Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எல்லா மறதியும் அல்சைமர் அல்ல!

நன்றி குங்குமம் டாக்டர்

கவனிக்க வேண்டிய அறிகுறிகளைத் தெரிந்துகொள்வோம்

நேற்று நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திக் கொள்வதில் சிரமம்... சற்று முன்பு பேசிய விஷயம் மறந்து போவது... முக்கியமான சந்திப்பைத் தவறவிடுவது... நன்கு தெரிந்த ஒருவரின் பெயர் சட்டென்று நினைவுக்கு வராமல் போவது... இவை அவ்வப்போது யாருக்கும் ஏற்படக்கூடிய சாதாரண மறதிகள்தான். ஆனால், இந்த மறதி அடிக்கடி ஏற்படத் தொடங்கி, ஒருவரின் அன்றாட வாழ்க்கையையே பாதிக்க ஆரம்பித்தால், அதை வயது முதிர்வின் இயல்பான அறிகுறி என்று அலட்சியப்படுத்தக் கூடாது.

அதே நேரத்தில், ஒவ்வொரு மறதிக்கும் பின்னாலும் அல்சைமர் நோய் இருக்கிறது என்பதும் இல்லை. மறதிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்; சிலவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சையளிக்கவும் முடியும். எனவேதான் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் தேதி உலக அல்சைமர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆரம்பகட்ட அறிகுறிகளை அடையாளம் கண்டு மருத்துவ உதவியை நாடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதும் இதன் நோக்கமாகும் என்கிறார் நரம்பியல் துறை மருத்துவரான மாதுரி ஏ.என்.எஸ். இதுகுறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

பொதுவாக மறதிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில காரணங்கள் முறையான சிகிச்சையின் மூலம் சரிசெய்யக் கூடியவையாகவும் இருக்கலாம். உதாரணமாக, வைட்டமின் பி12 குறைபாடு, தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் சில தன்னைத்தானே தாக்கும் நோய்கள் (Autoimmune disorders) நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும். எனவே, மறதி ஏற்பட்டவுடன் அது அல்சைமர்தான் என்று முடிவு செய்வதற்குப் பதிலாக, அதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிவதே முக்கியம்.

அல்சைமர் மட்டுமல்ல... டிமென்ஷியாவுக்கும் பல வகைகள் உண்டு!

‘டிமென்ஷியா’ என்பது ஒரு குறிப்பிட்ட நோயின் பெயர் அல்ல. நினைவாற்றல், சிந்தனை, பகுத்தறியும் திறன் உள்ளிட்ட மூளையின் அறிவாற்றல் செயல்பாடுகள் குறைந்து, அது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் நிலையைப் பொதுவாக டிமென்ஷியா என்று குறிப்பிடுகிறோம்.அல்சைமர் நோய் டிமென்ஷியாவுக்கான பொதுவான காரணங்களில் ஒன்று. ஆனால், அதுமட்டுமே காரணம் அல்ல. உதாரணமாக, ஃப்ரன்டோடெம்போரல் டிமென்ஷியா (Frontotemporal dementia) என்ற மற்றொரு வகை டிமென்ஷியா உள்ளது. இது வழக்கமான அல்சைமரைப் போல இல்லாமல் ஆரம்பத்திலேயே சில மாறுபட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.

குறிப்பாக, ஒருவரின் நடத்தை, குணநலன், முடிவெடுக்கும் திறன் அல்லது மொழிப் பயன்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுவது முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். சிலரிடம் இந்த நிலை ஒப்பீட்டளவில் வேகமாக முன்னேறவும் வாய்ப்புள்ளது.இதனால், டிமென்ஷியாவின் வகையைத் துல்லியமாகக் கண்டறிவது மிகவும் முக்கியம். அல்சைமருக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான சிகிச்சை, மற்ற வகை டிமென்ஷியாக்களுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில சூழல்களில் அது பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, நரம்பியல் மருத்துவரின் மதிப்பீடு மற்றும் சரியான நோயறிதலுக்குப் பிறகே சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

எப்போது மறதி கவலைக்குரியதாகிறது?

எப்போதாவது ஒரு பெயரை மறந்துவிடுவது அல்லது ஒரு சிறிய விஷயத்தை நினைவுபடுத்துவதற்கு சில நொடிகள் எடுத்துக்கொள்வது மட்டும் டிமென்ஷியாவைக் குறிக்காது. ஆனால் மறதி தொடர்ந்து ஏற்பட்டு, நாளுக்கு நாள் அதிகரித்து, அன்றாடப் பணிகளில் இடையூறு ஏற்படுத்தத் தொடங்கும்போது கவனம் தேவை.

கவனிக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகள்

*சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் அல்லது பேசிய விஷயங்களை அடிக்கடி மறப்பது

*சாவி, செல்போன் போன்ற பொருட்களை அடிக்கடி வைத்த இடம் தெரியாமல் தேடுவது

*சந்திப்புகள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் மறப்பது

*தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போவது

*முன்பு எளிதாகச் செய்துவந்த வீட்டு வேலைகளில் திடீரென சிரமம் ஏற்படுவது போன்றவை இருக்கலாம்.

