Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஃப்ரிட்ஜில் அசைவ உணவுகள், எச்சரிக்கை!

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் ஹைதராபாத்தில் ‘போனலு’ அம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக கோழி, ஆட்டு மாமிசத்தை சமைத்து குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர். மிஞ்சிய மாமிசத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, ஓரிரு நாட்கள் கழித்து வெளியே எடுத்து சூடாக்கி குடும்பத்தினர் ஒன்பது பேரும் சாப்பிட்டுள்ளனர். மாலை அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆரம்பித்திருக்கிறது. நிலைமை தீவிரமடையவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 49 வயதாகும் குடும்பத் தலைவர் மரணமடைந்தார். இன்னும் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

‘‘முதலில் எந்தப் பிரச்னையையும் தராத மாமிச உணவு, குளிர் சாதனப் பெட்டியில் வைத்த பிறகு பாதிப்பைத் தந்துள்ளது. ஃப்ரிட்ஜில் மாமிசத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டதுதான் அதற்குக் காரணம். பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா இது குறித்து கூறியதாவது, ‘ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் உணவு கெடாது’ என்று நாம் பொதுவாக நம்புகிறோம். அது தவறு. ஃப்ரிட்ஜில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் நாம் வைக்கும் உணவுகள் அனைத்தும் கெடுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுமே தவிர அவை எப்போதும் கெட்டுப் போகாது என்று சொல்ல முடியாது. மாமிசம் கெட்டுப் போவதை ஃப்ரிட்ஜின் குளிர் நிலை (2 முதல் 8 டிகிரி செல்சியஸ்) கொஞ்சம் தாமதப்படுத்துமே தவிர கெட்டுப் போவதிலிருந்து முழுமையாகத் தடுத்து நிறுத்தாது.

அப்படியென்றால் அசைவ உணவுகள் ஃப்ரிட்ஜில் கெட்டுப்போவதை எவ்வாறு நிறுத்துவது?

ஃப்ரிட்ஜில் வைக்கும் மாமிசத்தை மூன்று நாட்களுக்குள் சாப்பிட்டு விடுவோம் என்றால் இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் நான்கு டிகிரி செல்யஸுக்குள் வைத்துப் பாதுகாக்கலாம். நான்கு முதல் நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு நாம் மாமிசத்தை ‘ஃப்ரீசரில்’(உறை குளிர் நிலையில்) பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு குளிர்சாதனப்பெட்டியிலும் இந்த ஃப்ரீசர் இருக்கும். இங்கு மாமிசம் சில மாதங்கள் வரை கெடாமல் பாதுகாக்கப்படும். காரணம், அத்தகைய உறை குளிர் நிலையில் நுண்கிருமிகளால் வளர இயலாது.

ஃப்ரிட்ஜில் வைக்கும் மாமிசத்தில் கிருமித் தொற்று இருந்தாலும் அதைக் காற்று புகாத டப்பாக்களில் வைப்பதால், மற்ற உணவுகளுக்கு ‘க்ராஸ் கண்டாமினேசன்’ எனப்படும் கிருமித் தோற்று பரவுவதை தடுக்கலாம். மாமிசத்தை சமைக்கும் போது நன்றாக சூடு செய்துதான் சமைக்க வேண்டும். இறைச்சி நன்றாக வெந்திருப்பதை உறுதி செய்த பின்பே உண்ண வேண்டும். சமைக்கப்பட்ட உணவு - அறை வெப்ப நிலையில் (25 முதல் 30 டிகிரி செல்சியஸ்) சில மணிநேரங்கள் மட்டுமே கிருமித் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருக்கும். பிறகு, எந்த உணவு வகைகளாக இருந்தாலும் கெட்டு விடும்.

அதே போல் பரிமாறும் முன்பு எப்போதும் உணவினை சூடு செய்ய வேண்டும். இதனால் கிருமிகள் இறந்து போகும். அடுத்த நாள் வைத்திருந்து சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தால் மாமிசத்தை சரியாக ‘பேக்’ செய்து குளிர்சாதனப் பெட்டியில் 4 டிகிரி செல்சியஸுக்குள் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஃப்ரீசரில் வைப்பது மிகவும் பாதுகாப்பானது.நான்கு மணிநேர தொடர் மின்சாரத் துண்டிப்பு இருந்தாலும், குளிரை அப்படியே தக்கவைத்துக் கொள்ளும் தன்மை இன்றைய ஃப்ரிட்ஜ்களுக்கு உண்டு. அதே சமயம், அடிக்கடி மின்சாரம் போய் வரும் சூழல் இருந்தால், ஃப்ரிட்ஜின் குளிர் நிலை மாறாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உணவுகளை சமைத்து விட வேண்டும்.

ஃப்ரீசரில் வைத்த உணவுகள் கடினமாக இருக்கும் என்பதால், உணவுப் பொருட்களை சற்று நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு அறை வெப்ப நிலையில் வைத்து சூடாக்கி பயன்படுத்தலாம். கிருமியால் உணவு கெட்டுப்போவதை ஃப்ரிட்ஜ் தள்ளிப் போடுமே அன்றி முழுவதுமாக தடுத்து நிறுத்தாது என்பதை கவனத்தில் வையுங்கள்’’ என்றார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

தொகுப்பு: பாரதி