Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

லோ பிரஷர் ஆபாத்தானதா...?

நன்றி குங்குமம் டாக்டர்

பலரும் சொல்லக் கேட்பதுண்டு. “எனக்கு லோ பிரஷர் இருக்கிறது” என்பார்கள்.ம்ம்ம்ம்...ஹை பிரஷர் என்பது நோய் என்று பலருக்கும் தெரியும். ஆனால், லோ பிரஷர் ஒரு நோயா? அல்லது அது ஒரு உடல் இயங்குவியல் சார்ந்த நிலையா?ஹை பிரஷர் என்றால் உயர் ரத்த அழுத்தம் என்று பொருள். நமது இரத்தமானது அது உள்ளோடும் ரத்த நாளங்களின் மீது காட்டும் அழுத்தத்தை நாம் ரத்த அழுத்தமானி (SPHYGMOMANOMETER) கொண்டு அளக்கிறோம். இதில் இரண்டு குறியீடுகள் கிடைக்கும்.120/80 mm Hg என்று எழுதப்படுவதை பார்த்திருப்பீர்கள். இதில் பாருக்கு மேலே உள்ள 120 என்பது சிஸ்டோலிக் பிரஷர். அதாவது இதயம் துடிக்கும்போது அது சுருங்கும் போது, ரத்த நாளங்களின் மீது ரத்தம் கொடுக்கும் அழுத்தம்.

பாருக்குக் கீழே உள்ள 80 என்பது டயாஸ்டோலிக் பிரஷர். அதாவது இதயம் விரியும்போது (ரிலாக்ஸாக) இருக்கும்போது ரத்த நாளங்களின் மீது ரத்தம் கொடுக்கும் அழுத்தம்.பொதுவாக பாருக்கு மேலே உள்ள சிஸ்டோலிக் 120 க்குள்ளும் டயாஸ்டாலிக் 80 க்குள்ளும் இருப்பது “நார்மல்“. இப்படி இருந்தால் இதயத்துக்கு சிறுநீரகங்களுக்கு மூளைக்கு கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது. சிஸ்டாலிக் 120 முதல் 129 வரை இருப்பதும் டயாஸ்டாலிக் 80 க்குள் இருந்தால் இது சற்று அதிகமான ரத்த அழுத்தம் (ELEVATED BLOOD PRESSURE). வாழ்வியல் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அர்த்தம். நீரிழிவில் ப்ரீ டயாபடிஸ் என்கிறோமே அது போல, 130-139 சிஸ்டாலிக் 80-89 டயாஸ்டாலிக் இருப்பது முதல் நிலை உயர் ரத்த அழுத்த நோயாகும். வாழ்வியல் மாற்றங்களுடன் மருத்துவ சிகிச்சையும் எடுக்க வேண்டும்.

140+ சிஸ்டாலிக் 90+ டயாஸ்டாலிக் இருந்தால் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம். வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த ரத்த அழுத்தம் சீராக்கும் மாத்திரைகள் தேவைப்படும்.180+ சிஸ்டாலிக் 120+ டயாஸ்டோலிக் என்பது உயர் ரத்த அழுத்தம் சார்ந்த நெருக்கடிநிலை உடனடியாக ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் படி மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும்.இப்படியாக ஹைப்பர் டென்சன் அதாவது உயர் ரத்த அழுத்தம் இருப்பது தான் நோய் நிலையாகும். இது நமது உடல் மற்றும் மனம் சார்ந்த கோளாறுகளால் ஏற்படுகிறது.

சரியான உணவு முறையில் இல்லாதிருத்தல் அதிக மாவுச்சத்து, அதிக உப்பு சரியான தூக்கமின்மை, மரபணுக் காரணிகள், மன நலம் சார்ந்த பிரச்னைகள், உடல் உழைப்பு இல்லாதிருத்தல், போதை வஸ்து நுகர்வு, உடல் பருமன் போன்ற பல காரணங்கள் இதற்கு உண்டு.ஹைப்பர் டென்சன் இருப்பவர்கள் தங்களது ரத்த அழுத்தத்தை சரியான அளவு அதாவது சிஸ்டாலிக் 130 க்குள் டயாஸ்டாலாக் 80 க்குள் பராமரிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான ரத்த அழுத்தம் நாளடைவில் ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இதய ரத்த நாள அடைப்பு, மூளை ரத்த நாள அடைப்பு, சிறுநீரக அழற்சி, விழிப்படல அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சரி விஷயத்துக்கு வருவோம்..

ஹைப்போ டென்சன் அதாவது லோ பிரஷர் என்பது நோயா?

பலருக்கும் குறிப்பாக பெண்களுக்கு பிரஷர் எடுத்துப் பார்த்தால் 90/60 mm HG என்று வரும். ஆனால் வேறெந்த அறிகுறியும் இராது. இது இவர்களைப் பொருத்தவரை நோயன்று. மற்றபடி ஒரு உடல் இயங்குவியல் சார்ந்த நார்மல் நிலை மட்டுமே. இப்படியாக சிஸ்டாலிக் 90 க்கும் குறைவாகவும் டயாஸ்டாலிக் 60 க்கும் குறைவாகவும் பதிவாவதை “லோ பிரஷர்” என்கிறோம்.

ஹைப்போடென்சனில் பல வகைகள் உண்டு

1. ஆர்த்தோ ஸ்டாட்டிக் ஹைப்போடென்சன் அதாவது படுத்திருக்கும் ஒருவர் எழும் போதோ, உட்காந்திருக்கும் ஒருவர் எழும் போதோ, ஒரு இருப்பில் இருந்து மற்றொரு இருப்புக்கு மாறும் போதோ ரத்த அழுத்தம் குறையும். இதனால் லேசான கிறுகிறுப்பு, தலை சுற்றல், கீழே விழுதல் வரை நிகழலாம். இதற்கான காரணங்கள் நீர் சரியாக அருந்தாமல் நீர் குறைபாடு (DEHYDRATION) நீண்ட காலம் படுக்கையில் படுத்தே இருப்பது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும், முதியவர்களுக்கு ஏற்படும்,சில வகை மருந்துகள் சாப்பிடும் போது ஏற்படும்.

2. உணவுக்குப் பின்பான லோ பிரஷர் (POST PRANDIAL HYPOTENSION)

குறிப்பாக முதியோர்களுக்கு, உணவு சாப்பிட்ட பிறகு அவர்களது ரத்த ஓட்டத்தில் பெரும்பகுதி ஜீரண மண்டலத்தில் இருக்கும் என்பதால் ரத்த நாளங்களில் ரத்த அழுத்தம் குறையும். இதனால் உணவுக்குப் பின்பு மந்த நிலை, மயக்க நிலை உண்டாகும்.

3. நரம்பு மண்டலத்தால் உண்டாகும் தாழ் ரத்த அழுத்த நிலை (NEURALLY MEDIATED HYPOTENSION) இது நீண்ட நேரம் நிற்கும் போது திடீரென ரத்த அழுத்தம் குறைந்து அதனால் மயக்கம் ஏற்படுவது. இது இளையோரிடத்திலும் சிறார் சிறுமியரிடத்திலும் ஏற்படும்.

4. ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்கு மண்டலங்கள் தேய்மானம் சார்ந்த குறை ரத்த அழுத்தம் (MULTI SYSTEM ATROPHY WITH ORTHOSTATIC HYPOTENSION) இவர்களுக்கு அமர்ந்திருப்பதைவிட படுத்திருக்கும் போது பிரஷர் மிக அதிகமாக இருக்கும். எழுந்தால் பிரஷர் குறையும்.

இவையன்றி, காயங்கள் ஏற்பட்டு அதிகமான உதிரப்போக்கு ஏற்படும் போதும், தீவிரமான தொற்று நிலைகளிலும், ஏதேனும் தீவிர ஒவ்வாமை நிலையிலும் உடனடியாக ரத்த அழுத்தம் சடாரெனக் குறையும். இது ஆபத்தான லோ பிரஷராகும். மற்றபடி எப்போதும் ஒருவர் லோ பிரஷருடனே இருப்பதில்லை. மாறாக சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவருக்கு இருக்கும் பிற நோய்கள், அவர் பிற நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், கர்ப்பிணியாக இருத்தல் என்று பல நிலைகளில் லோ பிரஷர் உண்டாகலாம்.

