Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து!

நன்றி குங்குமம் டாக்டர்

எலும்பு மற்றும் முதுகுத்தண்டுவட நிபுணர் முரளிதரன்

ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்பது எலும்புகள் சேதம் அடைந்து வலுவிழக்கும் நோயாகும். எலும்பு ஆரோக்கியம் தொடர்பான புரிதலை மேம்படுத்தி, சரியான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். வலுவான, ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை நாம் புரிய வேண்டும். ஆஸ்டியோபோரோசிஸ் ‘அமைதியான நோய்’ என்று அழைக்கப்படுகிறது.

இது எலும்புகளை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. எலும்புகள் சிதிலம் அடைந்து உடையும் நிலைக்குச் செல்வதே ஆஸ்டியோபோரோசிஸ் ஆகும். இது உலக அளவில் பல லட்சக்கணக்கானவர்களைப் பாதிக்கிறது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்றால் என்ன?

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது காலப்போக்கில் எலும்பு அடர்த்தி குறைந்து, அதன் தரமும் உறுதியும் குறையும் ஒரு நிலையாகும். பொதுவாக, உடலானது தொடர்ந்து பழைய எலும்பைப் புதுப்பித்துப் புதிய எலும்பை உருவாக்குகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்ற பாதிப்பு ஏற்படும் போது, புதிய எலும்புகள் புதுப்பிக்கப்படும் சமநிலை பாதிக்கப்படுகிறது. பழைய எலும்புகள் பாதிப்புக்கு ஏற்ப புதிய எலும்பு உருவாகும் வேகம் இருக்காது. அந்த வேகம் குறையும். இதன் விளைவாக, எலும்புகளில் நுண்துளைகள் ஏற்பட்டு அது உடையக்கூடியதாக மாறும். இது எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக மணிக்கட்டு, இடுப்பு, முதுகெலும்பு ஆகிய பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும்.

காரணங்களும் ஆபத்துகளும்: ஆஸ்டியோபோரோசிஸுக்கு பல காரணங்கள் உள்ளன. வயது முதிர்வு என்பது மிகவும் பொதுவான காரணமாகும். ஏனெனில் எலும்பின் நிறை 30 ஆண்டுகளில் உச்சத்தை அடைந்து அதன் பிறகு மெதுவாக குறைகிறது. ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் மாற்றங்கள், பெண்களிடையே எலும்பு பாதிப்பை கணிசமாக அதிகரிக்கின்றன.

பிற ஆபத்துக் காரணிகள் பின்வருமாறு

* குடும்பத்தில் முன்பு வேறு யாருக்காவது ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு இருந்திருக்கலாம்.

* உடல் செயல் பாடுகள் இல்லாமை அல்லது நீண்ட காலம் படுக்கை ஓய்வில் இருத்தல்

* கால்சியம், வைட்டமின் டி ஆகிய சத்துகள் பற்றாக்குறை. இந்த சத்துக்கள் கொண்ட உணவுகளைப் போதுமான அளவு உண்ணாமல் இருப்பது

* புகைபிடித்தல், அதிகப்படியாக மது அருந்துதல்

* ஸ்டீராய்ட்கள், தைராய்ட் மருந்துகள் போன்ற சில மருந்துகள் அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஏற்படலாம்.

அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளுதல்: எலும்பு சிதைந்து முறிவு ஏற்படும் வரை ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் காட்டாது. இருப்பினும், நுட்பமான அறிகுறிகள் தெரியும். முதுகுவலி, காலப்போக்கில் உயரம் குறைதல், குனிந்த தோற்ற நிலை ஏற்படுதல், சாதாரணமாக சிறிய அளவில் விழுந்தால் கூட எளிதில் எலும்பு முறிவு ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். எலும்பு அடர்த்தி சோதனையைப் (டெக்ஸா ஸ்கேன் -DEXA Scan) பயன்படுத்தி முன்கூட்டியே இதனைக் கண்டறிவதன் மூலம் கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்பே எலும்பு இழப்பு பாதிப்பை அடையாளம் கண்டு சிகிச்சை அளித்து, பெரிய சிக்கல்களைத் தடுக்க முடியும்.

வலுவான எலும்புகளுக்குச் சிறந்த உணவுகள்: எலும்புகளைப் பாதுகாக்கும் உணவுகள், நோய்த் தடுப்பிலும், பராமரிப்பு மேலாண்மையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கால்சியம் நிறைந்த உணவுகள்: பால், தயிர், வெண்ணெய், கேப்பை, பாதாம், கீரை போன்ற உணவு வகைகள்.

வைட்டமின் டி ஆதாரங்கள்: அதிகாலையில் இருக்கும் சூரிய ஒளி, செறிவூட்டப்பட்ட தானியங்கள், முட்டையின் மஞ்சள் கரு, சால்மன், சார்டின்கள் போன்ற கொழுப்பு நிறைந்த மீன் வகைகள்.

புரதமும் நுண்ணூட்டச்சத்துக்களும்: பருப்பு, பீன்ஸ், சோயா, உலர் விதை வகைகள் (Nuts -கொட்டைகள்) போன்றவை எலும்புகளைப் பாதுகாத்துத் தசை வலிமையைப் பராமரிக்க உதவுகின்றன. எலும்புகளின் வளர்சிதை மாற்றத்திற்கு மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகியவையும் அவசியம்.

ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) பாதிப்பை, வாழ்க்கை முறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் அதன் பாதிப்பு அதிகரிக்கவிடாமல் தடுக்க முடியும். அதன் பின் கட்டுப்படுத்த முடியும். வழக்கமான உடற்பயிற்சி, குறிப்பாக நடைபயிற்சி போன்ற எடையைக் கட்டுப்படுத்தும், நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

சீரான முறையில் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வது நல்ல பலன்களை அளிக்கும், அவ்வப்போது எலும்பு பரிசோதனைகள் செய்து கொள்வது பாதிப்பை தெரிந்து கொண்டு அதற்கேற்றவகையில் சிகிச்சைகளைப் பெற உதவும். எனவே இவையனைத்தும் வயது முதிர்ந்த காலத்தில் ஆரோக்கியமான உடல்நலத்துக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன.