Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரண்டை எனும் ஃப்ரெண்ட்..!

இயற்கை 360°

“எலும்பு முறிவா? சவ்வு கிழிசலா?

தசைப்பிடிப்பா? இடுப்பு வலியா?

மூட்டு வீக்கமா? சரவாங்கியா?

எலும்புப்புரையா? எலும்புருக்கி நோயா..?”

இப்படி எலும்பு, மூட்டு மற்றும் தசைகள் சார்ந்த எந்தவொரு பிரச்னைக்கும், பிரண்டையை பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். வேலிகளிலும், மரங்களிலும், தொங்கியும்... படர்ந்தும்... புதர்போலக் காணப்படும் சாதாரண கொடிவகைத் தாவரமான பிரண்டையில், நம் உடலின் வலிமையான எலும்புகளின் ஆரோக்கியத்தைக் காக்கும் மருத்துவ குணங்கள் உள்ளனவா? உண்மையிலேயே எலும்பு மற்றும் மூட்டு நோய்களிலிருந்து நம்மை பிரண்டை காக்குமா? இன்றைய இயற்கை 360°யில் ‘பிரண்டை எனும் ஃப்ரெண்ட்’ குறித்து அறிவோம் வாருங்கள்..!

ஒருமுறை விசுவாமித்திர முனிவரை, வசிஷ்ட முனிவர் ஒரு சிரார்த்த பூஜையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்க, 1008 பதார்த்தங்களுடன் உபசரித்தால் மட்டுமே கலந்து கொள்வதாய் கூறுகிறார் விசுவாமித்திரர். ஒப்புக்கொண்ட வசிஷ்டர், விசுவாமித்திர முனிவரை வைத்து பூஜையை நடத்துகிறார். ஆனால், பூஜைக்குப் பின், தனக்குப் பரிமாறிய இலையில் சில காய்கறிகள் மட்டுமே இருப்பதைக் கண்டு வெகுண்டவரிடம், உணவை ஏற்பாடு செய்திருந்த அருந்ததியோ, பரிமாறப்பட்ட உணவிலிருந்த பாகற்காய் 100 பதார்த்தங்களுக்கும், பிரண்டை 300 பதார்த்தங்களுக்கும், பலா 600 பதார்த்தங்களுக்கும் சமமானது எனச் சாதுர்யமாக பதிலளித்ததாய் புராணக் கதை கூறுகிறது.

இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்து என்னவென்றால், அருந்ததியால் பரிந்துரைக்கப்பட்ட பிரண்டை, வசிஷ்ட முனிவர் மற்றும் விசுவாமித்திர முனிவருக்கு மட்டுமன்றி, நம் எல்லோருக்குமானது என்பதே.‘‘ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை” எனும் குடவாயிற் கீரத்தனாரின் அகநானூற்றுப் பாடல், தலைவனின் பிரிவைத் தாங்க முடியாத தலைவி, காட்டு வழியே வாடி வதங்கிய பிரண்டை வழியே தலைவனைத் தேடிச்செல்வதைப் பதிவிடுகிறது. பிரண்டையின் தண்டுகளை மண்ணுக்குள் புதைத்து வைக்க, விரைவாய் வளர்ந்து, ‘தோளைத் தாண்டி வளரும் பிள்ளையாக’ உருவெடுக்கும் என இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Cissus quadrangularis எனும் தாவரப்பெயர் கொண்ட பிரண்டை

தோன்றிய இடம் இந்தியா மற்றும் இலங்கை. வைரத்தை போல் எலும்புகளுக்கு வலிமை சேர்ப்பதால், ‘வஜ்ரவல்லி’ என்கிற பெய ரும் பிரண்டைக்கு உண்டு. ஹர்ஜார், அஸ்திஸிரிங்கலா, மங்காரவல்லி, ஹாரபங்கா, வேதரி, கனுஸ்கண்டே, நல்லேறு என பிற மாநிலங்களில் அழைக்கப்படும் பிரண்டைக்கு, Adamant creeper, Square stalked vine, Winged treebine, Devil’s backbone போன்ற ஆங்கிலப் பெயர்கள் இருந்தாலும், ‘Bone Setter’ என்றே பொதுவாய் அழைக்கப்படுகிறது.

அஸ்திசம்ஹாரகா என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு எலும்புகளை அழிவிலிருந்து காப்பது என்ற பொருள் என்றால், ஹர்ஜார் என்கிற ஹிந்தி வார்த்தைக்கு எலும்புகளை இணைப்பது என்பது பொருள். பெயர்களிலேயே எலும்பு ஆரோக்கியத்திற்கான இயற்கை உணவாய் பிரண்டை இருக்கின்றது.திராட்சைக் குடும்பத்தைச் சேர்ந்த கொடிவகைத் தாவரமான பிரண்டையானது, பட்டையான தண்டுகள், இதய வடிவ இலைகள், சிவந்த நிறத்தில் சிறுசிறு உருண்டையான பழங்களைக் கொண்டிருக்கும். இதிலும் ஓலை‌ப் ‌பிர‌ண்டை, சிவப்பு பிரண்டை, முப்பிரண்டை, தீம்பிரண்டை, உரு‌ட்டு‌ப் ‌பிர‌ண்டை என பலவகையான பிர‌ண்டைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக் கொண்ட சாதாரண பிரண்டையே அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது.