சமையல் போன்ற நன்கு பழக்கமான வேலைகளிலும் மாற்றங்கள் தெரியலாம். உதாரணமாக, முன்பு வழக்கமாகச் செய்து வந்த சமையலில் தேவையான பொருட்களைச் சேர்க்க மறப்பது, உணவில் உப்பு போட மறந்துவிடுவது அல்லது சமையல் செய்து கொண்டிருக்கும்போது கேஸ் அடுப்பை அணைக்காமல் விட்டுவிடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் கவனிக்க வேண்டும்.

நோய் அல்லது அறிவாற்றல் குறைபாடு மேலும் முன்னேறும்போது, பணத்தைக் கையாளுதல், வங்கிப் பரிவர்த்தனைகள், குடும்பச் செலவுகளை நிர்வகித்தல், அன்றாட முடிவுகளை எடுப்பது போன்ற சிக்கலான பணிகளிலும் சிரமம் ஏற்படலாம்.இதுபோன்ற மாற்றங்களை அந்த நபரோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ கவனித்தால், மருத்துவப் பரிசோதனையைத் தாமதப்படுத்தாமல் மேற்கொள்வது அவசியம்.

அல்சைமர் உயிருக்கு ஆபத்தான நோயா?

அல்சைமர் என்று கண்டறியப்பட்டுவிட்டால், உடனடியாக ஒருவரின் இயல்பான வாழ்க்கை முடிந்துவிடும் என்று அர்த்தமல்ல. அல்சைமர் ஒரு படிப்படியாக முன்னேறும் நோயாக இருந்தாலும், அதன் பாதிப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து, தேவையான சிகிச்சை, தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பு மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவை கிடைத்தால், பல ஆண்டுகளுக்கு அன்றாட செயல்பாடுகளையும் வாழ்க்கைத் தரத்தையும் பராமரிக்க முடியும். மேலும், ஆரம்பகட்டத்திலேயே நோயறிதல் கிடைப்பது குடும்பத்தினருக்கு எதிர்காலத்தைத் திட்டமிடவும், நோயாளியின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் உதவும்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை

அல்சைமர் நோயை நூறு சதவீதம் தடுக்கக்கூடிய உறுதியான வழி இதுவரை இல்லை. இருப்பினும், உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நீண்டகால மூளை ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும். மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது, இசைக்கருவி வாசிப்பது, புத்தகம் படிப்பது, தோட்டப் பணிகளில் ஈடுபடுவது அல்லது புதிய பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

உடற்பயிற்சியும் முக்கியமானது. நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பயிற்சி அல்லது உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்வது போன்றவை உடல் மற்றும் இதய ஆரோக்கியத்துடன் மூளை ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும்.தனிநபரின் உடல்நிலை மற்றும் உடற்பயிற்சி திறனைப் பொறுத்து, தினமும் சுமார் 3040 நிமிடங்கள், வாரத்தில் ஐந்து நாட்கள் உடல் இயக்கத்தில் ஈடுபடுவது நடைமுறைக்கு ஏற்ற இலக்காக இருக்கலாம்.

உணவிலும் கவனம் தேவை. பருப்புகள் மற்றும் கொட்டைகள், பச்சைக் கீரைகள், பெர்ரி வகைப் பழங்கள் போன்றவற்றை சமச்சீரான உணவின் ஒரு பகுதியாகச் சேர்த்துக்கொள்ளலாம். அதிக கொக்கோ உள்ள டார்க் சாக்லேட்டையும் அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.ஆனால், ஒரு குறிப்பிட்ட உணவை மட்டும் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதைவிட, ஒட்டுமொத்தமாக சமச்சீரான உணவுமுறையைப் பின்பற்றுவதே முக்கியம்.

அதேபோல், சர்க்கரை நோய், உயர்ரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு போன்ற உடல்நலப் பிரச்னைகளை முறையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் நீண்டகால உடல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

இந்த உலக அல்சைமர் தினத்தின் செய்தி என்ன?

மறதி ஏற்பட்டால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில், தொடர்ந்து அதிகரிக்கும் மறதியை அலட்சியப்படுத்தவும் கூடாது. எல்லா மறதியும் அல்சைமர் அல்ல. அதேபோல், எல்லா டிமென்ஷியாவும் அல்சைமர் அல்ல.மறதி தொடர்ந்து அதிகரித்து, அன்றாட செயல்பாடுகளைப் பாதிக்கத் தொடங்கினால் நரம்பியல் மருத்துவரை அணுகுவது அவசியம். சரியான நேரத்தில் பரிசோதனை செய்வதன் மூலம், மறதிக்குக் காரணமாக இருக்கும் சிகிச்சையளிக்கக்கூடிய உடல்நலப் பிரச்னைகளை கண்டறியவும், அறிவாற்றல் குறைபாட்டின் சரியான வகையைத் தெரிந்துகொள்ளவும், அதற்கேற்ற சிகிச்சையைத் தொடங்கவும் முடியும்.மறதியை வயதின் இயல்பான விளைவு என்று மட்டும் நினைத்து கடந்து செல்லாமல், அதன் காரணத்தை அறிந்துகொள்வதே சரியான பராமரிப்புக்கான முதல் படி.

தொகுப்பு:- ஸ்ரீ தேவி குமரேசன்