நன்றி குங்குமம் டாக்டர்
ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்பது மார்பெலும்பைத் திறந்து, இதயத்தைத் திறந்து, அதன் செயல்பாட்டை நிறுத்தி மேற்கொள்ளும் மிக நுண்ணிய அறுவை சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மீட்புப் பயணத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களைப் பற்றியும் - அறுவை சிகிச்சைக் காயத்தைப் பராமரிப்பது, உணவு மற்றும் மருந்துகளை முறையாகக் கையாள்வது, இறுதியாக அன்றாட செயல்பாடுகளுக்கு மீண்டும் திரும்புவது ஆகியவை குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் முதுநிலை நிபுணர், இதய மார்பறை மற்றும் ரத்தநாள அறுவைசிகிச்சை மருத்துவரான பி. பாலசுப்ரமணியன்.
பெரும்பாலான பைபாஸ் அறுவை சிகிச்சைகள், இதயம் தொடர்ந்து துடித்துக்கொண்டிருக்கும் நிலையில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முறையில் இதயத்தின் செயல்பாடு தொடர்ந்த
படியே ரத்தக் குழாய்களை இணைக்கும் அனஸ்டமோசிஸ் (Anastomosis) செய்யப்படுகிறது.
இது ஒரு முக்கியமான அறுவை
சிகிச்சை முறையாகும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில வாரங்கள், வேகம் தவிர்ப்பதும், பொறுமை காப்பதும் அவசியமாகும். இதிலிருந்து குணமடைய குறைந்தபட்சம் 4 முதல் 6 வாரம் வரை ஆகலாம். ஆனால், அறுவை சிகிச்சை என்பது சிகிச்சைப் பயணத்தின் முதல் பாதி மட்டுமே என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். நோயாளி வீடு திரும்பிய பிறகு, இன்னும் முழுமையாக குணமடைந்து கொண்டிருக்கும் இதயத்துடன் அன்றாட வாழ்க்கையை மீண்டும் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தக் கட்டத்தில் பல்வேறு சந்தேகங்களும், நிச்சயமற்ற நிலைகளும் ஏற்படலாம்.
அறுவைசிகிச்சை நிறைவடையும் போது மார்பெலும்பு கவனமாக மீண்டும் இணைக்கப்படுகிறது; முழுமையாகக் குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆகலாம். இந்த காலகட்டத்தில், அதனை ஒரு உடைந்த எலும்பாகவே கருதி கவனமாகப் பராமரிக்க வேண்டும். கடினமான வேலைகளைச் செய்வதையோ, அதிக எடையைத் தூக்குவதையோ தவிர்க்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளும்தான் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதன் பலனை முழுமையாக உறுதிசெய்யும்.
மறுபுறம், நடைப்பயிற்சி ஒரு சிறந்த மருந்து. மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதல் சில நாட்களிலேயே, அறையினுள் சில நிமிடங்கள் மெதுவாக நடக்கத் தொடங்கலாம்; பின்னர் நடக்கும் தூரத்தை படிப்படியாக அதிகரிக்கலாம். நடப்பது நுரையீரலைச் சுத்தமாக வைத்திருக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும். மெதுவான நடமாட்டம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஓய்வும், போதுமான தூக்கமும் அவசியம்.
காயப் பராமரிப்பு மற்றும் அறிகுறிகளைக் கண்காணித்தல்
மார்பில் கீறலிடப்பட்ட இடத்தை தினமும் கவனித்து, சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். முதல் வாரத்தில் காயம் குணமடையும் போது, அப்பகுதியில் லேசாக சிவத்தல் அல்லது வீக்கம் இருப்பது இயல்பானது. ஆனால், காயத்திலிருந்து கசிவு ஏற்பட்டாலோ, 100.4°F-க்கு மேல் காய்ச்சல் இருந்தாலோ, இருமும்போது மார்பில் க்ளிக் சத்தம் கேட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மார்புவலி, கடுமையான மூச்சுத்திணறல், மயக்கம், வழக்கத்திற்கு மாறான வீக்கம் அல்லது சீரற்ற இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். உங்கள் உடலின் மாற்றங்களை உங்களை விட வேறு யாரும் சிறப்பாக உணர முடியாது என்பதால், உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.
உணவு மற்றும் மருந்துகள்
இனிப்புகளையும் அசைவ உணவுகளையும் வாழ்நாள் முழுவதும் தவிர்க்க வேண்டுமா என்று பலர் கேட்பதுண்டு. முற்றிலும் தவிர்ப்பதை விட, அளவோடு சாப்பிடுவதே சிறந்தது. காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதிக உப்பையும் எண்ணெயில் பொரித்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவு
என்பது அதிக காய்கறிகள் மற்றும் குறைந்த அளவு சாதம் கொண்டதாக இருக்க வேண்டும். குறைந்த அளவு எண்ணெயைப் பயன்படுத்திய சாம்பார், மீன் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட கோழிக்கறி, எளிதில் செரிமானமாகும் தயிர்சாதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். சமையலுக்கு நல்லெண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்தலாம். அப்பளம், வடை போன்றவற்றை குறைப்பது நல்லது. இனிப்புகளை எப்போதாவது ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டும்.குணமடைந்து வரும் காலத்தில் மருந்துகள் மிகவும் அவசியமானவை.
ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகள், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு மிகவும் அத்தியாவசியமானவை. உடல்நிலை சற்று தேறியவுடன், சில நோயாளிகள் தாங்களாகவே மாத்திரைகளை நிறுத்துவது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும். பிறர் அறிவுரையைக் கேட்டோ அல்லது இணையத்தில் பார்த்தோ மருந்துகளின் அளவை மாற்றக்கூடாது. எப்போதும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.
இதய மறுவாழ்வு: பலரும் தவிர்க்கும் ஒரு முக்கியமான விஷயம்
முறையாக வடிவமைக்கப்பட்ட இதய மறுவாழ்வு செயல்திட்டம் ஏதேனும் இருந்தால், தயவுசெய்து அதில் கலந்துகொள்ளுங்கள். இது மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு பிரத்யேக உடற்பயிற்சி திட்டமாகும். இதில் உணவு மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்களும் அடங்கும். இதனை வெற்றிகரமாக முடிக்கும் நோயாளிகள் முழு நம்பிக்கையுடன் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.
பயிற்சிகளோடு, சரியான நேரத்தில் மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதனை செய்துகொள்வதும் முக்கியம். இந்தச் சந்திப்புகளின் போதுதான் மருத்துவரால் நீங்கள் குணமடைவதைக் கண்காணிக்கவும், அதற்கேற்ப மருந்துகளை மாற்றி பரிந்துரைக்கவும் முடியும். பரிசோதனைகளை தவிர்ப்பதோ அல்லது தள்ளிப்போடுவதோ சிக்கல்கள் தீவிரமாகும் வரை அவை வெளியே தெரியாமல் போக காரணமாக அமைந்துவிடும்.
எப்போது இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்கலாம்?
ஸ்டீயரிங்கைத் திருப்பும்போது மார்பில் வலி இல்லையென்றால், ஆறு வாரங்களுக்குப் பிறகு வாகனங்களை ஓட்டத் தொடங்கலாம். இரண்டு மாடிகளை மூச்சு வாங்காமல் ஏற முடிந்தால், தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். அலுவலகம் செல்வோர் ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் பணிக்குத் திரும்பலாம்; ஆனால் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கு கூடுதல் காலம் தேவைப்படும். இதற்கான நேரத்தை உங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும்.
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது என்பது, பழைய பழக்கவழக்கங்கள் அனைத்தையும் மீண்டும் தொடங்குவதல்ல. புகைபிடித்தல், புகையிலை மெல்லுதல், மது அருந்துதல் ஆகியவற்றை நிரந்தரமாகக் கைவிட வேண்டும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால், காலப்போக்கில் பைபாஸ் ஒட்டுக்குழாய்கள் சுருங்கக்கூடும். பல ஆண்டுகள் சீராக இருந்த பிறகும், புதிதாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது மிக முக்கியம்.
