நன்றி குங்குமம் டாக்டர்
சின்னத்திரையில் நடிப்புக்கு மட்டுமல்லாமல், தங்களது தோற்றம் மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வரிசையில் கவனம் பெற்றுவருபவர் நியாஸ் கான். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மூன்று முடிச்சு’ தொடரில் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், தனது தோற்றத்திலும் உடலமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்துகொள்வோம்
வொர்க்கவுட்
பொதுவாக நடிகர்களுக்கு படப்பிடிப்பு நேரம் என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நீண்ட நேர படப்பிடிப்பு, தொடர்ச்சியான காட்சிகள், பயணம் எனப் பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்குவது சவாலான ஒன்றாக இருக்கும். இருந்தாலும், உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்றால் கட்டாயம் அதற்கான நேரத்தை ஒதுக்கித்தான் ஆக வேண்டும். அந்தவகையில், எவ்வளவு பிசியான ஷெட்யூலாக இருந்தாலும், முடிந்தவரை தினசரி ஜிம் பயிற்சியை நான் தவிர்ப்பதில்லை.
எனது தினசரி பயிற்சிகளில் பாடி புல்லிங்கைவிட கார்டியாக் பயிற்சிகள் தான் அதிகமாக இருக்கும். மேலும், தசை வலிமை பயிற்சிகள், நடைப்பயிற்சி போன்றவைகளும் இருக்கும். ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட ஜிம்முக்குச் சென்று பயிற்சிகள் செய்வேன். சில நேரம் ஜிம்மே செல்ல முடியாத சூழலில் உணவில் கட்டுப்பாடாக இருப்பேன்.
டயட்
நான் முன்பே சொன்னது போன்று ஃபிட்னெஸில் உணவு கட்டுப்பாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இரண்டும்தான் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே, அவை இரண்டிற்குமே அனைவருமே அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அந்தவகையில் எனது தினசரி டயட் என்றால், வொர்க்கவுட் செய்கிறபோது காலையில் முட்டை வெள்ளைக்கரு, ப்ரோக்கோலி, வேக வைத்த காய்கறிகளில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து சாப்பிடுவேன்.
மதிய வேளையில், கொஞ்சமாக அரிசி சாதம், காய்கறிகள் அல்லது சிறிதளவு சிக்கன் கறி எடுத்துக் கொள்வேன். இரவில், சாப்பாத்தி, இட்லி போன்ற மென்மையான உணவுகள் இருக்கும். சில நாட்களில் இரவில் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல், ஜூஸ் அல்லது பழங்கள் மட்டும் சாப்பிட்டு முடித்துக்
கொள்வேன். இன்னும் வரும்காலத்தில் கூடுதலாக ஹெல்த்தில் கவனம் செலுத்தலாம் என்று எண்ணி இருக்கிறேன். அதற்காக, எனது ஃபிட்னெஸ் டிரைனர் என்ன பரிந்துரைக்கிறாரோ அதை ஃப்லோ செய்யத் தொடங்கியுள்ளேன். அதே சமயம், என்னதான் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகள் கடைபிடித்தாலும், வெளியூர்களுக்குப் பயணிக்கும்போது கடல் உணவுகள், மதுரை பரோட்டா போன்றவற்றை பார்த்ததும் கொஞ்சம் டயட் எல்லாம் ஒதுக்கிவிட்டு நன்றாக சாப்பிடுவேன். பிறகு வந்து வொர்க்கவுட் செய்து சமன் செய்து விடுவேன்.
அதுபோன்று என்னிடம் பலரும் ஸ்கின் கேருக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால், நான் ஸ்கின் கேருக்கு என்று பெரிதாக எதுவும் செய்வதில்லை. அது பிறப்பிலேயே வந்துள்ளது. மற்றபடி, நடிகனாக இருப்பதால், மேக்கப் போட வேண்டிய கட்டாயம் இருப்பதால், அந்த மேக்கப் பொருட்கள் பெரும்பாலும் ரசாயனங்கள் கலந்துதான் இருக்கும். அதனால், ஸ்கின்னுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருப்பதற்கு அவ்வப்போது எண்ணெய் மசாஜ் செய்வது அல்லது டிடர்ன் செய்வது போன்றவற்றை செய்து வருகிறேன். டிடர்ன் செய்வதற்கும் தேன், தயிர் போன்ற இயற்கை பொருட்களைதான் பயன்படுத்துகிறேன். இவையெல்லாம்தான் எனது ஃபிட்னெஸ் ரகசியங்கள் ஆகும்.
தொகுப்பு: - ஸ்ரீ தேவி குமரேசன்


