Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

கொள்ளு (Macrotyloma uniforum) என்பது ஒரு வகை பயறு இனமாகும். தட்டையாக பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்திலும் காணப்படும் ஒரு வகை தானியமாகும். கொங்கு நாடு மற்றும் தெற்கு கர்நாடகா பகுதி உணவு வகைகளில் கொள்ளு பருப்பு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது நமது பழமொழி. ஏழைகளின் மருந்து நோய்களை விரட்டும் பருப்பு என பாரம்பரிய மருத்துவத்தில் புகழ் பெற்றது கொள்ளு பருப்பு. குறைந்த செலவில் கிடைக்கும் இந்த பருப்பு, அதிக ஊட்டச்சத்து கொண்ட ஒரு சூப்பர் உணவு ஆகும் என்கிறார் உணவியல் நிபுணர் சங்கீதா

கொள்ளு பருப்பின் ஊட்டச்சத்து மதிப்பு

ஆற்றல் - 321 kcal.

புரதம் - 22-24 கிராம்

நார்ச்சத்து - 5-6 கிராம்

கொழுப்பு சத்து - 0.5 -1 கிராம்

இரும்புச்சத்து - 6-7 மில்லிகிராம்

குறைந்த கொழுப்பு, அதிக புரதம் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட பருப்பு என்பதே கொள்ளு பருப்பின் சிறப்பு.

தினசரி எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு முறைகள்

ஊற வைத்த கொள்ளு : ஒரு கைப்பிடி அளவு முறைகள் ( கால் கப் முதல் அரை கப்) 30 - 50 கிராம் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் எலுமிச்சை சாறுடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். எடை இழப்புக்கு மிகவும் உதவும். கொள்ளுப் பொடி - சுவையை அதிகரிக்க உங்கள் வழக்கமான ரசத்தில் 2-3 தேக்கரண்டி வறுத்து அரைத்த கொள்ளுப் பொடியைச் சேர்க்கலாம்.

முக்கிய ஆரோக்கிய நன்மைகள்

உடல் எடை குறைப்பிற்கு சிறந்தது - கொள்ளு பருப்பு கலேரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துகிறது.

*உடலில் கொழுப்பு சேர்வதை குறைக்கும்.

*மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.

*நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

*குறைந்த கிளைசமிக் இன்டக்ஸ் கொண்டது.

*ரத்த சர்க்கரை திடீரென உயர்வதை தடுக்கிறது.

*இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

*இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

*கெட்ட கொழுப்பு (எல்டிஎல் கொலஸ்ட்ரால்) அளவை குறைக்கிறது.

*நல்ல கொழுப்பு (எச்டிஎல் கொலஸ்ட்ரால்) அதிகரிக்க உதவுகிறது.

*ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது. மேலும் சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை வெளியேற்ற உதவும். இது Diuretic தன்மை கொண்டது. ரத்தசோகை (அனிமீயா) உள்ளவர்களுக்கு பயனுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நல்லது. ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவுகிறது. எலுமிச்சை சேர்த்து சாப்பிட்டால் இரும்புச்சத்து உறிஞ்சிடுதல் தன்மை அதிகரிக்கும்.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

*ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மை கொண்டது.

*உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.

*அடிக்கடி நோய் வரும் பிரச்னையை குறைக்கிறது.

கொள்ளு பருப்பு பயன்படுத்தும் முறைகள் - கொள்ளு சுண்டல், கொள்ளு ரசம், கொள்ளு சூப், கொள்ளு இட்லி, கொள்ளு தோசை மற்றும் கஞ்சி. கொள்ளை நன்கு அலசி சுத்தம் செய்து பின்னர் ஊற வைத்து முளைக்கட்டி சாப்பிட்டால் அதில் ஊட்டச்சத்து இன்னும் கூடுதலாக கிடைக்கும்.கொள்ளை சமைக்கும் முன் 8-10 மணி நேரம் ஊற வைத்து பின்னர் சமைக்க வேண்டும்.

கொள்ளை உணவில் அளவாகத்தான் எடுக்க வேண்டும். அதிகமாக உண்டால் வாயு பிரச்னை உண்டாகும். சூடான உடலமைப்பு உள்ளவர்கள் மிகவும் குறைந்த அளவே கொள்ளை உட்கொள்ள வேண்டும்.இந்திய வீடுகளில், கொள்ளு பல்துறை வடிவங்களில் பிரகாசிக்கிறது. வரலாற்று ரீதியாக, இது போர் வீரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நீண்ட நேரம் நிலையான ஆற்றலை வழங்கக் கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.குதிரையைப் போன்று வலிமையை வளர்க்கும் ஆற்றல் உடையது என்பதால் இதன் புகழ்பெற்ற திறனுக்காக குதிரை பருப்பு என்ற புனைப் பெயரையும் பெற்றது கொள்ளு.

தொகுப்பு: உணவியல் நிபுணர் சங்கீதா