நன்றி குங்குமம் டாக்டர்
நரம்பியல் அறிவோம்… நலமாக வாழ்வோம்!
நமது மனித உடலின் மிகச் சிக்கலான, அதே வேளையில் மிக முக்கியமான கட்டுப்பாட்டு மையம் நரம்பு மண்டலமாகும். மூளை, தண்டுவடம் மற்றும் புற நரம்புகள் உள்ளடங்கிய இந்த அமைப்பு பாதிக்கப்படும்போது, அது ஒருவரின் இயக்கம், உணர்வு, சிந்தனை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் புரட்டிப்போடுகிறது.
இந்தியாவில் மாறிவரும் வாழ்வியல் முறை, அதிகரித்துவரும் வயதுமுதிர்ந்த மக்கள் தொகை மற்றும் போதிய மருத்துவ விழிப்புணர்வின்மை ஆகியவற்றால் நரம்பியல் கோளாறுகளின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடையே இந்நோய்களைப் பற்றிய சரியான புரிதலும், ஆரம்பகால கண்டறிதலும் மிக அவசியமாகிறது. எனவே, நரம்பியல் சிக்கல்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இத்தொடரில், இந்தியாவில் அதிகம் காணப்படும் 10 முக்கியமான நரம்பியல் கோளாறுகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளோம்
1.பார்கின்சன் நோய் - இயக்கக் கட்டுப்பாடு மற்றும் டோபமைன் இழப்பு தொடர்பான கோளாறு.
2.அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா - நரம்புச் சிதைவால் ஏற்படும் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் இழப்பு.
3.பக்கவாதம் - மூளை ரத்த ஓட்டத் தடை அல்லது ரத்தப்போக்கினால் ஏற்படும் அவசரநிலை.
4.வலிப்பு நோய் - மூளையின் மின்சார அலைகளில் ஏற்படும் திடீர் மாற்றம்.
5.ஒற்றைத்தலைவலி மற்றும் தலைவலி கோளாறுகள் - நரம்புவாஸ்குலார் மாற்றங்களால் ஏற்படும் நரம்பியல் தலைவலி.
6.நீரிழிவு நரம்பியல் கோளாறு - கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயால் புற நரம்புகள் சேதமடைதல்.
7.மல்டிபிள் ஸ்களீரோசிஸ் - நரம்புகளின் மைலின் உறையைத் தாக்கும் சுயதடைக்காப்பு நோய்.
8.தண்டுவட மற்றும் தலை அதிர்ச்சி காயங்கள் - விபத்துகளால் ஏற்படும் நரம்பு மண்டலக் காயங்கள்.
9.மத்திய நரம்பு மண்டலத் தொற்றுகள் - மூளைக்காய்ச்சல் மற்றும் மூளை உறை அழற்சி.
10.அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் - இயக்க நரம்புகளைப் பாதிக்கும் முற்போக்கு நோய்.
இத்தொடரின் முதல் பகுதியாக, முதியோர்களின் இயக்கத்தைப் பெரிதும் முடக்கும் பார்கின்சன் நோய் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பார்கின்சன் நோய்: நரம்புச் சிதைவும் இயக்கக் கட்டுப்பாடும்
பார்கின்சன் நோய் என்பது மூளையின் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தைப் பாதிக்கும் ஒரு முற்போக்கு நரம்புச் சிதைவு நோயாகும். உலகளவில் மட்டுமல்லாமல், இந்தியாவில் அதன் தாக்கம் வயதுமுதிர்ந்த மக்களிடையே கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நோய் நோயாளியின் உடலியல் செயல்பாடுகளை மட்டுமல்லாது, அவர்களின் மனநலம் மற்றும் சமூக வாழ்க்கையையும் பெருமளவில் பாதிக்கும் தன்மையுடையது. மருத்துவக் கோணத்தில் பார்க்கும் போது, இது வெறும் தசை நடுக்கம் சார்ந்த நோய் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தையும் மெதுவாகச் சிதைக்கும் ஒரு கூட்டு நோய்க்குறியாகும்.
