நன்றி குங்குமம் தோழி
*காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், நமது மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறனை மேம்படுத்த இது உதவுகிறது.
*50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் தினமும் முறையான காலை உடற்பயிற்சியை செய்வதன் மூலமாக அல்சைமர் நோய்களில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.
*காலை வேளையில் உடற்பயிற்சியோடு சேர்த்து நடை, நடனம், யோகா ஆகிய அனைத்தையும் செய்யலாம். இது நமக்கு தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் மற்றும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கும்.
*காலை நேர உடற்பயிற்சி என்பது நமது ஹார்மோன்களை தூண்டி, நம்மை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
*வேலை பளு காரணமாக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட தினமும் காலை உடற்பயிற்சி செய்யலாம்.
*காலை நேர உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள புத்துணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களான செரட்டோனின், நோர்பினேப்ரைன், எண்டார்ஃபின், டோபமைன் ஆகியவை அதிகரிக்கின்றது. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன் கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது.
*காலை நேர உடற்பயிற்சி என்பது, வாழ்நாளை அதிகரிப்பதோடு, உடல் முதுமையடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தடுக்கிறது. தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது.
*தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து போகும். மேலும், அதிகமான ரத்தம் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது. எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், புதிய நுண்ணிய ரத்த நாளங்கள் உருவாகின்றது.
*ஒரு நாளைக்கு குறைந்தது 10 - 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்யலாம்.
*காலைப் பொழுதே அனைவருக்கும் உடற்பயிற்சி செய்ய மிகவும் சரியான நேரமாகும். காலையில் கவனச் சிதைவு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருக்காது. எனவே உடலுக்கு புத்துணர்ச்சி தரும் காலை நேர உடற்பயிற்சியை தவறாமல் செய்யுங்கள்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.


