நன்றி குங்குமம் டாக்டர்
பப்பாளிப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சரும ஆரோக்கியம் முதல் செரிமான பிரச்னைகளை களைவது வரை முக்கிய பங்கு வகிக்கும் பழம் எது தெரியுமா? பப்பாளிதான்.
பப்பாளியின் மருத்துவ குணங்கள்
பப்பாளி பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுவதால் மலச்சிக்கல் நீங்குகிறது. பப்பாளியில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஏராளமான கனிமங்கள் உள்ளன. பப்பாளியில் சோடியம் குறைந்த அளவே காணப்படுவதால் நமது சருமம் பாதுகாப்பாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.
பப்பாளியில் விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாகுவதை தடுக்கிறது. பப்பாளி சாறுகள் நீரிழிவு ட்ரைகிளிசரைட்களைக் குறைக்கிறது. எனவே இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளிப் பழத்திற்கு உண்டு.
ஒரு நடுத்தர அளவு பப்பாளிப் பழத்தில் 120 கிராம் கலோரிகள் காணப்படுகின்றன. உடல் எடையை குறைக்க நினைப்போர் இந்தப் பழத்தை உணவில் சேர்ப்பது உதவியாக இருக்கும். பப்பாளியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி நோய்த் தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகிறது. ஒரு பப்பாளி பழத்தில் உள்ள விட்டமின் சி 200 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது. இது ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.
பப்பாளியில் சர்க்கரை சத்து குறைவாகவே காணப்படுகின்றன. ஒரு கப் பப்பாளியில் 8.3 கிராம் அளவுக்கு சர்க்கரைச் சத்து உள்ளது. இது கிளைசெமிக் குறியீடும் கொண்டுள்ளது. இதிலுள்ள விட்டமின்கள், பைட்டோநியூட்ரியன்கள் போன்றவை இதய நோய்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
பப்பாளிப் பழத்தில் விட்டமின் ஏ மற்றும் ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை கண்களில் உள்ள சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் அவை சேதமடையாமல் தடுக்கின்றன.
விட்டமின் ஏ மாகுலர் சிதைவின் வளர்ச்சியை தடுக்கிறது. தக்காளி மற்றும் கேரட்டில் காணப்படும் விட்டமின் ஏயை விட பப்பாளியில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் உள்ளன. பப்பாளி எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது. இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுவதால் இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பப்பாளியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் பைட்டோநியூட்ரியன்கள், ப்ளோனாய்டுகள் உள்ளன. இது உடல் செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. கடைசியாக, ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் துறையால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், புரோஸ்டேட் புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் பீட்டா கரோட்டின் பப்பாளியில் அதிகளவு காணப்படுகிறது என்பது
கண்டறியப்பட்டுள்ளது.
தொகுப்பு: - தவநிதி