நோயின் உடலியங்கியல் பற்றி ஆராயும்போது, இதன் அடிப்படைப் பாதிப்பு மூளையின் சப்ஸ்டான்ஷியா நிக்ரா(Substantia Nigra) என்னும் பகுதியில் ஏற்படுகிறது. சாதாரண மனிதர்களில், இந்த பகுதியில் உள்ள நரம்பணுக்கள் உடலின் தன்னிச்சையான இயக்கங்களைச் சீராகக் கட்டுப்படுத்தும் டோபமைன் என்ற நரம்புக்கடத்தி வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றன. பார்கின்சன் நோயாளிகளுக்கு இந்த டோபமைனர்ஜிக் நரம்பணுக்கள் படிப்படியாக அழிவடைகின்றன.
இதனால் மூளையின் பேசல் கேங்க்லியா பகுதிக்குச் செல்லும் டோபமைன் அளவு பெருமளவு குறைகிறது. இதன் விளைவாக உடலின் இயக்கங்கள் தனது இயல்பான வேகத்தையும் சீரான தன்மையையும் இழக்கின்றன. மேலும், நோயியல் பரிசோதனைகளில் பாதிப்படைந்த நரம்பணுக்களுக்குள் ஆல்ஃபா-சினுக்ளின் என்ற புரதம் இயல்புக்கு மாறாகத் திரண்டு லூயி உடலங்களை உருவாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. இதுவே இந்நோயின் பிரதான திசுவியல் அடையாளமாக விளங்குகிறது.
பார்கின்சன் நோய் உருவாவதற்கான துல்லியமான ஒற்றைக் காரணியை அறுதியிட்டுக் கூற முடியாது. இது மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கூட்டு விளைவால் ஏற்படுகிறது. வயது ஒரு முக்கிய காரணியாகும், பொதுவாக அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களில் இந்நோய் அதிகம் கண்டறியப்படுகிறது. மரபியல் காரணிகளைப் பொறுத்தவரை, ஐந்து முதல் பத்து சதவீத வழக்குகளில் எஸ்என்சிஏ, எல்ஆர்ஆர்கே2, மற்றும் பார்கின் போன்ற மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. சுற்றுச்சூழல் சம்பந்தமாக பார்க்கையில், விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், கன உலோகங்கள், மற்றும் தொழில்துறை நச்சுக்களுடன் நீண்டகாலமாகத் தொடர்பில் இருப்பது நரம்புச் சிதைவை விரைவுபடுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், பெண்களை விட ஆண்களுக்கு இந்நோய் பாதிப்பு சற்றே அதிகமாகக் காணப்படுகிறது.
மருத்துவ அறிகுறிகளைப் பொறுத்தவரையில், அவற்றை இயக்கம் சார்ந்தவை மற்றும் இயக்கம் சாராதவை என இரண்டு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கலாம். இயக்கம் சார்ந்த அறிகுறிகளில் முதன்மையானது ஓய்வு நிலை நடுக்கம் ஆகும். நோயாளி கைகளை ஓய்வாக வைத்திருக்கும் போது, பெருவிரலும் ஆள்காட்டி விரலும் மாத்திரை உருட்டுவது போன்ற அமைப்பில் நடுங்கும். இந்த நடுக்கம் நோயாளி ஏதேனும் வேலையைச் செய்யத் தொடங்கும்போது தற்காலிகமாகக் குறையும். இரண்டாவதாக, விறைப்புத்தன்மை அல்லது தசை இறுக்கம் காணப்படுகிறது.
