நன்றி குங்குமம் டாக்டர்
பொதுவாக மண்ணிற்குள் விளையும் உருளைக்கிழங்கைத்தான் நாம் பார்த்திருப்போம். சமையலிலும் பயன்படுத்துகிறோம். ஆனால், மண்ணிற்குள் விளையாமல் கொடிகளில் காய்க்கும் அதிசயக் கிழங்குதான் கொடி உருளைக்கிழங்கு (Air Potato) ஆகும். இது நமது பாரம்பரிய காய்கறிகளில் ஒரு வகையாகும்.
இதன் அறிவியல் பெயர் ‘டையோஸ்கோரியா பல்பிஃபெரா ஆகும். இது வெற்றிலை வள்ளி கிழங்கு, காவளி கிழங்கு, பண்ணுக் கிழங்கு, பெருவள்ளி கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. மலைப்பிரதேசத்தில் விளையும் உருளைக் கிழங்கிற்கு ஈடான சத்துக்கள் இதில் உள்ளன. ஆண்டு முழுவதும் உணவு தேவையை தீர்க்கும் என்பதால், நமது முன்னோர்கள் இந்த கிழங்கை தொடர்ந்து
பயிரிட்டு வந்துள்ளனர்.
உடலுக்கு வலிமை தரும் பாரம்பரிய உணவுகளில் இதுவும் ஒன்று. வேகவைத்து, சுட்டு, அவியல், கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.
மண்ணுக்குள் விளையும் உருளை கிழங்கு பலருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும், வாயுத் தொல்லைக்குப் பயந்து, சிலர் அதைத் தொடுவதும் கிடையாது. அதற்கு மாற்றாக இருப்பது தான் இந்த கொடி உருளை.
மருத்துவ பயன்கள்
சர்க்கரை நோய்: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது. இதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
செரிமானம்: நார்ச்சத்துக் அதிகம் இருப்பதால் செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இந்தக் கிழங்கை உணவிற்குப் பயன்படுத்தியது போக மீதியை அப்படியே வைத்திருந்து விதைக்கிழங்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், மாதவிடாய் பிரச்னை உள்ள பெண்களும், உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களும், காவளிக் கிழங்கை சமைத்து உண்டு வந்தால் சரியாகிவிடும் என்று
கூறப்படுகிறது.
ஆரம்பக் காலங்களில், ‘ஸ்டீராய்டு’ ஹார்மோன்கள் தயாரிப்பதற்கும், குடும்பக் கட்டுப்பாட்டிற்கும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘டையோஸ்ஜெனின் என்ற மாத்திரை தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. நம்முடைய முன்னோர்கள் பசியை அடக்க, இக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
தொகுப்பு: தவநிதி




