நன்றி குங்குமம் தோழி
*வாசனைப் பொருட்களான கிராம்பு, மிளகு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றிற்கெல்லாம் அரசியாக விளங்கும் ஒரு தாவரம்..!
*பிரியாணி, டீ, ஸ்வீட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் தனி மணமும் தனிச்சுவையும் சேர்க்கும் தாவரம்..!
*இந்திய வரலாற்றுப் பக்கங்களை இன்றுவரை செழிப்போடு விளங்க வைக்கும் தாவரம்..!
*மாவீரர் அலெக்சாண்டரை இந்திய நாட்டின் மீது படையெடுக்கத் தூண்டிய தாவரம்..!
*கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய அரசவைகளில் இடம்பெற்ற தாவரம்..!
பன்முகம் கொண்ட தாவரமான ஏலக்காய் பற்றியே இயற்கை 360°யில் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.ஏலம், ஏலக்காயா, ஏலக்குலூ, ஏலாய்ச்சி, வெல்ச்சி, ஏலா, Cardomom, Elaichi என்றெல்லாம் அழைக்கப்படும் ஏலக்காயின் தாவரப்பெயர் Elettaria cardamom. தோன்றிய இடம் இந்தியா. Cardamom என்ற ஆங்கிலப்பெயர் கிரேக்க மொழி சொல்லில் பெறப்பட்டது என்றாலும், இதன் முழுமையான பொருள் ‘இந்திய நறுமணப் பொருள்’ என்பதே..!
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் இந்தியர்களின் உணவு சுவையைக் கூட்டும் ஏலக்காயின் பிரத்யேக மணத்தை Sweet, peppery, piney, resinous, citrusy, warm, minty, pungent and floral என கவிநயத்துடன் விவரிக்கின்றனர் உணவு ஆர்வலர்கள். நறுமணமும், சுவையும் மிக்க ‘சோட்டி ஏலாய்ச்சி’ எனும் சிறிய பச்சை நிற ஏலக்காய், மோட்டி ஏலாய்ச்சி எனும் சற்றே பெரிய, கருப்பு நிற ஏலக்காய் என இரண்டு வகை இருக்கிறது. இதில், பச்சை நிற ஏலக்காய் உணவிற்கு மணம் ஊட்டவும், கரு நிற ஏலக்காய் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. பச்சை நிற தோலுக்கடியில், காணப்படும் ஏலரிசி கருவிதைகள் இயற்கையின் அதிசயம் என்றால், அதிலுள்ள சத்துகள் மற்றுமோர் அதிசயம்.
இதன் சிறு விதைகளான ஏலரிசியில், சினியோல், ஆல்ஃபா டெர்பீனியால்,மிர்சீன், லிமோனீன், மென்த்தோன் போன்ற எளிதில் ஆவியாகும் எண்ணெய்களும், வைட்டமின் C, B1, B2, B5, B6
உள்ளிட்ட வைட்டமின், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் உள்ளிட்ட அத்தியாவசிய கனிமச் சேர்க்கைகளும், நார்ச்சத்தும் உள்ளது. செரிமானத்திற்கான முக்கிய உணவாக செரிமானச் சுரப்பிகளை தூண்டி, இரைப்பையின் அமில உற்பத்தியை சமன்படுத்துவதால் செரிமான மண்டலத்தின் ‘குளிர்சாதனப் பெட்டி’ என்றே ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முறைகள் கொண்டாடுகின்றன.
வாய் துர்நாற்றம், பற்சிதைவு, ஈற்று அழற்சி, வாய்ப்புண், தொடர் விக்கல், பசியின்மை, அமில அழற்சி, இரைப்பைப் புண், பெருங்குடல் அழற்சி, நாட்பட்ட பெருங்குடல் நோய்கள், மலச்சிக்கல்
மற்றும் மூல நோய் என, செரிமான மண்டலம் சார்ந்த பல்வேறு சிக்கல்களுக்கும் தீர்வாக உள்ளது இதன் சிறிய விதைகள்.பசியைத் தூண்டுவதுடன், வாந்தி, குமட்டலுக்கு தீர்வாக உள்ளதால், குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏலக்காய் வீட்டு வைத்தியமாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், கல்லீரலில் தேங்கும் நச்சுகளை சிறுநீரகங்கள் வழியே வெளியேற்றி, சிறுநீர்ப் பெருக்கியாகவும், கல்லீரல் நோய், சிறுநீரகக் கற்கள், சிறுநீரக தொற்றுநோய்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கின்றது.
ஆன்டி ஆக்சிடெண்ட், ஆன்டி இன்ஃபளமேஷன், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-செப்டிக், ஆன்டி-கேன்சர் ஆற்றல்களைக் கொண்ட இதன் கருவிதைகளின் தாவர எண்ணெய்கள், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய மாரடைப்பு நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற வாழ்க்கை முறை நோய்களை மட்டுப்படுத்துகிறது. அத்துடன் ஆஸ்துமா, அலர்ஜி, நாட்பட்ட நுரையீரல் நோய்கள், கல்லீரல் நோய்கள், புற்றுநோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
ஞாபகத்திறனைக் கூட்ட உதவும் இந்த விதைகள், ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், நரம்புத்தளர்வு, தூக்கமின்மைக்கு அருமருந்தாக விளங்குகின்றன. குறிப்பாக, ஆண்மைத் தன்மையைக் கூட்டி, கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், சிகரெட் புகையிலை உள்ள நிக்கோட்டினை, நுரையீரல், தொண்டை மற்றும் ஈறுகளில் படியாமல் பாதுகாத்து, குடல் அழற்சியை குறைக்க உதவுகின்றன.