மருத்துவர் நோயாளியின் மூட்டுகளை அசைத்துப் பரிசோதிக்கும் போது, பல்சக்கர இயக்கம் போன்ற ஒரு தடை உணரப்படும், இதை காக்வீல் விறைப்புத்தன்மை (Cogweel Rigidity) என்போம். மூன்றாவதாக, பிராடிகைனீசியா (Bradykinesia) எனப்படும் இயக்க மந்தநிலை ஏற்படுகின்றது. இது நோயாளியின் அன்றாடச் செயல்பாடுகளான பொத்தான் போடுதல், எழுதுதல், நடப்பது போன்ற தன்னிச்சையான இயக்கங்களின் வேகத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. நோயாளியின் முகபாவனைகள், உணர்ச்சிகளற்ற முகமூடி (Mask face) போன்ற தோற்றம் உருவாகும். நான்காவதாக, நிலையான சமநிலையின்மை ஏற்படுகின்றது, இதனால் நோயாளிகள் நடக்கும் போது தடுமாறி கீழே விழும் அபாயம் அதிகரிக்கிறது.
இயக்கம் சாராத அறிகுறிகள் பெரும்பாலும் பிரதான அறிகுறிகள் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்குகின்றன. மோப்ப உணர்வு குறைதல் அல்லது வாசனையை அடையாளம் காண முடியாமை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும், தூக்கத்தின் போது கைகால்களை அதிகமாக அசைத்தல் போன்ற தூக்கக் கோளாறுகள், கடுமையான மலச்சிக்கல், மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற தன்னாட்சி நரம்பு மண்டலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. நோய் முன்னேறும்போது, நரம்பு மண்டலச் சிதைவு காரணாமாக மனச்சோர்வு, பதற்றம், மற்றும் பிந்தைய நிலைகளில் டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் இழப்பும் தோன்றக்கூடும்.
பார்கின்சன் நோயின் தீவிரத்தை மதிப்பீடு செய்ய ஹோன் மற்றும் யார் கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. முதல் நிலையில், உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் லேசான அறிகுறிகள் காணப்படும். இரண்டாம் நிலையில், உடலின் இரு பக்கங்களிலும் பாதிப்பு பரவினாலும், நோயாளியால் சமநிலையைப் பேண முடியும். மூன்றாம் நிலையில், மிதமான சமநிலை இழப்பு தோன்றி நோயாளியின் நடையில் தடுமாற்றம் ஏற்படும், இருப்பினும் அவர்கள் சுயாதீனமாகச் செயல்பட முடியும். நான்காம் நிலையில், கடுமையான இயலாமை ஏற்பட்டு, நோயாளி மற்றவர்களின் உதவியின்றி நிற்கவோ நடக்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். ஐந்தாம் நிலையில், நோயாளி முற்றிலும் சக்கர நாற்காலியிலோ அல்லது படுக்கையிலோ முடங்கும் சூழல் உருவாகிறது.
பார்கின்சன் நோயைக் கண்டறிவது முற்றிலும் ஒரு மருத்துவம் சார்ந்த ஆய்வாகும். இதற்கு பிரத்யேக ரத்தப் பரிசோதனையோ அல்லது திசுப் பரிசோதனையோ இல்லை. இங்கிலாந்தின் பார்கின்சன் நோய் சங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, பிராடிகைனீசியாவுடன் நடுக்கம் அல்லது விறைப்புத்தன்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருப்பதை மருத்துவர் உறுதி செய்ய வேண்டும். டாட்ஸ்கேன் DaTscan (Dopamine Transporter Scan) எனப்படும் மூளை காட்சிப்படுத்தல் முறை, மூளையில் டோபமைன் டிரான்ஸ்போர்ட்டர் அளவைக் கணக்கிடப் பயன்படுகிறது.
