நன்றி குங்குமம் டாக்டர்
சிலருக்கு முகத்தில் கன்னங்களில் கருப்புநிற கருந்திட்டுகள் காணப்படும். இதை மங்கு என குறிப்பிடுவார்கள். இவற்றைப்போக்க சில கை வைத்தியங்களை தெரிந்துகொள்வோம்.
ஜாதிக்காய்ப் பொடி, சந்தனப் பொடி, வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து விழுதாக்கிக் கொள்ளவேண்டும். அரைத்த பற்றை முகத்தில் கருப்புத் திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவி அரைமணி நேரம் வைத்திருந்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள மங்கு (கருந்திட்டு) விரைவில் மறைந்துவிடும்.
ஒரு வாணலியில் 100 கிராம் நல்லெண்ணெயை விட்டு மிதமான சூட்டில் நன்கு காய்ச்சவும். பின்னர் அதில் 20 கிராம் குங்கிலியத்தைப் பொடி செய்து கலந்து காய்ச்சவும். குங்கிலியம் நன்கு கரைந்ததும், இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பின்னர், 100 மில்லி லிட்டர் தண்ணீர் எடுத்து அதில் விட்டு நன்கு கலக்கவும். சிறிது நேரத்தில் இரண்டும் ஒன்றாக கலந்து ஒரு ஜெல் போன்று வந்துவிடும். அதனை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு இரவு தூங்குவதற்கு முன்பு கருந்திட்டு உள்ள இடத்தில் தடவி அப்படியே விட்டுவிடுங்கள். காலை எழுந்தவுடன், கழுவி விடவும் விரைவில் கருந்திட்டு மறைந்துவிடும்.
பொடுதலைக் கீரையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்துக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு ஒரு தேக்கரண்டி கலந்து முகத்தில் கருந்திட்டுகள் உள்ள இடத்தில் தடவி பதினைந்து நிமிடம் வைத்திருந்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர மங்கு மறைந்துவிடும்.
க்ளென்சிங் மற்றும் சிறந்த பிளீச்சிங் ஏஜன்டாகவும் உருளைக்கிழங்கு செயல்படும். உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து துருவிக்கொள்ள வேண்டும். பின்னர், துருவிய உருளைக்கிழங்கை பிழிந்து அதிலிருந்து சாறெடுத்து வைத்துக்கொண்டு சிறிதளவு காட்டனை எடுத்து அதில் நனைத்து சருமத்தில், மங்கு உள்ள பகுதிகளில் ஒத்தி ஆற விடுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவிவிடவேண்டும். இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன்களைப் பெறலாம். விரைவில் மங்கு மறைந்து காணாமல் போகும்.
தொகுப்பு: - ரிஷி


