Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

35 வயதிற்குப் பிறகான கர்ப்பம் இனி ஆபத்தில்லை!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்று பல பெண்களுக்கு, தாய்மை என்பது அவர்களின் இருபதுகளில் மட்டுமே நிகழும் ஒரு விஷயமாக இருப்பதில்லை. அதிகரிக்கும் கல்வி வாய்ப்புகள், தொழில் சார்ந்த லட்சியங்கள், நிதித் திட்டமிடல் மற்றும் கருவுறுதல் சிகிச்சைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவற்றால், பல பெண்கள் 35 வயதிற்குப் பிறகு குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தாய்மையடையும் வயது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நவீன மகப்பேறு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் இந்த கர்ப்ப காலங்களை மருத்துவர்கள் கையாளும் விதத்தை முற்றிலும் மாற்றியுள்ளன. இதனால், முன்பை விட இப்போது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதை மிக எளிதாக உறுதி செய்ய முடிகிறது என்று முதுநிலை மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் நிகாத் நஸ்ரின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறுகையில்,

சில காலங்களுக்கு முன்பு வரை, 35 வயதிற்குப் பிறகான கர்ப்பம் என்றாலே அது “அதிக ஆபத்து” நிறைந்தது என்ற நிலை இருந்தது. ஆனால், இன்று அந்தப் பார்வை கணிசமாக மாறியுள்ளது. வயது அதிகரிக்கும்போது கூடுதல் மருத்துவக் கண்காணிப்பு தேவை என்பது உண்மைதான்; ஆனால், அது மட்டுமே ஒருவரின் முழு கர்ப்ப காலத்தையும் தீர்மானிப்பதில்லை. மகப்பேறு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள சிறப்பான முன்னேற்றங்கள், சிறந்த பரிசோதனை முறைகள் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பட்ட கவனிப்பு ஆகியவற்றின் மூலம், 35 வயதிற்கு மேற்பட்ட பெரும்பாலான பெண்கள் ஆரோக்கியமான கர்ப்ப காலத்தை அனுபவித்து, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடிகிறது.

இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், 35 வயதிற்குப் பிறகான கர்ப்பம் என்பது ஒரு அசாதாரணமான விஷயமே அல்ல. இதற்கு முறையான திட்டமிடல், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் வயதை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ற சரியான கவனிப்பு ஆகியவை மட்டுமே தேவை.

இருப்பினும், பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்னைகள், உடல்பருமன் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இந்தக் காரணங்களால் கர்ப்ப காலத்தில் சில சிக்கல்கள் (உதாரணமாக: கர்ப்பகால சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு எனப்படும், குறைப்பிரசவம் அல்லது சிசேரியன் தேவைப்படுதல்) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகரிக்கலாம். மேலும், வயது கூடும்போது கருமுட்டையின் தரம் படிப்படியாகக் குறைவதால், கருச்சிதைவு மற்றும் ‘டவுன் சிண்ட்ரோம்’ போன்ற மரபணு ரீதியான குறைபாடுகள் ஏற்படுவதற்கான

அபாயமும் அதிகரிக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, கடந்த இருபது ஆண்டுகளில் நவீன மகப்பேறு மருத்துவம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இப்போது, தாய்மைக்கான பயணம் பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. கர்ப்பம் தரிக்கும் முன் வழங்கப்படும் ஆலோசனைகள் பல வழிகளில் உதவுகின்றன.

இதன் மூலம் கருவின் ஆரோக்கியத்திற்குத் தேவையான ‘போலிக் ஆசிட்’ மாத்திரைகளைப் பரிந்துரைக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்களை ஊக்குவிக்கலாம். இந்த முறையான கவனிப்பு மற்றும் திட்டமிடல், கர்ப்ப காலம் எவ்வித சிக்கலுமின்றி ஆரோக்கியமாக அமைவதற்குப்

பெரிதும் உதவுகிறது.

35 வயதிற்குப் பிறகான ஒவ்வொரு கர்ப்பத்தையும் ஒரே மாதிரியாகக் கையாளாமல், நவீன மருத்துவம் அந்தப் பெண்ணின் ஒட்டுமொத்த உடல்நலம், முந்தைய கர்ப்பங்கள், குடும்ப மருத்துவ பின்னணி, வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட அபாயக் காரணிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்கிறது. இது ஒவ்வொரு தாயின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப பரிசோதனைகள், கண்காணிப்பு மற்றும் சிகிச்சைத் திட்டங்களை வடிவமைக்க உதவுகிறது. இதன் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த பலன்கள் கிடைக்கின்றன.