பிரண்டையின் தண்டு, வேர், இலை, பழம் என அனைத்தும், மருத்துவக் குணங்கள் கொண்டவை என்றாலும், நாம் பெரிதும் உபயோகிக்கும் பிரண்டையின் தண்டுப்பகுதியில் மாவுச்சத்து, அதிக நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்ஃபரஸ், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகிய கனிமச் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவற்றுடன் வைட்டமின் C, E மற்றும் கரோட்டீன்களும், பல முக்கியத் தாவரச்சத்துகளும், க்வர்செட்டின், க்வாட்ராங்குலாரின்-A, டெய்ட்ஸீன், ரெஸ்வெரட்ரால், அமைரின்கள், சைட்டோ-ஸ்டிரால்கள், பிக்ரோஸைட் ஆகியன இதன் மருத்துவ குணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.

பிரண்டையின் மருத்துவ குணங்களை உறுதி செய்யும் சமீபத்திய ஆய்வுகள், மேலே குறிப்பிட்டுள்ள தாவரச்சத்துகள் Callus எனும் எலும்பு உருவாக்கத்தையும், எலும்புகளின் கால்சியத்தையும் கூட்டுகின்றன என்பதுடன், இதன் அழற்சி எதிர்ப்புத் தன்மை வலியையும் வீக்கத்தையும் குறைக்க பெரிதும் துணை புரிகின்றது.பிர‌ண்டையில் காணப்படும் கா‌ல்‌சிய‌ம், கரோட்டின்கள், ‌வை‌ட்ட‌மி‌ன் C போன்றவை எலு‌ம்பு மற்றும் தசைகள் வள‌ர்‌ச்‌‌சிக்கு உதவுவதுடன், எலும்பு முறிவின் போது, பிரண்டையை உண்பதோடு, அதனை அரைத்து அடிபட்ட பகுதியில் கட்டினால், எலும்பு முறிவில் தோன்றும் வலி, வீக்கம் போன்றவைகளை குணப்படுத்தும் என்கிறது சித்த மருத்துவம்.

உடலின் பிற உறுப்புகளின் வளர்ச்சிக்கு, குறிப்பாக நரம்பு மண்டலம், செரிமான மண்டலம், ஹார்மோன்களின் இயக்கத்திற்கு உதவும் பிரண்டை, பசியின்மை, வயிற்று அழற்சி, சீதப்போக்கு, மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிரண்டை, உடற்பருமன், அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும், வயோதிகம் சார்ந்த கண் பிரச்னை, சருமம் மற்றும் மூட்டு நோய்களுக்கும் மருந்தாகிறது. புற்றுநோய் அறிகுறிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் பிரண்டை உதவுகிறது.

பிரண்டையில் இளம் தண்டுகளில் இருக்கும் நாரை அகற்றிய பிறகே, இதனை உணவாய் பயன்படுத்துகின்றனர். இது அரிப்பை உண்டு செய்யும் என்பதால், பயன்படுத்தத் தொடங்கும் முன்,

விரல்களில் எண்ணெய் தடவிய பிறகே கையாளுதல் வேண்டும். பிரண்டையை உட்கொள்ளும்போதும், ஒவ்வாமை, அரிப்பு, வயிற்று உப்புசம், மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பாலூட்டலின் போதும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

கி.மு. 550 - 300 ஆண்டுகளிலேயே பிரண்டை, சித்த மருத்துவத்தில் பிரசித்திப் பெற்றதாய் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பிரண்டை உப்பு’ எனும் சித்த மருந்து, குடல் சார்ந்த நோய்களுக்குச் சிறந்த மருந்தாய் இருக்கிறது. ஹட்ஜோட் (Hadjod) எனும் பிரண்டைப் பொடி மற்றும் மாத்திரைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடைய உணவு முறையில் முக்கியப் பங்கு வகித்து வரும் பிரண்டை, பல்வேறு சடங்குகளிலும் விழாக்களிலும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. பிரண்டையில் அப்பளம், துவையல், குழம்பு, தோசை போன்ற உணவுப் பொருட்களும் தயாராகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரும் பிரண்டை, இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, வங்காளம், தாய்லாந்து நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் அரிய மருத்துவ குணங்களால் அமெரிக்கா, கனடா, பிரேசில் நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

கலோரிகள் குறைந்த, நார்ச்சத்து

மற்றும் தாதுக்கள் நிறைந்த,

எளிதாய் கிடைக்கும் பிரண்டை எனும்

ஃப்ரெண்டை பயன்படுத்தி பலன்

பெறுவோம்..! நலம் பெறுவோம்..!

(இயற்கைப் பயணம் நீளும்...)

தொகுப்பு: டாக்டர் சசித்ரா தாமோதரன்