கண் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், கேச ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு உதவும் ஏலக்காய் எண்ணெய், அரோமா தெரபியில் பெரும் பங்கு வகிப்பதுடன், அழகு சாதனப் பொருட்களின் வாசனை திரவியங்கள், சோப், பவுடர் தயாரிக்கவும் பயன்படுகிறது. எந்தவொரு இயற்கை உணவு போலவே, சிலருக்கு இதில் ஒவ்வாமை ஏற்படவும், அதிகம் பயன்படுத்தினால், வயிற்று அழற்சி, வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஏலக்காயை செரிமானத்திற்கென ஒன்று அல்லது இரண்டை அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது உணவுப் பதார்த்தங்கள் தயாரிப்பில் பயன்படுத்தலாம். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய், அசைவ உணவில் கூடுதல் சுவையை சேர்ப்பதுடன், இனிப்பு பதார்த்தங்கள் தயாரிப்பதற்கும், தேநீர், காஃபி, கேக் மற்றும் ரொட்டி தயாரிக்கவும் பயன்படுவதுடன் கரம் மசாலா தயாரிப்பிலும் பங்கு வகிக்கிறது.
ஐயாயிரம் ஆண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் ஏலக்காயை, குறுந்தொகை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற தமிழ்மணம் மிக்க இலக்கியங்களும், திருவாசகம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களும், ‘ஏலவார்குழலி’ எனப் போற்றிப் பாடியுள்ளன.கிரேக்கர்களும், ரோமானியர்களும் முதன்முதலாக வாசனை திரவியமாக ஏலக்காயை பயன்படுத்தினர் என்றும், எகிப்தியர்கள் பற்சிதைவிற்காக பயன்படுத்தினர் என்றும் வரலாறு கூறுகிறது. ஏலக்காயின் விதைகளுக்காகவே அலெக்சாண்டர் நம் மீது படையெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அரபு நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஏலக்காயை, காஃபியுடன் சேர்த்து, காவா எனப் பருகுகின்றனர். ஐரோப்பிய, அமெரிக்க, ஸ்காண்டிநேவிய நாடுகளின் சிறப்பு உணவுகளில் ஏலக்காய் இடம்பெறுகிறது என்றால், ஜப்பானிய மதுபானங்களிலும் பற்பசைகளிலும் ஏலக்காய்க்கு நிச்சயம் இடம் உண்டு. அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இதய கூட்டமைப்பு கூடும்போது, அவர்களது விருந்தில் ஏலக்காய் கட்டாயம் இடம்பெறுகிறது என்பது இதன் தனிச்சிறப்பு.
இப்படியாக சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்க்கும் ஏலக்காயை விளைவிப்பது ஒரு கலை என்கின்றனர் விவசாய வல்லுநர்கள். மலைப்பிரதேசங்களும் அதிக மழையும் தேவைப்படும் ஏலக்காயை, அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைத்து, பதியன்களை ஜூன், ஜூலை மாதங்களில் மறு நடவு செய்வதுடன், ஓரிரு ஆண்டுகளில் விளைச்சலுக்கு வந்த பழங்களை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்கின்றனர்.
பணப்பயிர் என கருதப்படும் ஏலக்காயில், பச்சை நிற சிறிய ஏலக்காய் வகையானது, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கேரள, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதேபோல, கருநிற பெரிய ஏலக்காய் வகை, இமயமலையை ஒட்டிய சிக்கிம், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களிலும், அருகாமை பூடான் மற்றும் நேபாள நாடுகளிலும் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
1966ம் ஆண்டு முதலே, The Cardamom Board எனும் தனிச்சிறப்பு ஏலக்காய் வாரியமும் நமது நாட்டில் இயங்கி வருகிறது. இந்தியாவில் தோன்றிய ஏலக்காயை அதிகளவில் உற்பத்தி செய்வது அமெரிக்க நாடுகளுள் ஒன்றான Guatemala.ஏல உற்பத்தியில் இரண்டாம் நிலையில் உள்ள இந்தியாவின் 60% ஏல உற்பத்தியைத் தருவது கேரள மாநிலம்.வாசனைப் பொருட்களின் அரசியான ஏலக்காய் உணவிற்கு சுவையாகவும், உடலுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. காரம் மிக்க மிளகு ‘நான் ராஜா...’ என்று பிற மூலிகைகளை பார்த்துப் பாடினாலும், வாசனையும், சுவையும் மிக்க ஏலக்காயை பார்த்து, ‘நீ ராணி, அதிலும் மகாராணி’ எனப் பாடுவதே சரியாகும்.!!
(இயற்கைப் பயணம் நீளும்...)
தொகுப்பு: டாக்டர் சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்



