Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பக்கவாத சிகிச்சை புதிய வழிகாட்டுதல் வெளியீடு!

நன்றி குங்குமம் டாக்டர்

உலகளவில் இறப்பு மற்றும் உடல் ஊனத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பக்கவாதம் உள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் சமீபத்தில் வெளியிட்ட 2026-ம் ஆண்டிற்கான வழிகாட்டுதல்கள் பக்கவாத சிகிச்சையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

அதாவது, “பக்கவாதம் குணப்படுத்தக்கூடியது - ஆனால் நாம் சரியான நேரத்தில் செயல்பட்டால் மட்டுமே” என்பதாகும். அந்தவகையில், பக்கவாதம் என்பது என்ன.. எதனால் ஏற்படுகிறது. அதற்கு தீர்வு என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் தீபா அவதானி.

பக்கவாதம் என்றால் என்ன?

பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் குறையும் போது ஏற்படும் ஒரு அவசர நிலை ஆகும். இதில் இரண்டு வகைகள் உள்ளன: ஒன்று இஸ்கிமிக் ஸ்ட்ரோக் என்பதாகும். இதன் காரணமாக ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால் மூளை திசுக்களுக்கு ரத்த ஓட்டம் தடைபடும். இரண்டாவது ஹெமரேஜிக் ஸ்ட்ரோக் ஆகும். இது மூளைக்குள் ரத்தக் கசிவு ஏற்படுவதால் திசுக்களை பாதிக்கச் செய்யும்.

இவை இரண்டிற்கும் சிகிச்சை முறை மாறுபடும் என்பதால், இதை வேறுபடுத்தி பார்ப்பது மிகவும் முக்கியமாகும். தற்போதைய புதிய வழிகாட்டுதல்கள் ‘இஸ்கிமிக்’ வகைக்கு வழங்கப்பட்டுள்ளன.

நேரம் மிகவும் முக்கியம்?

நேரத்தை கடத்தினால் மூளை பாதிப்படையும். சிகிச்சை அளிக்கப்படாத ஒவ்வொரு நிமிடமும் பல லட்சம் மூளை செல்கள் இறக்கின்றன. ரத்த உறைவை கரைக்கும் மருந்து மற்றும் கருவி மூலம் உறைவை நீக்குதல் போன்ற சிகிச்சைகள், நோயாளி எவ்வளவு விரைவில் மருத்துவமனைக்கு வருகிறார் என்பதைப் பொறுத்தே பலனளிக்கும்.

அறிகுறிகள் என்ன?

திடீரென பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் BE FAST முறையை நினைவில் கொள்ள வேண்டும்.

B (Balance): உடல் சமநிலை இழத்தல்.

E (Eye): பார்வை குறைபாடு அல்லது இரட்டைப் பார்வை.

F (Face): முகம் ஒருபக்கமாக கோணிக்கொள்ளுதல்.

A (Arm): கைகளில் தளர்ச்சி அல்லது பலவீனம்.

S (Speech): பேசுவதில் சிரமம் அல்லது நாக்கு குழறுதல்.

T (Time): உடனே ஆம்புலன்ஸை அழைக்க வேண்டிய நேரம்.

2026 வழிகாட்டுதலின் முக்கிய மாற்றங்கள்

1. புதிய மற்றும் எளிமையான மருந்து

ரத்த உறைவை கரைக்க ‘Alteplase’ என்ற மருந்துக்கு மாற்றாக ‘Tenecteplase’ என்ற மருந்தை இந்த வழிகாட்டுதல் அங்கீகரிக்கிறது. இந்த மருந்து செயல்பட வேகமானது மற்றும் கொடுப்பதற்கு எளிதானது என்பதால் அவசர சிகிச்சையை எளிதாக்குகிறது.

2. சிகிச்சைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

முன்பு பக்கவாதம் வந்து 4.5 மணி நேரத்திற்குள் வந்தால் மட்டுமே உறைவு கரைப்பு சிகிச்சை அளிக்க முடியும் என்று இருந்தது.இப்போது நவீன ஸ்கேன் (Advanced imaging) மூலம் ஆய்வு செய்து, காப்பாற்றக்கூடிய மூளைப்பகுதிகளை கண்டறிந்து 9 மணி நேரம் வரை சிகிச்சை அளிக்கலாம் என்று 2026 வழிகாட்டுதல் கூறுகிறது.

இது தூக்கத்தில் பக்கவாதம் வந்தவர்களுக்கும், தாமதமாக வருபவர்களுக்கும் பெரிதும் உதவும்.

3. கருவி சிகிச்சைக்கான வாய்ப்புகள் அதிகரிப்பு

பெரிய ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்கப் பயன்படும் இந்த முறையில், இப்போது பெரிய அளவிலான பக்கவாதம் மற்றும் 24 மணி நேரத்திற்குள் கண்டறியப்படும் சில குறிப்பிட்ட அடைப்புகளுக்கும் சிகிச்சை அளிக்கலாம்.

4. குழந்தைகளுக்கான பக்கவாதம்

முதன்முறையாக குழந்தைகளுக்கான பிரத்யேக வழிகாட்டுதல்கள் சேர்க்கப் பட்டுள்ளன.

28 நாட்கள் முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு 4.5 மணி நேரத்திற்குள் உறைவு கரைப்பு மருந்தும், 24 மணி நேரத்திற்குள் கருவி சிகிச்சையும் அளிக்கலாம்.

5. பிற மாற்றங்கள்

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை: சிகிச்சைக்குப் பின் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் தேவையில்லை, மிதமான கட்டுப்பாடே நோயாளிகளுக்கு நல்லது.

நடமாடும் ஸ்ட்ரோக் யூனிட்: சிகிச்சையை விரைவுபடுத்த நடமாடும் ஸ்ட்ரோக் யூனிட்களைப் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது.

பக்கவாதம் என்பது குணப்படுத்த முடியாதது அல்ல. சரியான நேரத்தில் செயல்பட்டால், பக்கவாதம் வந்த பலர் மற்றவர் உதவியின்றி, இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் “நேரம் தான் மூளை” என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்