Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கஸ்தூரி மஞ்சளின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. தோலில் வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை அகற்றும் என்பதால், தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, கஸ்தூரி மஞ்சள் சிறந்த நிவாரணி. கடைகளில் கிடைக்கும் பல்வேறு கிரீம்களும் கஸ்தூரி மஞ்சள் சேர்க்கப்பட்டவைதான். வெறும் அழகு சாதனப் பொருளாக மட்டுமின்றி, அஜீரணத்துக்கு மருந்தாகவும் மஞ்சள் பயன்படுகிறது.

கஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும். 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடியை, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அடிபட்ட புண்களில் இந்த எண்ணெயைத் தடவிவர, சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு, ஆறாத காயங்கள், பித்தவெடிப்பு, சொறி, சிரங்கைக் குணம் ஆக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படும்.

மிளகு, கடுக்காய் தோல், வேம்பு விதை, கஸ்தூரி மஞ்சள் கலந்து செய்யப்படும் ‘பஞ்சகற்பம்’ என்ற குளியல் பொடியை பயன்படுத்தலாம். சரும பிரச்னை ஏற்படாது. கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாறில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால்,  வீக்கமும் வலியும் குறையும்.

கஸ்தூரி மஞ்சளுடன் பாசிப்பயறு, கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, ரோஜா இதழ், செண்பகப்பூ, வெட்டிவேர், விளா மரத்தின் வேர், சந்தனம் கலந்து, பொடி செய்து, தினமும் தேய்த்துக் குளித்துவந்தால், தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவை நீங்கும். தோல் மென்மை ஆகும். முகப்பருக்கள், வியர்வைக் கட்டிகள் மறையும்.

கஸ்தூரி மஞ்சள் அடிபட்ட வலிகளுக்கு பயன்படுத்துவது போலவே, மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைபடும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

தொகுப்பு: தவநிதி