லோ பிரஷர் வந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்

*தலைசுற்றும்

*தலை மந்தமாக இருப்பது போலத் தோன்றும்.

*மயக்கம் ஏற்படும்.

*பார்வை மங்கலாகலாம்

*சோர்வு

*பலவீனம்

*குமட்டல்

*பிதற்றல் நிலை

*எதிலும் கூர்ந்து நோக்க இயலாமை

*ஆகியன அறிகுறிகளாக இருக்கலாம்.

லோ பிரஷர் நிலையை சரி செய்ய என்ன செய்யலாம்

*தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். இதன் மூலம் ரத்தத்தின் அளவை உயர்த்தி அதன் மூலம் ரத்த அழுத்தத்தை உயர்த்த முடியும்.

*இருப்பு நிலை சார்ந்த லோ பிரஷர் இருப்பவர்கள், உட்கார்ந்தோ படுத்ததில் இருந்தோ எழும் போது மெதுவாக எழ வேண்டும். படுக்கையில் இருந்து எழுந்து சில நிமிடங்கள்

உட்கார்ந்து பிறகு எழ வேண்டும்.

*மிக அதிகமான அளவு மாவுச்சத்து அடங்கிய உணவை சாப்பிடுவது உணவுக்குப் பின்பான லோ பிரஷரை வரவழைக்கிறது. எனவே புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து நிரம்பிய மாவுச்சத்து குறைவான உணவு உண்பது சிறந்தது.

*மது புகை உள்ளிட்ட போதை வஸ்துக்களில் இருந்து ஒதுங்கி இருப்பது என்றும் நலம்

*ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசையாமல் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

*தொடர்ந்து அறிகுறிகளுடன் லோ பிரஷர் இருப்பவர்கள். உணவில் உப்பை சற்று கூட்டிக் கொள்ளவும் அவ்வப்போது உப்பிட்ட லெமன் சாறு, உப்பிட்ட நெல்லிக்காய் சாறு ஆகியவற்றை அருந்தலாம்.

*கால்களுக்கு அழுத்தம் தரும் ஸ்டாக்கிங்க்ஸ் அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் ரத்த அழுத்தத்தை சற்று கூட்டலாம். மூளைக்கு நிறைய ரத்தம் கிடைக்குமாறு செய்யலாம்.

*தங்களுக்கு லோ பிரஷரை உருவாக்குகிறது என்று சந்தேகிக்கப்படும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின் பேரில் குறைக்க வேண்டும்.

லோ பிரஷர் எதனால் ஏற்படுகிறது

*ரத்தப் போக்கு காரணமா?

*நீரிழப்பு காரணமா?

*முதுமையா?

*ஒவ்வாமையா? பல நேரங்களில் உணவு சார்ந்த ஒவ்வாமை நிகழ்வுகளில் பிரஷர் குறைவதைப் பார்க்கிறோம்.

*தொற்று நிலையா? என்பதைப் பார்த்து அதைச் சரிசெய்ய வேண்டும்.

*மீண்டும் கூறுகிறேன்

*ஹை பிரஷர் என்பது நோய் நிலை

*லோ பிரஷர் என்பது நோய் அன்று அது பல்வேறு காரணங்களால் தோன்றும் உடல் இயங்குவியல் சார்ந்த நிலை.

*ஹை பிரஷர் கிட்டத்தட்ட நிரந்தரமானது. எனவே தொடர் சிகிச்சை மூலம் அதைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

*லோ பிரஷர் என்பது அவ்வப்போது எட்டிப்பார்க்கும் தற்காலிக நிலை. அது எட்டிப் பார்க்காத வகையில் நாம் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு சரியான சிகிச்சை எடுப்போம்.

தொகுப்பு: பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா