நன்றி குங்குமம் தோழி
இயற்கை 360°
ஏழைகளின் பயறு எனப் போற்றப்படும் தட்டைப்பயறு என்கிற காராமணியை குறித்துதான் இந்த வார இயற்கை 360°யில் தெரிந்துகொள்ள இருக்கிறோம்..!ஏழைகளின் உணவாக, கால்நடைகளின் தீவனமாக தொடங்கிய தட்டைப்பயறின் பயணம், இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் உணவாக உருவெடுத்துள்ளது. ஆம்! மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கே அமெரிக்காவிற்கும், கிழக்கே ஆசிய நாடுகளுக்கும் பயணித்த தட்டைப் பயறு, இன்று உலகெங்கும் பயிரிடப்படும், எளிய வகைத் தாவரமாக இருப்பதுடன், நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் இந்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்களின் முக்கிய உணவாகவும் இடம் பிடித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாய் அமெரிக்கா பயணித்த கருப்பர் இனத்துடன் தட்டைப்பயறும் சேர்ந்தே பயணிக்க, ஏற்கெனவே அங்கு பெருமளவில் உபயோகத்தில் இருந்த க்ரீன்பீஸ்(Green peas) என அழைக்கப்படும் பச்சைப் பட்டாணி, அமெரிக்கர்களின் பிரதான உணவாக இருந்ததால், கருப்பர்களின் அதாவது, ஏழைகளின் உணவாக உருவெடுத்தது!
கருப்புநிறக் கண்களையும், செங்கல் நிற, பழுப்பு நிறம் மற்றும் வெள்ளை அல்லது சாம்பல் நிறத் தோலைக் கொண்ட காராமணி என்கிற தட்டைப்பயறு தன்னுள் அளவற்ற ஆரோக்கியம் எனும் வரத்தைத் தேக்கி வைத்துள்ளது என்பதே உண்மை.
Vigna unguiculata எனும் தாவரப்பெயர் கொண்ட தட்டைப்பயறு தோன்றிய இடம் ஆப்பிரிக்கா. Vigna என்பது பீன்ஸ் அல்லது பட்டாணியைக் குறிக்கின்றது என்றால், unguiculata என்பது கூரிய நகம் போன்ற அமைப்பைக் கொண்ட இதன் பூக்களைக் குறிப்பதாகும்.ஆரம்ப நாட்களில் தட்டைப்பயறுகள், மாட்டுத் தீவனமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டதால் Cowpeas என அழைக்கப்பட்டன. Cow peas, Crowder peas, Black eyed peas, Southern peas, Field peas என பல்வேறு பெயர்களுடன் ஆங்கிலத்தில் வலம் வரும் இதனை, இந்தியாவின் பிற மாநிலங்களில் லோபியா, பார்பட்டி, சௌரா, சௌலி, அலசந்துலு, அலசந்தே, கொட்டைப்பயறு, தட்டாம்பயறு, ராஜமாஷா, வெண்பயறு எனும் பெயர்களுடன் அழைக்கப்படுகிறது.
தட்டைச் செடியின் இளம் கொடிகள், பச்சை காய்கள், விதைகளான இதன் பயறுகள் உணவாக உட்கொள்ளப்பட்டாலும், பிரதானமாக விளங்கும் தட்டைப்பயற்றின் குணங்களையும் நாம் தெரிந்துகொள்வோம். பயறு வகைகளில், ‘க்ளைசெமிக் இன்டெக்ஸ்’ அதாவது, ‘சர்க்கரை உயர்த்தல் குறியீடு’ குறைவாகவும், மருத்துவ குணங்கள் கூடுதலாகவே உள்ளவை தட்டைப்பயறுகளே. அதிலும் குறிப்பாக பச்சைத் தட்டைப்பயறுகளில் அதிக நார்ச்சத்தும், புரதமும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன.
நூறு கிராம் பயறில், 63.6% கார்போஹைட்ரேட்டுகள், 24.8% புரதச்சத்து, 1.9% கொழுப்பு மற்றும் 6.3% நார்ச்சத்து என அனைத்தும் சேர்ந்து 116 கலோரிகளைக் கொண்டவை இவை. மேலும், ஃபோலிக் அமிலம், நியாசின், தையமின் உள்ளிட்ட B வகை வைட்டமின்கள், வைட்டமின் E, K, A, இவற்றுடன் மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்ஃபரஸ், காப்பர், செலீனியம் போன்ற அத்தியாவசிய கனிமங்களும் நிறைந்துள்ளன. அத்தியாவசிய அமினோ அமிலங்களும் கொழுப்பு அமிலங்களும் குறைந்த அளவில் இதில் காணப்படுகின்றன.
வளர்சிதை மாற்றத்தை இவை அதிகப்படுத்தி, ரத்த விருத்தியை கூட்டி, தசை மற்றும் எலும்புகளுக்கு வலிமை சேர்ப்பதுடன், உடலுக்கு உடனடி ஆற்றலும், எலும்பு மற்றும் தசைகளுக்கு ஊட்டமும் தரக்கூடியவை என்பதால், குழந்தைகளின் முதல் உணவாக (Weaning Food) பயன்படுகின்றது.கோலீன், லிக்னான்கள், பையோ-சானின் போன்ற தாவரச் சத்துகள் அடங்கிய தட்டைப்பயறுகள் பெண்களின் கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் நிற்கும் (Menopause) காலத்திலும் பெரிதும் உதவுகின்றன.நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தருகிற தட்டைப்பயறுகள், உடல் எடை குறையவும், தசை மற்றும் மூட்டுகளுக்கு வலிமை சேர்க்கவும், குடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், நோயெதிர்ப்பு ஆற்றல் ஆகியவற்றை அதிகரிக்கவும் உதவுகின்றன.
இதிலுள்ள ஹிஸ்டிடின், ஃபினைல் அலானின், மெத்தியோனின் லைஸீன் போன்ற அமினோ அமிலங்கள், மூளையின் டோப்பமைன் அளவைக் கூட்டுவதால், மனஅழுத்தம், தூக்கமின்மைக்கு பெரிதும் உதவுகின்றன. அல்சைமர், பார்க்கின்சன் நோய் உள்ளிட்ட மூளைத்தேய்வு நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும் துணை நிற்கின்றன.மிதமான இனிப்புச்சுவை மிக்க தட்டைப்பயறுகள், தமது குறைந்த க்ளைசிமிக் இன்டெக்ஸ் காரணமாக, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்ற வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும், தாவரச் சத்து மூலமாக குடல், மார்பகம், ப்ராஸ்டேட் உள்ளிட்ட புற்றுநோய்களின் தீவிரத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
பொருளாதாரத்தில் பின்தங்கி, வறுமை நிலையில் வாடும் குழந்தைகளின் பசியைப் போக்கி, அதிகப் புரதங்களையும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதாலேயே, ‘ஏழைகளின் அமிர்தம்’ என்றும் ‘Poor man’s Meat’ என்றும் அழைக்கப்படுகின்றன. குறிப்பாக இந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மராஸ்மஸ், க்வாஷியார்கர் போன்ற தீவிர நோய்களில், புரதக் குறைவால் உண்டாகும் கால் வீக்கத்தைத் தடுக்க தட்டைப் பயறுகள் உதவுகின்றன. முற்றிலும் க்ளூட்டன்கள் இல்லாத உணவு என்பதால், கோதுமையால் வருகிற க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு, Celiac disease எனப்படும் சிறந்த உணவாக தட்டைப்பயறு இருக்கிறது.எந்தவொரு உணவிலும் காணப்படும் உணவு ஒவ்வாமை தட்டைப்பயறிலும் உண்டு. இதன் அதிகப் புரதச்சத்து செரிமான அமைப்புக் குறைபாட்டை அதிகரிக்கக்கூடும். மேலும், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் நோய் கொண்டவர்கள் இதனை மிதமாக உட்கொள்வது நல்லது.
வறண்ட சூழலிலும், களர் மண்ணிலும் செழித்து வளரும் இயல்பினை உடைய தட்டைப்பயறுகள், தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அதிகம் விளைவிக்கப்பட்டு, ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம், மார்கழிப்பட்டம் என, பருவத்திற்கேற்ப அறுவடை செய்யப்படுகிறது.
பச்சைத் தட்டைக்காய்களை 90 நாட்களிலும், தட்டைப் பயறுகளை 120 நாட்களிலும் அறுவடை செய்யலாம் என்பது இதன் சிறப்பு. இதன் செடிகள் மாட்டுத் தீவனமாகவும், சிறந்த மண் உரமாகவும் பயன்படுகின்றன.நீர்வளம் குறைந்த வறண்டுபோன நிலத்திலும் வளருகிற தன்மை கொண்ட தட்டைச் செடிகளின் வேர்முடிச்சுகளில் வாழும் பாக்டீரியாக்கள், வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை வளமாக்குகின்றன என்பதால் சோளம், பருத்தி இடையே ஊடு பயிராகவும் வளர்க்கப்படுகிறது.
தமிழர்களின் பிரதான உணவுகளில் ஒன்றாக விளங்கும் தட்டைப்பயறுகள், ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை ஊறவைத்த பின்னர், வேக வைத்தே உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. கத்தரிக்காய் சேர்ந்த தட்டைப்பயறு தென் மாநிலங்களில் பிரபல உணவாக இருப்பதுடன், சுண்டல், கறி மற்றும் அடையாகவும் உட்கொள்ளப்படுகிறது.தட்டைப் பயற்றுடன் பச்சைக் கீரைகளை புது வருடத்தன்று உட்கொண்டால், அதிர்ஷ்டம் ஏற்படும் என அமெரிக்கர்கள் நம்புகின்றனர். Hoppin’ John எனப்படும் பிரபல அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்களின் உணவில் தட்டைப்பயறு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
காரடையான் நோன்பு சிறக்க பயன்படும் தட்டைப்பயறுகள் ஏழையின் பயறு என அழைக்கப்பட்டாலும், படர்ந்தபடி, தொடர்ந்து பயன்களைத் தந்துகொண்டே இருக்கின்றன.
இறையருளைப் போல..! ஏழைகளின் அன்பைப் போல..!
(இயற்கைப் பயணம் நீளும்!)
தொகுப்பு : டாக்டர் சசித்ரா தாமோதரன், மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்