திறந்தநிலை இதய அறுவைசிகிச்சையிலிருந்து குணமடைவது என்பது, ஒரு ஓட்டப்பந்தயத்தின் இறுதிக்கோட்டை அடைவதல்ல. இது சிகிச்சையின் மூலம் சரிசெய்யப்பட்ட இதயத்தை கவன
மாகப் பராமரித்து, திட்டமிட்டு அதன் வலிமையை மீட்டெடுக்கும் ஒரு தொடர் செயல்முறையாகும். அவசரப்படாமல் போதுமான நேரத்தை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள், சிறப்பான ஆரோக்கியத்துடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். உங்கள் இதயம் கடினமான காலகட்டத்தை ஏற்கனவே கடந்துவிட்டது. அந்தச் செயல்பாட்டை முழுமையாக முடிக்க அதற்குப் போதிய அவகாசம் கொடுப்பதுதான் நீங்கள் செய்ய வேண்டியது.
எச்சரிக்கை அறிகுறிகள்:
உங்கள் மருத்துவரை எப்போது அழைக்க வேண்டும்?
திறந்த இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு எச்சரிக்கை அறிகுறிகளை உடனடியாகக் கண்டறிவது, விரைவான மருத்துவத் தலையீட்டை உறுதி செய்கிறது. சில அறிகுறிகளுக்கு சுகாதாரப் பணியாளர்கள் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவினரின் உடனடிக் கவனம் தேவைப்படுகிறது.
*அறுவைசிகிச்சைக் கீறலுடன் தொடர்பில்லாத மார்பு வலி
*38 டிகிரி செல்சியஸுக்கு மேல் காய்ச்சல்
*24 மணி நேரத்திற்குள் 2 கிலோகிராமுக்கு மேல் ஏற்படும் விரைவான எடை மாற்றங்கள்
*ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் அல்லது படபடப்பு
*மருந்து உட்கொண்ட பிறகும் நீடிக்கும் கடுமையான தலைவலி
*தாடைகள், பற்கள், கைகள் அல்லது காதுகளுக்குப் பரவும் வலி
*அதிகப்படியான சோர்வு அல்லது பலவீனம்
*அறுவைசிகிச்சை செய்யப்படும் இடத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
பின்வருவனவற்றைக் கண்டறிந்தவுடன் மருத்துவ ஊழியர்களுக்குத் தெரிவிக்கவும்:
*கீறல்களைச் சுற்றி சிவத்தல் அல்லது வீக்கம்
*அசாதாரணமான வடிகால் அல்லது கசிவு
*மார்பு எலும்பிலிருந்து சொடுக்கும் சத்தம்
*அசைவின் போது வலி அதிகரித்தல்
*சுவாசச் சிரமங்களுக்கு உடனடி மருத்துவக் கவனிப்பு தேவை. பின்வரும் அறிகுறிகளை உணரும்போது உதவி நாடவும்:
*மோசமாகும் மூச்சுத்திணறல்
*மிதமான செயல்பாடுகளின் போது சுவாசிப்பதில் சிரமம்
*தொடர்ச்சியான இருமல்
*உடற்பயிற்சியின்போது மார்பு அழுத்தம்
*செரிமானக் கோளாறுகள் சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகளை உடனடியாகத் தெரிவிக்கவும்:
*தொடர்ச்சியான குமட்டல் அல்லது வாந்தி
*பசியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்
*விழுங்குவதில் சிரமம்
*கடுமையான அஜீரணம்
*நரம்பியல் அறிகுறிகளுக்கு உடனடிப் பரிசோதனை தேவைப்படுகிறது.
பின்வருவனவற்றுக்கு அவசர சேவைகளை அழைக்கவும்:
*தெளிவற்ற பேச்சு
*தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
*குழப்பம் அல்லது திசைதிருப்பம்
*அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிக்கும் நினைவாற்றல் சிக்கல்கள்.
தொகுப்பு - ஸ்ரீ தேவி குமரேசன்