எம்பிஆர்ஐ பரிசோதனையானது பார்கின்சன் நோயை உறுதிப்படுத்துவதை விட, பார்கின்சன் அறிகுறிகளைப் போன்று போலியாக வெளிப்படும் பிற பக்கவாதம் அல்லது நரம்பியல் கோளாறுகளை விலக்குவதற்கே பிரதானமாகப் பயன்படுகிறது. மேலும், லெவோடோபா மருந்தை அளித்து நோயாளியின் அறிகுறிகளில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று பார்ப்பதும் நோய்
கண்டறிதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிகிச்சை முறைகளைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட நரம்பணுக்களை மீண்டும் உயிர்ப்பிக்கவோ அல்லது நோயை முற்றிலும் குணப்படுத்தவோ தற்போதைக்கு மருந்துகள் இல்லை. இருப்பினும், அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சிறப்பான சிகிச்சைகள் உள்ளன. லெவோடோபா மற்றும் கார்பிடோபா கூட்டு மருந்து பார்கின்சன் சிகிச்சையின் தங்கத் தரமான (Gold Standard) மருந்தாகக் கருதப்படுகிறது.
லெவோடோபா மூளையைச் சென்று அடைந்தவுடன் டோபமைனாக மாறுகிறது. கார்பிடோபா மருந்து, லெவோடோபா மூளையை அடையும் முன்பே ரத்தத்தில் சிதைவடைவதைத் தடுக்கிறது. இளைய வயது நோயாளிகளுக்கு, பிராமிபெக்சோல் அல்லது ரோபினிரோல் போன்ற டோபமைன் அகோனிஸ்ட் மருந்துகள் முதன்மையாக வழங்கப்படுகின்றன, இவை மூளையின் டோபமைன் ஏற்பிகளை நேரடியாகத் தூண்டுகின்றன. இவை தவிர, டோபமைன் சிதைவைத் தடுக்கும் எம்ஏஓ-பி தடுப்பான்கள்(MAO - B inhibitors)மற்றும் COMT தடுப்பான்களும் சிகிச்சையில் பயன்படுகின்றன.
மருந்துகளால் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியாத கட்டத்திலோ அல்லது மருந்துகளின் பக்கவிளைவுகள் அதிகமாகும்போதோ, ஆழமான மூளைத் தூண்டுதல் சிகிச்சை எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில், மூளையின் குறிப்பிட்ட நரம்பு மையங்களில் மெல்லிய மின்முனைகள் பொருத்தப்பட்டு, மார்புப் பகுதியில் வைக்கப்படும் நியூரோஸ்டிமுலேட்டர் கருவி மூலம் மின் தூண்டல்கள் வழங்கப்படுகின்றன. இது நடுக்கத்தையும் விறைப்புத்தன்மையையும் வெகுவாகக் குறைக்கிறது.
மருத்துவச் சிகிச்சைக்கு இணையான முக்கியத்துவம் மறுவாழ்வுச் சிகிச்சைகளுக்கும் உண்டு. இயற்பியல் சிகிச்சை (Physiotherapy மூலமாக தசைகளின் விறைப்பைக் குறைத்து, நடையையும் சமநிலையையும் மேம்படுத்த முடியும். பேச்சுப் பயிற்சி மூலம் குரல் வளம் மற்றும் உணவை விழுங்கும் திறனைத் தக்கவைக்கலாம். உளவியல் ஆலோசனைகள் நோயாளியின் மனச்சோர்வைப் போக்கி, நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவும்.
முடிவாக, பார்கின்சன் நோய் என்பது வயதான காலத்தில் ஏற்படும் ஒரு இயல்பான தளர்ச்சி அல்ல, அது முறையான மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும் ஒரு நரம்பியல் கோளாறாகும். ஆரம்பகட்டத்திலேயே நோயைக் கண்டறிந்து, மருந்துகள், மறுவாழ்வுச் சிகிச்சைகள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை ஒருங்கிணைத்து வழங்கினால், பார்கின்சன் நோயாளிகள் தங்களின் இறுதிக்காலம் வரை மரியாதையான, சுதந்திரமான மற்றும் தரமான வாழ்க்கையை வாழ முடியும்.
(தொடரும்)
தொகுப்பு: பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல்


