Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உடல் சோர்வும் வைட்டமின் குறைபாடும்!

நன்றி குங்குமம் தோழி

படிப்பு... வேலை என்று நம் வாழ்க்கை முழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அந்த ஓட்டத்தில் சோர்வாகி இரவு நன்றாக தூங்கினாலும் காலை எழும் போது நம்முடைய உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதில்லை. ஒருவித சோர்வினை நாம் உணர்கிறோம். தினமும் ஏற்படும் இந்த சோர்வு நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை பாதிப்படைய செய்யும் என்கிறார் இன்டர்னல் மருத்துவ நிபுணரான வெனித் ரோஸ்.‘‘பொதுவாக மனஉளைச்சல் மற்றும் தூக்கமின்மை உடல் சோர்வுக்கு ஒரு காரணமாக இன்று பார்க்கப்படுகிறது.

ஆனால், இவை இரண்டு மட்டுமே காரணம் என்று நாம் சொல்லிவிட முடியாது. நம்முடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தான் நம் உடல் சிக்னல் செய்கிறது. அது என்ன என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது மற்ற பிரச்னைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சோர்வுடன் மூச்சு இரைச்சல் மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டால், இதயத்தில் தொந்தரவு இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். சில சமயம் ரத்தசோகை, வைட்டமின் பி12, போலிக் குறைபாடு, வைட்டமின் டி3 குறைவாக இருந்தாலும் சோர்வு ஏற்படும். சிலர் காலை எழுந்தவுடன் சோர்வாக உணர்வார்கள். தூங்கிக் கொண்ேட இருப்பார்கள். இதுவும் ரத்தசோகையின் அறிகுறி. இன்று பெரும்பாலான பெண்கள் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். ஹைபோ மற்றும் ஹைபர் என எந்த வகையாக இருந்தாலும் அது உடலில் சோர்வினை ஏற்படுத்தும். தைராய்டை தொடர்ந்து நீரிழிவு பிரச்னையும் இளம் வயதினர் சந்திக்கிறார்கள். இதற்காக மருந்து எடுக்கிறார்கள். இருப்பினும் சர்க்கரையின் அளவு கூடுதல், குறைவு என்று நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும். இதனாலும் உடல் சோர்வடையும்.

உடல் பருமன் பிரச்னை இருந்தால், தூங்கும் போது குறட்டை விடுவார்கள். அவர்களுக்கு OSA - Obstructive Sleep Apnea பிரச்னை இருக்கும். இவர்களுக்கு தூக்கம் சரியாக இருக்காது. விளைவு சோர்வு. மற்றபடி மன உளைச்சல், பதட்டம், ஜலதோஷத்திற்காக மருந்து, மாத்திரை எடுப்பவர்கள், வைரல் மற்றும் பாக்டீரியா தொற்று காரணமாகவும் சோர்வடைவார்கள்.

வைட்டமின் பி12, போலேட் குறைபாடு, அசைவ உணவினை சாப்பிடாதவர்கள் மற்றும் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப்பொருட்களை எடுக்காதவர்களுக்கும் ஏற்படும். நீரிழிவு மற்றும் கேஸ்ட்ரைடிஸ் பிரச்னைக்கான மருந்துகளை எடுப்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும். மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை என்று அலட்சியமாக இல்லாமல் பிரச்னையை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனை மேற்கொண்டால் உடல் சோர்வு நீங்கும்’’ என்றவர், லைப்ஃஸ்டைல் மாற்றம் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

‘‘வேலை பளு அதிகமாக இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து வெளியூர் போகலாம். ஜிம், யோகா பயிற்சியினை மேற்கொள்ளலாம். மன உளைச்சலை போக்கக்கூடிய இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நாளடைவில் உடல் சோர்வு குறையும். ரத்தசோகையாக இருந்தால் உணவில் கீரை, பச்சை காய்கறிகள் அசைவத்தில் ஈரல் சாப்பிடலாம். வைட்டமின் பி12 குறைபாட்டிற்கு பனீர், டோஃபூ, பால், முட்டையின் வெள்ளைக் கரு சாப்பிடலாம். சமச்சீரான சத்துள்ள உணவுகள் டயட்டில் இருந்தால் இதனை முழுமையாக கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

அதே சமயம் தைராய்டு, டயபெட்டிக் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். சிலருக்கு மனஉளைச்சல் நீக்கவும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். அதையும் மருத்துவரின் ஆலோசனையுடன் பெறலாம். இவை வயோதிக பிரச்னைகள் இல்ைல. நம்முடைய வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை கடைபிடிக்க வேண்டும். இன்று பலரும் அதிக நேரம் உட்கார்ந்த நிலையில் வேலை பார்க்கிறோம். உடல் உழைப்பு இருப்பதில்லை. வெயிலில் செல்வதில்லை. கொலஸ்ட்ரால், உடல் பருமன் பிரச்னைகளையும் சந்திக்கிறார்கள். இவை யாவும் 25 முதல் 35 வயதுள்ளவர்களும் சந்திப்பதால், வருடம் ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியம். இந்தப் பிரச்னைக்கு வயோதிகம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. வாழ்க்கை முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்’’ என்றவர், உடல் உபாதையினால் ஏற்படும் சோர்வு குறித்து விளக்கினார்.

‘‘டயபெட்டிக் என்று பார்த்தால் சோர்வு மட்டுமில்லாமல் பசி, சிறுநீர் வெளியேற்றம், தண்ணீர் தாகம் ஏற்படும். தைராய்டு பிரச்னை இருந்தால் உடல் எடை அதிகரிக்கும், முடி உதிரும், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. இரும்புச்சத்து குறைவு என்றால் வாய்ப்புண், முடி கொட்டுதல் பிரச்னை இருக்கும். இது போன்ற சிறிய அறிகுறிகள் தென்படும். பலர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். அதனால் உடல் சோர்வு ஏற்படும். எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். குறிப்பாக இரவு படுக்கும் போது செல்போன் பார்ப்பதை தவிர்ப்பது அவசியம்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக் டர் வெனித் ரோஸ்.

தொகுப்பு: ரிதி