கர்ப்பம் உறுதியானதும், முந்தைய தலைமுறைகளுக்குக் கிடைக்காத மேம்பட்ட அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம், சிறந்த ரத்தப் பரிசோதனைகள் மற்றும் மிகத் துல்லியமான பரிசோதனை முறைகள் மூலம் இன்றைய கர்ப்பிணித் தாய்மார்கள் அதிக நன்மைகளைப் பெறுகிறார்கள். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் என்ஐபிடி என்னும் நவீனப் பரிசோதனைகள் மூலம், குழந்தைக்கு மரபணு ரீதியான குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். இது பெற்றோர் தகுந்த நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க

உதவுகிறது.

ஆரம்பகால ஸ்கேன்கள், குழந்தையின் வளர்ச்சியையும் இதயத் துடிப்பையும் உறுதி செய்கின்றன. அனாமலி ஸ்கேன், குழந்தையின் உறுப்புகளையும் அதன் வளர்ச்சியையும் துல்லியமாகப்

பரிசோதிக்கிறது.

டாப்ளர் ஸ்கேன் குழந்தைக்கும் நச்சுக்கொடிக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தை மதிப்பிட உதவுகிறது. இதன் மூலம் பிரச்னைகள் தீவிரமடைவதற்கு முன்பே மருத்துவர்களால் அவற்றைக் கண்டறிந்து தடுக்க முடிகிறது.

மேலும், தற்போதைய கர்ப்பகாலப் பராமரிப்பு என்பது பல்துறை மருத்துவ நிபுணர்கள் இணைந்து செயல்படும் ஒரு கூட்டு முயற்சியாக மாறியுள்ளது. ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர்கள் கீழ்க்கண்ட நிபுணர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்:

பொது மருத்துவர்கள், உட்சுரப்பியல் நிபுணர்கள் (சர்க்கரை, தைராய்டு சிறப்பு மருத்துவர்கள்), கரு வளர்ச்சி நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் என அனைவரும் இணைந்து கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் முழுவதும் ஒரு முழுமையான கவனிப்பை உறுதி செய்கிறார்கள்.

ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு மற்றும் குழந்தையின் வளர்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும். சர்க்கரை நோய் மேலாண்மை, கருவைக் கண்காணிக்கும் முறைகள், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் மயக்க மருந்துத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை தாய்க்கும் குழந்தைக்கும் இன்னும் சிறப்பான பாதுகாப்பை வழங்குகின்றன.

35 வயதிற்குப் பிறகு கர்ப்பம் தரித்தால், கண்டிப்பாக ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டுமா என்று பல பெண்கள் சந்தேகத்துடன் கேட்கின்றனர். அது அவசியமில்லை. பிரசவமுறை என்பது தாயின் உடல்நலம், குழந்தையின் நிலை மற்றும் பிரசவ வலியின் முன்னேற்றம் ஆகியவைகளைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, வயதை மட்டும் வைத்து அல்ல. 35 வயதிற்கு மேற்பட்ட பல பெண்கள் முற்றிலும் இயல்பான முறையில் சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்.

இன்று, 35 வயதிற்குப் பிறகான கர்ப்பம் என்பது முன்பு போல எந்தவிதமான பயத்துடனும் பார்க்கப்படுவதில்லை. கர்ப்பத்தை ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் பதிவு செய்வது, முறையான கர்ப்பகாலக் கவனிப்பு, அறிவியல் ரீதியான மருத்துவச் சிகிச்சை மற்றும் தேவைப்படும்போது உடனடியாக அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவற்றின் மூலம், பெரும்பாலான பெண்கள் எவ்வித சிக்கலுமின்றி ஆரோக்கியமான கர்ப்ப காலத்தை அனுபவிப்பதோடு, ஆரோக்கியமான

குழந்தைகளையும் பெற்றெடுக்கின்றனர்.

ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர்கள் கீழ்க்கண்ட நிபுணர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்

தொகுப்பு: மகளிர் மருத்துவர் நிகாத் நஸ்ரின்