நன்றி குங்குமம் டாக்டர்
தரையில் அமர்ந்து, தன் பேரக்குழந்தைகளுடன் பேசி, சிரித்து, விளையாடும் ஒரு மூதாட்டியை நினைவு கூறுங்கள். அவர் மெல்ல எழ எத்தணிக்கும் போதுதான் எத்தனை சிரமம்? யாரோ ஒருவர் அவருக்கு கை கொடுக்க வேண்டி இருக்கிறது அல்லது மெல்ல அவரே பிடித்துக்கொண்டு எழ, ஒரு சுவரோ நாற்காலியோ தேவைப்படுகிறது. நாம் இதை வெறும் முதுமையின் அறிகுறியாக பார்க்கிறோம். இது வெறும் முதுமை அல்ல; இது தசை இழப்பினால் வந்த வினை (Muscle loss). தசைகளின் முக்கியத்துவம் இன்று வரை நம்மால் சரிவர உணரப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.
நோயாளிகள் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற விஷயங்களை எல்லாம் மருத்துவரிடம் நன்றாக கேட்கிறார்கள். இவை முக்கியமான கேள்விகள்தான். ஆனால் தசைகளைப் பற்றி ஒருவருமே கேட்பதில்லை. இது எத்தனை பெரிய அறியாமை,எவ்வளவு பெரிய இழப்பு! முதுமையில் ஒரு மனிதனின் ஆரோக்கியம் இருப்பதை தீர்மானிக்க போவதே இந்த தசைகள்தான்.
மருத்துவர்களாகிய நாங்கள் அடிக்கடி கண்கூடாக பார்க்கும் ஒரு விஷயம் இதுதான்: ஒரு முதியவர் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார் அல்லது வழுக்கி விழுந்து அவருக்கு லேசாக அடிபடுகிறது, அல்லது ஒரு சிறிய நோய் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஓரிரு நாட்களில் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்புகிறார். ஆனாலும் அவர் முன்பு போல் இயல்பு நிலைக்குத் திரும்புவதே இல்லை. சோர்வு அதிகப்படியாக இருக்கும். அவரால் சரியாக நடக்கவே முடியாது. நிற்கவே ஒருவரின் ஆதரவு தேவைப்படும்.
குடும்பத்தினர் இந்த நிலைக்கு அவர் நோயைக் குறை கூறுவார்கள். அல்லது, ‘வயதாகி விட்டது தள்ளாமை!’ என்றும் முத்திரை குத்துவார்கள். உண்மை என்னவென்றால், மருத்துவமனை அவருடைய நோயை மட்டுமே குணமாக்கியது. பலவீனப்பட்ட, சோர்வடைந்த அவர் தசைகள் மீளவே இல்லை. இதுவே அவரை இறுதிக் காலத்திற்கு இட்டுச் செல்லப் போகும் ஒரு பேராபத்து.
தசை என்பது உடலை கட்டுக்கோப்பாகக் காட்டுவதற்கு அல்லது ஆண்மையை வெளிப்படுத்துவதற்கு மட்டுமல்ல. அது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. இளையவரோ முதியவரோ, ஆடவரோ, பெண்களோ-தசைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாம் கொடுத்தால், அது கடைசி காலம் வரை நம்மை அமைதிப்படையாய் காத்து நிற்கும்.
தசை பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்களை இப்போது பார்ப்போம். தசை என்பது சர்க்கரையை ரத்தத்திலிருந்து உறிந்து கொள்ளும் ஒரு ஸ்பான்ச் போன்றது. சாப்பிட்ட பிறகு, ரத்தத்தில் ஏறக்கூடிய சர்க்கரையின் அளவை, திடமான தசைகள் மிதமாக ஒரே அளவில் வைக்கின்றன. தசை குறைவாக இருந்தால், சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமாக கூடுகிறது. உள்ளார்ந்து நாம் இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டுமேயானால், நடுத்தர வயதில் ஏற்படும் ‘சர்க்கரை பிரச்சனைகளுக்கு’ காரணம் உணவுப் பழக்கம் மட்டுமல்ல, இழந்த தசைகளும்தான்.
மற்றொரு ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், உயர் இரத்த அழுத்தமோ, இருதய நோயோ அபாய அறிகுறிகளைக் காட்டுவது போல், தசை இழப்பு எந்த முன் எச்சரிக்கையையும் தருவதில்லை. இது பெரும்பாலும் முப்பது வயதிலிருந்தே சத்தமில்லாமல் தொடங்குகிறது. ஐம்பதுகளிலோ அறுபதுகளிலோ தான் இதை லேசாக ஒரு மனிதன் உணர முடியும் -உதாரணமாக ஒரு பாட்டிலின் இறுகிய மூடியைத் திறக்க கஷ்டப்படும்போதோ அல்லது பத்து இருபது படிகளை ஏறும்போது கால்கள் சோர்வடையும் போதோதான் இது தெரியவரும். அதற்குள் கணிசமான அளவு தசைகளை நாம் இழந்திருப்போம். மருத்துவர்கள் இதை ‘சார்கோபீனியா’ (Sarcopenia) என்று அழைக்கிறார்கள். பெயர் முக்கியமல்ல. ஆனால், இக்கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் அனைவரையும் இது அமைதியாக பாதித்து கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம்.
