகப்படை, பேன், ஈரு மற்றும் எக்ஸிமா போன்ற தோல்நோய்கள், புற்றுநோய் சிகிச்சையில் உள்ள கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி, வாதபித்த கபங்களின் நிலையை அறியாமல் அதற்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சோப்பு, ஷாம்பூ எண்ணெய்கள் உபயோகப்படுத்துதல், ஹெல்மெட், தலை விக்குகள் அதிகமாகப் பயன்படுத்துதல், அடிக்கடி தலைக்குக் குளிக்காமல் தலையில் அழுக்கு சேரவிடுவது ஆகிய காரணங்களினால் கூந்தல் வலுவிழந்து கொட்டத் தொடங்கிவிடும்.
உணவே மருந்து
பொதுவாக, கூந்தலின் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, நாம் உண்ணும் உணவு எப்போதும் அறுசுவை கலந்த உணவாக இருக்க வேண்டும். புதினா, கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி ஆகியவை வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்குத் தினமும் ஒரு நெல்லிக்காய், சப்போட்டா, பேரீச்சம்பழம், ஆப்பிள், பப்பாளி போன்ற பழங்களை உண்ணலாம். மோர், நெய், வெண்ணெய் போன்றவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை பொடியை தினமும் சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்கள் வாரம் இரண்டுமுறை இளநீர் குடிக்கலாம். நீர்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளரிப் பிஞ்சு கேரட், பீட்ரூட், கொத்துமல்லி, கறிவேப்பிலை இவைகளை சாலட் செய்து சாப்பிடலாம்.
எண்ணெய் மசாஜ்
கூந்தலை பராமரிப்பது என்பது ஒரு கலை. அதில் முதல் கடமை வாரம் ஒரு முறையாவது தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலையில் பத்து நிமிடமாவது எண்ணெய் மசாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்கும்பொழுது வேர்கள் உறுதியாகும். கூந்தல் நன்றாக அடர்த்தியாக கருகருவென்று வளரும்.
வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் முறை
சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, அதனுடன் கரிசாலங்கண்ணி இலைச்சாறைச் சேர்த்து சமஅளவு நல்லெண்ணெய் கலந்த காய்ச்சி வடிகட்டி தினமும் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தலாம்.
இதே தைலத்தில் வெட்டிவேர், விலாமிச்சைவேர், உலர்ந்த ரோஜா மொக்கு, சந்தன சிராய்கள், உலர்ந்த செம்பருத்திப்பூ ஆகியவை சேர்த்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவ உடலில் உஷ்ணம் குறைந்து முடி நன்றாக வளரும்.
தேங்காய் எண்ணெயுடன் மருதாணி இலைச்சாறு மற்றும் அவுரி இலை சாறு சேர்த்து காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தேய்த்து வர, தலைமுடி கருகருவென வளரும், நரைமுடி தெரியாது.
தொகுப்பு: - தவநிதி