இதற்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனென்றால், அறுவை சிகிச்சை, காய்ச்சல், எலும்பு முறிவு, நோய்த்தொற்று போன்ற கடினமான தருணங்களில் உடல் தப்பிப்பிழைக்க உதவுவது இந்த தசைகள்தான். ஒரே வயதில் உள்ள இருவருக்கு, ஒரே மாதிரியான நோய் தாக்கி, ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்படலாம். ஆனால் வலுவான தசைகள் கொண்டவர் வேகமாக குணமடைந்து விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். இயல்பு வாழ்க்கைக்கு எளிதில் திரும்புவார். வலுவான தசைகள் அற்றவரோ, மாதக்கணக்கில் சிரமப்படக்கூடும். அவருடைய நோய் குணமானாலும், அவர் படுத்த படுக்கையாய் கிடந்து, உயிர் இறுதியில் பிரிவதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.
வீட்டிலேயே செய்து பார்க்கக்கூடிய ஒரு எளிய பரிசோதனை இதோ: தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகளையோ கால்களையோ ஊன்றாமல், யார் உதவியும் இன்றி, உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்து நிற்க முயற்சிக்கவும். இது உங்களுக்கு கடினமாகத் தோன்றினால், அதை ஒரு சிறிய விஷயமாக நினைத்து ஒதுக்கிவிட வேண்டாம்.
உங்கள் தசைகள் நிரந்தர விடுப்பில் சென்று விட்டதற்கான அத்தாட்சி எது. பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இதனை ‘உட்கார்ந்து எழும் சோதனை’ என்று அழைக்கிறார்கள். எந்த ரத்த பரிசோதனையையும் விட ஒரு மனிதனின் நீண்ட ஆயுளை துல்லியமாக கணிக்க க்கூடிய ஒரு சோதனையாக இது விளங்குகின்றது.
நாம் எத்தனை காலம் வாழப் போகிறோம் என்ற கேள்வியை நம்மையே நாம் அதிகம் கேட்டுக் கொள்கிறோம். ஆனால், வாழக்கூடிய அந்த காலம் முழு ஆரோக்கியத்தோடும், தள்ளாமை இன்றியும் அமைய நாம் என்ன முயற்சி செய்கிறோம்? யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் இன்றி, தன்னம்பிக்கையோடு திடமாக நம் முதுமை அமைய வேண்டும் என்ற எண்ணம் இன்றே நம்மில் உதிக்க வேண்டும். தசைகளைப் பேணும் சிற்சில உடற்பயிற்சிகளை இன்றிலிருந்தே கட்டாயம் நாம் தொடங்க வேண்டும். தினமும் தவறாமல் செய்ய வேண்டும். இழப்பின்றி வாழ்நாள் முழுவதும் பேண வேண்டிய முக்கியமான உறுப்பு தசை.
தசை என்பது வெளித்தோற்றத்துக்கான வெறும் பகட்டாகவோ, அழகாகவோ எண்ண வேண்டாம். வயதான காலத்தில் ஒருவர் தன் சொந்தப் பேரக்குழந்தையைத் தோளில் தூக்கி விளையாடுவதற்கும், கீழே விழுந்தால் தானாகவே எழுந்து நிற்பதற்கும், காய்கறி வாங்குவதிலிருந்து துணிகள் மடிப்பது வரை அன்றாட வேலைகளை யார் உதவியும் இன்றி செய்து கொள்வதற்கும் - தசைகளே சிறந்த துணையாகவும் ஊன்றுகோலாகவும் அமைகின்றன.
சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றிற்கெல்லாம் நாம் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை தசைகளுக்கும் கொடுக்க வேண்டிய தருணம் இது. முதுமையில் தள்ளாமை என்பது இயல்பாகவே வரக்கூடிய ஒரு விஷயம் அல்ல. தசைகளின் இழப்பினால் நாமே நமக்கு வரவழைத்துக் கொள்ளும் ஒரு அபாயம். தசைகளைப் பேணுவோம், நூறாண்டுகள்
தன்னம்பிக்கையோடு வாழ்வோம்!
தொகுப்பு: வாழ்நாள் நீட்டிப்பு மருத்துவ நிபுணர் நவீன் ஞானசேகரன்


